இசைஞானி இளையராஜா .பற்றிய சில குறிப்புகள்
1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.
2. பிறந்த தேதி : 2.6.1943
3. தந்தை : டேனியல் ராமசாமி
4. தாய் : சின்னத்தாய்
5. சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
6. கல்வி : எட்டாம் வகுப்பு
7. மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் )
8. குழந்தைகள் : கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி
9. சகோதரர்கள் : பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்)
10. இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். அவருக்கு 25
ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது
11. 1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால்
அம்மா சின்னத்தாய், இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போ, இடையிடையே
ஒரு பாடலை அவன் பாடினால் உனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார்.
“என் அன்னையின் திருவாக்கில்தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று பொன்
மலையிலும், திருவெரும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் என் பாட்டுக்கு அவ்வளவு பெரிய
வரவேற்பு கிடைத்ததாக இளையராஜா அடிக்கடி நினைவு கூறுவார்.
12. ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில்
தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும்,
பயணம் செய்து வாசித்துப்பாடி மிக இளம் வயதிலேயே லட்சோப லட்சம் மக்களை சந்தித்து
இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர்.
13. கம்யூனிஸ்ட் கட்சிப் பிராச்சார பாடகராக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இளையராஜா
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இன்றும்
கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவர்களது பாடல்கள் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு உதவியாய்
இருந்ததை அன்போடு சொல்லிக் கொண்டிருக்கிரார்கள்.
14. ஆரம்ப காலங்களில் இளையராஜா பெண்குரலில் மட்டுமே பாடி வந்திருக்கிறார்.
15. வானுயுர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு
பாடுகின்றேன் என்று சொத்து பத்துக்களை நாடகம் போட்டு இழந்திருந்தாலும் லட்சியத்தை இழக்காத
அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் ஒரு தவமாக பரிணமித்திருக்கிறது
என்று கூறியிருக்கிறார் இளையராஜா.
16. பாட்டு கேட்பதற்காக வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு இளையராஜா தன் சகோதரர்கள்
ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரோடு இசையமைப்பாளராக வேண்டும் என்று சென்னைக்கு
ரயில் ஏறினார்.
17. மேற்கத்திய இசைக்கு இளையராஜாவின் குருநாதர் மாஸ்டர் தன்ராஜ்
18. வருமானம் குறைவாக இருந்த இளையராஜாவிடம் பணமே வாங்காமல் இசையின் அடிப்படை
நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார் தன்ராஜ் மாஸ்டர்.
19. பியானோ கற்று கொள்வதற்காக சென்ற இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து அதைக்
கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்மாக எல்லாவற்றையும் கற்றுக்
கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர்.
20. வாரத்தின் இரண்டுநாள் இரண்டு மணிநேரம் பயிற்சி பெற்று வந்த இளையராஜா தினமும்
அங்கேயே பயிற்சி பெறலானார்.
21. ஹார்மோனியம், கிட்டார், பியானோ, கீபோர்ட், புல்லாங்குழல் என்று பல்வேறு இசைக்கருவிகளை
வாசிப்பதில் தேர்ந்தவர்.
22 .க்ளாசிக்கல் கிட்டார் இசையில் லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் 8வது
கிரேட் வரை முடித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றவர்.
23. திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார். அதாவது
1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல
இடங்களுக்கு சென்று சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து
கொண்டார்.
24. சகோதரர்கள் மூவரும் இணைந்து ”பாவலர் பிரதர்ஸ்” என்ற இசைக்குழுவும் நடத்தி
வந்துள்ளார்கள்.
25. இசையமைப்பதற்கு இசையை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த
ஆம்ப்ளிஃபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசை பயின்றார் இளையராஜா. ஆனால்
அந்த ஆம்ப்ளிஃபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை
இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார்.
26. ஆரம்ப காலங்களில் தான் பணியாற்றும் இசையமைப்பாளர் தயாரிப்பாளருடனும்,
இயக்குனருடனும் உட்கார்ந்து மெட்டு அமைக்கும்போது மெட்டுக்களை நோட்ஸ் எடுக்கும் கம்போசிங்
அசிஸ்டென்ட்டாக இளையராஜா பணியாற்றினார்.
27. 1970 களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக இசையமைப்பாளர் ”சலீல் சௌத்ரி”யிடம் பணியில்
சேர்ந்தார்.
28. சலீல் சௌத்ரிக்கு பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின்
உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார்.
29.. முதல் படம் “அன்னக்கிளி”
தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர்
பஞ்சு அருணாச்சலத்தால் 1976 ல் அறிமுகம் செய்யப்பட்டார்.
30. அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது சற்றே புருவம் உயர்த்திய அனைவருக்கும்
பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்துக் காட்டு
எனக்கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கும் இசையமைத்துத் தனது
திறமையை நிரூபித்தார் இளையராஜா.
31. இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவினை என்ன பெயரில்
அறிமுகம் செய்யலாம் எனக்கேட்க ”பாவலர் பிரதர்ஸ்” என்றார் இசைஞானி.. இது சற்று பழையதாய்
உள்ளது என்று யோசித்த இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே ”இளையராஜா”.
32. சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது.ஆனால் சினிமாவில்
சேருவதற்கு முன் டேனியல் ராசைய்யா என்றே அழைக்கப்பட்டார்.
33. கதை கவிதை கட்டுரை எழுதுவதும் , பென்சில் ட்ராயிங் வரைவதும், தான் எடுத்த
புகைப்படங்களை ப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுவதும் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.
34. சிபாரிசு சுத்தமாக பிடிக்காது.ஆனால் ஒரே முறை சிபாரிசு கருதி நடிகர் சங்கிலிமுருகனுக்கு
கால்ஷீட் தந்தார். சிபாரிசு செய்தவர் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள்.
35. அன்னையின் மீது அவர் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தால் ராசய்யாவின்
வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு "ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன்
காலையிலேயே வேலைக்குப் போகும்போது நான் போய் டாட்டா காட்டணும். சாயங்காலம் அவன்
வரும்போது நான் இங்க இருக்கனும்" என நெகிழ்ச்சியாய் சொன்னார்.
36. எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று
புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார்.
37. கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்த தாய் வழிப்பாட்டு பாடல்கள் இளையராஜா காலத்தில் தான்
புத்துயிர் பெற்றன.
38. கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்கத் தொடங்கிய இளையராஜா தான்
கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார்.
39. பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு
அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான
ஒன்று.
40. பின்னணி இசை சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே, தாளில்
இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை
ஒரு ஐதீகக்கதைப்போல சொல்லிக் கொள்கிறார்கள்.
வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை.
இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே
இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும்.
ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க
வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக
முடிந்துவிடும்.
சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்கவேண்டியதில்லை.
அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.
41.காட்சியை ஒருமுறை பார்க்கும் போதே மனதிற்குள் இசைவடிவத்தை யோசித்து, அடுத்த விநாடியே
கைகளால் இசைக்குறிப்பை வாசித்துப் பார்க்காமல் எழுதி முடித்து, மற்றவர்களை வாசிக்கச் செய்வார்.
மிகத்துல்லியமாக வரும் அந்த இசை பார்ப்போரை வியக்க வைப்பதோடு கற்பனாசக்தியின் உச்சம்
என்று பிரமித்து அவரது நண்பர் இயக்குநர் பாரதிராஜா அடிக்கடி சொல்வார்.
42. பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை இளையராஜா உருவாக்கினார்.
43. ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.
44. 2010 ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
45. 2012 ல்‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்
46. இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார்.
1985 - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987 - சிந்து பைரவி (தமிழ்)
1989 - ருத்ர வீணை (தெலுங்கு)
2009 - பழஸிராஜா (மலையாளம்)
2016 - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)
47. லண்டன் ராயல் ஃபில் ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவினைக் கொண்டு, அவர் ‘சிம்பொனி’
ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று
அழைப்பர். அந்த சாதனையை முதலில் நிகழ்த்தியுள்ள ஆசியக் கலைஞர் இவரே.
48. மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை ‘ஆதித்ய பிர்லா’ நிறுவனத்தினர் ‘இளையராஜா
இசையில்’ பாடலாக்க திட்டமிட்டனர். பண்டிட் பீம்ஸென் ஜோஷி,
பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளைப் பாட வைத்து
அப்பாடலை உருவாக்கினார். இந்திய இசை மேதை ‘நவ்ஷத்’ அப்பாடலை மிகவும்
பாராட்டிப் பேசினார்.
49. கோவையில்தான் எனது ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு இங்குள்ள சுப்பையா ஆசாரியாரிடம்
வாங்கினேன்.அந்த ஹார்மோனியம்தான் இன்றும் என்னிடம் உள்ளது
என்று அடிக்கடி சொல்வார்.
50. கமல்ஹாசன் குரலில் இருக்கும் ‘பிட்ச்’ அபூர்வமானது.ஒரே நாளில் இரண்டு பாடல் கம்போஸ்
செய்து அவரை பாட வைத்துள்ளார் ஒன்று... ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு
பறவை’மற்றொன்று...அவள் அப்படித்தான் படத்தில் வரும்
‘பன்னீர் புஷ்பங்களே...ராகம் பாடுங்கள்’ என்ற பாடல்.
51. நான் இசையமைப்பாளராக இருந்து எனக்கு போட்டியாளராக இளையராஜா இருந்திருந்தால்
பொறாமையால் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது என கமல்ஹாசன் குமுதம் புத்தக
வெளியீட்டு விழாவில் பேசினார். அப்படி ஒரு திறமை படைத்தவர் இளையராஜா அவரைப் பார்க்கும்
போதெல்லாம் அவர் திறமையின் உயரம் கண்டு பிரமிக்கிறேன் என்று பெருமை கொள்வார்.
