Monday, November 13, 2017

#உண்மைகள்_உபதேசமாய்!!!

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல,
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).
16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது!
(எல்லாம் காலத்தின் கோலம்!)
18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
19. உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.
(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).
20. இறுகினால் களி. இளகினால் கூழ்.
21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
24. விசாரம் முற்றினால் வியாதி.
(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)
26. காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).
31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.
32. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)
33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?
41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?
42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?
43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?
45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது..

Wednesday, November 8, 2017

"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"

டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....
ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்....
பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்"
"எப்படி?"
"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...
அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...
உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...
நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...
அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...
ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...
நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....
ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....
மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...
நீதி:
"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"

படித்ததில் பிடித்தது! வெற்றி

✌ *4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
✌ *8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
✌ *12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
✌ *18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
✌ *22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
✌ *25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
✌ *30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
✌ *35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
✌ *45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
✌ *50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
✌ *55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
✌ *60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
✌ *65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
✌ *70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
✌ *75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
✌ *80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !
*Be defeated to become victoriuos.*
தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?
✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*
✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*
✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*
✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*
✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*
✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*
✌ *ஆகவே தோற்று போ,*
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..
......

Monday, November 6, 2017

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் இவ்வார்த்தை பகவத்கீதையில் அர்ஜீனனுக்கு பகாவான் கண்ணன் சொன்னது.

எவ்வளவு அழகான உணர்வுபூர்வமான வார்த்தை.இதன் தத்துவத்தை புரிந்து கொண்டால் வாழ்க்கை தத்துவமே விளங்கி விடும்.இன்பம் துன்பம் அனைத்தும் சமமாக தெரியும்.

இன்று நாம் சந்தோசம் என்று நினைக்கும் ஒரு விசயம் வருத்தமான செய்தி வந்ததும் சந்தோசததை மறந்து கவலை பட ஆரம்பித்து விடுகிறோம்.அதே போல் வருத்தமான நேரத்தில் சந்தோச செய்தி வந்தவுடன் வருத்தத்தை மறந்து சந்தோச பட ஆரம்பித்து விடுகிறோம்.

மகிழ்ச்சியோ வருத்தமோ எதுவும் நிரந்தரம் இல்லை எல்லாம் கடந்து போகும்.அதனால் தான் இந்து சமுதாயத்தில் ஒருவர் இறந்து விட்டால் காரியம் முடிந்ததும் சம்பந்தி விருந்து வைத்து இறந்தவரின் குடும்பத்தை சந்தோசபாதைக்கு திசை திருப்புகின்றனர்.

இன்றைய இளைஞர்கள் இத்தத்துவத்தை மிக அழகாக புரிந்து உள்ளனர் அதனால் தான் ஓரு பெண் அவனது காதலை நிராகரித்தால் உடனே அடுத்த பெண்ணை தேடி  போகின்றனர் எவ்வித வருத்தமும் இல்லாமல்.

இன்று நாம் பெரிய பிரச்சினை என்று நினைக்கும் ஒரு விசயம் அதை காட்டிலும் பெரிய பிரச்சினை வந்ததும் பழையதை மறந்து புது பிரச்சினை பெரியது என்று  பழைய விசயங்களை மறந்து விடுகிறோம்.இது தான் வாழ்க்கை அனைத்தும் கடந்து போகும்

இறந்தவர்களுடன் சுடுகாட்டுக்கு செல்லும் பொழுது நாமும் ஒரு நாள் இங்கே வரவேண்டியவர்கள் தான் என நினைத்தாலே சண்டை சச்சரவு இல்லாமல் வாழலாம்.

இதுவும் கடந்து போகும்.

இதுவும் கடந்து போகும்! - உழைத்தேன்... உயர்ந்தேன்..!

தொழில் செய்ய களம் இறங்கிவிட்டாலே வரிசைகட்டி பிரச்னைகள் தொடுத்து நிற்கும். அதிலும் எந்தப் பின்புலமுமே இல்லாதவர்களுக்கு சொல்ல தேவையில்லை. அத்தகையதொரு நிலையிலிருந்து வந்து, தன் உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து வளர்ந்திருக்கிறார் சாத்தூர் க.பொன்ராஜ். 

