விளையாட்டு மனதுக்கும் உடலுக்கும் உறுதி அளிக்கக்கூடிய ஒன்றாகும். சாதித்த பல விளையாட்டு வீரர்களான சச்சின், டிராவிட் போன்றவர்களின் வெற்றிக்கான காரணம் திறமை மட்டுமல்ல. அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆன்மிக ரீதியாக ஒரு வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கோட்பாடுகளைக் கடைப்பிடித்ததால்தான்.
ஆம், ஒரு லட்சிய மனிதன் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஶ்ரீ அன்னையின் பொன்மொழிகள்.
1. நல்ல மனநிலை உடையவன், விஷயங்கள் அவனுக்கு எதிராகப் போகும்போதும், தனக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்படும்போதும் கோபம் கொள்ளமாட்டான்.
2. செய்வதைத் திருந்தச் செய்வான். தோல்வி நிச்சயம் என்று தெரிந்தபோதும் தான் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டேயிருப்பான். நேர்மறை எண்ணங்களால் நேர்மையாகச் செயல்புரிவான்.
3. தனது முயற்சிகள் பயனளிக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தாலும் சோர்ந்து போகாமல் முயற்சித்துக்கொண்டே இருப்பான்.
4. தவிர்க்க முடியாத இடர்களையும் துயரங்களையும் சலனமின்றி கடந்து செல்வான்.எத்தனைத் தோல்விகள் ஏற்பட்டாலும் இறுதி வெற்றிக்காக ஓடிக்கொண்டே இருப்பான்.
5. வெற்றியைத் தலைக்கு எடுத்துச் செல்லமாட்டான். தன் தோழர்களைவிடவும், சக வீரர்களைவிடவும் உயர்ந்தவன் என்று கர்வம் கொள்ளமாட்டான். வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலைத் தவறமாட்டான்.
6. பிறரிடமுள்ள சிறப்புகளைப் பாராட்டுவான். குறைகளைப் பெரிதாக்க மாட்டான். இன்னொருவன் வெற்றி பெறுவதற்கு உதவ எப்போதும் தயாராக இருப்பான்.
7. பிறர் பிழைகளைக் கண்டு நகைக்க மாட்டான். எதிராளியின் தோல்வி கண்டு ஆரவாரம் செய்ய மாட்டான். அவர்களைப் பகைவரை நடத்துவது போல் அல்லாமல் நண்பனைப் போலவே நடத்துவான்.
8. பிறருக்கு மரியாதை தருவான். தன்னைப் பிறர் எவ்வாறு நடத்த வேண்டும் என்று நினைக்கின்றானோ அவனும் பிறரை அவ்வாறே நடத்துவான்.
9. தன் புகழுக்காக அல்லாமல் குழுவின் நன்மைக்காக உழைப்பான். குழுவுக்காக என்ன செய்ய வெண்டுமோ அவை அனைத்தையும் சுயநலமின்றி சிறப்பாகச் செய்வான். வெற்றியடைந்தபோதும் தன்னால்தான் நடந்தது என்று கூறாமல் பண்புடன் நடந்துக்கொள்வான்.
10. தான் செய்யப்போவதை தம்பட்டம் அடிக்கமாட்டான். தான் செய்து முடித்ததைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொள்ளமாட்டான். பெருந்தன்மையுடைவனாய் இருப்பான். அதே நேரத்தில் தன் கருத்துகளை ஒளிவு மறைவின்றி தெள்ளத் தெளிவாகக் கூறுவதற்கு அஞ்சமாட்டான்.
11. கடுமையாகப் போட்டியிடுவான். ஆனால், விதிகளின்படி நட்பு முறையிலேயே போட்டியிடுவான. எதிராளி காயப்பட்டுவிட்டால் உதவுவான்.
12. எப்போதும் கட்டுப்பாடு உடையவனாகவும் நேர்மை உள்ளவனாகவும் இருப்பான். உணவு கொள்ளும்போது சுவைத்து மகிழ்ந்து உண்பான். உறங்கவேண்டிய நேரத்தில் உறங்குவதை விரும்புவான்.
வெற்றி என்பது உங்கள் உறுதியையும் நேர்மையையும் பொறுத்தே உள்ளது. இனியும் சாதாரண மனிதர்களைப் போல அல்லாமல் ஒரு புதிய உயரிய லட்சியத்தை உடைய மனிதனின் வாழ்க்கையைப் போல வாழ விரும்புங்கள்.