சுவர்களில் குழாய்கள் பதிக்க உதவும் கிளாம்ப் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கும் பொன்ராஜை சந்தித்தோம். பிஸியான வேலைகளுக்கு இடையே வரவேற்றவர், தான் புதிதாக வாங்கவிருக்கும் மாருதி சுஸூகி (Maruthi Suzuki) எர்டிகா காருக்கு முகவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னபடி நம்முடன் பேச ஆரம்பித்தார் பொன்ராஜ்,    
                                                  
“எனக்கு சொந்த ஊர் சாத்தூர். என்னுடன் பிறந்தவர்கள் மூன்று அண்ணன், ஒரு அக்கா. நான் கடைசி பையன். என் ஒன்றரை வயதிலே அப்பா கதிரேசன் இறந்துவிட்டார். அதன்பிறகு எங்கள் அம்மா சுப்புதாய் எங்களை எல்லாம் வளர்த்தார். 

என் பள்ளிக்கூட நாட்களில் நன்றாகப் படித்துக்கொண்டு இருந்தேன்.  எட்டாம் வகுப்பு வரை படித்தேன். மேலும் படிக்க குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை. பின் விடுமுறையிலிருந்து நிப் கம்பெனிக்கு வேலைக்கு சென்றேன். விடுமுறை முடிந்த கையோடு ஆசிரியர்கள் வந்து அழைத்தனர். ஆனால், வறுமை காரணமாக என் அண்ணன்கள், ‘விடு, டூடோரியல் எழுதிக்கிடலாம்’ என்று சொல்லிவிட்டனர்.

நாட்கள் சென்றன. சைக்கிள் கடையில் சில நாட்கள், கட்டுமானத் தொழிலில் சில நாட்கள், கேரளாவில் வைக்கத்தில் உள்ள ஒரு  ஹோட்டலில் சில நாட்கள் என அடுத்துவந்த காலம் பல்வேறு  வேலை களில் கழிந்தது. எனக்குக் கிடைத்த ஊதியத்தின் சிறு தொகையை வீட்டுச் செலவுக்கு அம்மாவிடம் கொடுத்ததுபோக, மீதிப் பணத்தை ஏலச் சீட்டுக்கு கட்டிவிடுவேன். இவ்வாறு சிறிது, சிறிதாக பணத்தை சேமித்து வைத்தேன்.

2003-ல் ஏலச்சீட்டு எடுத்து என் நண்பர் சீனிவாசன் உதவியுடன் ரூ.6,900 செலவில் கிளாம்ப் மெஷினை சொந்தமாக வாங்கினேன். இரண்டு ஆண்டு காலம் இரவு, பகல் பார்க்காமல் உழைத்தேன். அதில் கிடைத்த சிறிய அளவிலான லாபத்தை தேனீயை போன்று சேகரிப்பேன். பின் 2005-ல் ஆறு மெஷின்களை வாங்கினேன். 

அந்த சமயத்தில், இரண்டு பேர் எனக்கு நல்லது செய்வதாக சொல்லி, என் தொழிலில் சிறிது முதலீடு செய்துவிட்டு, என்னுடன் இணைந்துக் கொண்டனர். நல்ல லாபம் கிடைத்ததைப் பார்த்த அவர்கள், ‘உனக்கு மெஷினுக்கான முழு தொகையையும் தந்துவிடுகிறோம். எங்களிடம் பணி ஆளாக மட்டும் இருந்துகொள்’ என்று கூறினர். நான் ‘முடியாது’ என்றேன். ஆனால், அப்போது நான் 18 வயது பையன் என்பதால், என்னை எளிதாக ஏமாற்றிவிட்டார்கள்’’ என்று கூறியவர், புது காருக்கான புக்கிங் புத்தகத்தில் கையெழுத்து போட்டு, முகவரை அனுப்பி விட்டு,  தொடர்ந்து பேசினார். 



‘‘சொந்தத் தொழில் கைதவறிப் போனதால், வேறு வழியின்றி ஓராண்டு காலத்துக்கு கிளாம்பினை சாத்தூரிலிருந்து கேரளாவுக்குக்  கொண்டு செல்லும் முகவர் வேலை செய்தேன். மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அந்த வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில், சாத்தூரில் கிளாம்பினை வாங்கி, இரவு 12.45 மணிக்கு  கொல்லம் பாசஞ்சர் ரயிலில் ஏறி, அதிகாலை கேரளாவில் உள்ள பரவூரில் இறங்கி, ஆட்டோவில் பயணம் செய்து, உரியவரிடம் கொண்டு சேர்ப்பேன். உடனே அடுத்த நாளுக்கான ஆர்டர் எடுத்துவிட்டு, பரவூரில் ரயில் ஏறி கொல்லம் சென்று, அங்கிருந்து புனலூர் ரயில் நிலையம் வழியாக சிவகாசி வழியாக மதுரை செல்லும் ரயிலினைப் பிடித்து சாத்தூர் வந்துவிடுவேன். மீண்டும் அன்றிரவே கிளாம்பினை எடுத்துக் கொண்டு, கேரளா செல்லும் ரயிலில் ஏறிவிடுவேன். இப்படி  தொடர்ந்து வேலை இருக்கும். சிறிது நேரம்கூட தூங்க முடியாது’’ என்று கூறியவருக்கு வந்த போனை அழுத்தி மலையாளத்தில் பேசிவிட்டு நம்மிடம் தொடர்ந்தார். 

‘‘பிறகு 2006-ல் நாமே சொந்தமாக செய்தால் என்ன? என்று தோன்றியது. ஹரிபாலகிருஷ்ணன் என்பவரிடம் மூன்று மெஷின்களை ரூ.2,000 அட்வான்ஸ் செலுத்தி, மாதம் ரூ.200 வாடகைக்கு வாங்கினேன். அந்த சமயத்தில் என்னை வளர விடாமல் தடுக்க பல இடையூறுகள் வந்தன. எனினும் உழைத்துக்கொண்டே இருந்தேன். இரவு, பகல் பார்க்காமல் உழைத்தால் மாதம் ரூ.8,000 வருமானம் வரும். அதில் ரூம் வாடகை ரூ.350, மின் கட்டணம்  ரூ.250 என பல வழிகளில் செலவாகும். அந்த சமயத்தில் வங்கியில் கடன் கேட்டேன். நல்ல பின்புலம் இல்லாத காரணத்தால் தவிர்த்தனர். 

‘‘அதன்பிறகு விற்பனை முறையில் சிறிது மாற்றத்தை கொண்டுவந்தேன். நானே நேரடி யாக கடைகளுக்குப் போய் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. சிறிது, சிறிதாக பணம் சேமித்து படிப்படியாக மெஷின்களை வாங்க ஆரம்பித்து வேலைக்கு ஆட்களை அமர்த்தினேன். இன்று வங்கிகள் என்னைத் தேடி வந்து கடன் கொடுக்கின்றன. மின்சாரத்தில் இயங்கும் ஒரு மெஷின் உட்பட 65 மெஷின்கள் உள்ளன. என் தொழிற்சாலையில் 25 ஆண்கள், 30 பெண்கள், 22 வெளி மாநிலத்தவர்கள பணியாற்றுகிறார்கள். அதில் மாற்றுத் திறனாளிகளும் அடங்கும்’’ என கூறியதைத் தொடர்ந்து, ஒரு மணிச் சத்தம் கேட்க, அவரது தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட சென்றனர். 

‘‘எனது தொழிற்சாலையில் தயாரிக்கக்கூடிய கிளாம்புகள் கேரளா, ஆந்திரா, சென்னை, பெங்களுரு என செல்கிறது. நாம் தொழிலில் உயர வேண்டுமெனில், யார் புகழ்ந்தாலும், திட்டினாலும் செவி சாய்க்கக் கூடாது’’ என்று தொழிலில் வளர உதவும் மந்திர சொல்லுடன் முடித்தார் பொன்ராஜ்.

‘‘அப்பா சாப்பிட வாங்க’’ என்ற குரலுடன் மகன் விஸ்வாதன், தனது அக்கா வினுஜா மற்றும் தாய் பிரியாவுடன் அழைக்க, நாம் விடை கொடுத்துவிட்டுப் புறப்பட்டோம்.

இதுவும் கடந்து போகும்..!!!

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள். அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.

வாழ்க வளமுடன்...