52."How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை
ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த இந்த இசைத் தொகுப்பினை இசை
மும்மூர்த்திகளில் ஒருவரான ”
தியாகராஜ சுவாமிகள்” மற்றும் மேற்கத்திய இசைமேதை ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும்
காணிக்கையாக்கினார்.
53. "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர்
ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
54. "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார்.
இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
55. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசையுடன் கூடிய சிம்பொனி வடிவில்
இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
56. 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தினாலும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர் இளையராஜா.
57. இளையராஜா புகைப்படக்கலையில் மிகத்திறமை படைத்தவர்,
58. பாரதிராஜா போன்ற நெருங்கிய இயக்குனர்களுக்கு புதிய ட்யூன்களைக்கொடுத்து இதற்கு
காட்சியமைப்பை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி பல பாடல்களை ஹிட்டாகக்
கொடுத்திருக்கிறார்.
59. பாடலாசிரியர் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி பேசும் போது இசையின் காட்டாற்று
வெள்ளம் என்று வர்ணிப்பார்.
60.அரசியல் தலைவர்கள் முதல் அன்றாடக் கூலிதொழிலாளி வரை சமுதாயத்தின் எல்லா
மட்டத்திலும் அவரின் ரசிகர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள்.
61. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட
தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கம் மறையவில்லை. ஹிந்தி பாடல்களை கேட்பதையும்
பாடுவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த அலையை ஓய வைத்து
தமிழ் பாடல்களை தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் விரும்பிக் கேட்கும்படியான
சாதனையை செய்தவர் இளையராஜா.
62. முதல் படம் இசையமைக்கும் போது இளையராஜாவின் வயது 33.
63. பெல்பாட்டம், விதவிதமான கலர் சட்டைகள், கருப்பு கண்னாடிகள் என்றெல்லாம் இருந்த
இளையராஜா திரையுலகமே தன் பக்கம் திரும்பிய போது எளிமையான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.
64. இளையராஜாவின் இசைக்குறிப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் இசைக்கல்லூரிகளின் பாடப்
புத்தகங்களில் இடம்பெறும் என்று பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் கூறியுள்ளார்.
65. ஒரே ஆண்டில் இளையராஜா 56 படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை உட்பட இசையமைத்து
சாதனை படைதுள்ளார்.
66. ஆழ்ந்த ஞானம், நேரம் தவறாமை, இசைமேல் கொண்ட பற்று, கடின உழைப்பு, கவனம் சிதறாமை
என்று பல்வேறு உயர் எண்ணங்களால் பல கோடி இதயங்களைக் கவர்ந்துள்ளார்.
67. திரையிசையில் இதுவரை தன்னுடைய இசையமைப்பு மற்றும் பிற இசையமைப்பளர்களின்
இசையிலும் சேர்த்து 450 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
68. திரைப்படம் தவிர பல்வேறு ஆல்பங்களில் 100 பாடல்களுக்கு மேல் இசையமைத்துப் பாடியுள்ளார்.
69. இசைஞானி என்ற பட்டம் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது.
70. உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பளர்களை வரிசைப்படுத்திய மிகப் புகழ்பெற்ற அமெரிக்க
இணையதளம் இளையராஜாவுக்கு 9 வது இடம் அளித்துள்ளது. அதே இணையதளம்
இளையராஜாவை முதல் இடத்திற்கும் அவரே என்று அறிவிக்கும் நாள் வெகு சமீபத்திலிருக்கிறது.
71. சில வருடங்களுக்கு முன் லண்டன் பிபிசி வானொலி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த 75
ஆண்டுகளில் மிகச்சிறந்த பாடலாக இளையராஜா இசையமைத்த ’தளபதி’ திரைப்படத்தின்
“ராக்கம்மா கையத்தட்டு”ப் பாடலை மிக சிறந்த பாடலாக அறிவித்துள்ளது.
72. இளையராஜா எழுதிய புத்தகங்கள் :
1. சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
2. வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
3. வழித்துணை
4. துளி கடல்
5. ஞான கங்கா
6. பால் நிலாப்பாதை
7. உண்மைக்குத் திரை ஏது?
8.யாருக்கு யார் எழுதுவது?
9. என் நரம்பு வீணை
10. நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை,
இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
11. பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
12. இளையராஜாவின் சிந்தனைகள்.
73. 1000 படங்களைத்தாண்டி தன் இசைப்பயணத்தை தொடரும் பெருமைக்குரிய இந்திய
இசையமைப்பாளராக உலகை வலம் வரும் இமாலய மனிதர் ”இசைஞானி இளையராஜா”
74 வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் ”இசைஞானி. இளையராஜா”.அவர்கள் நூறாண்டு
வாழ்ந்து இன்னும் be ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க இறைவன் அருள் வேண்டி வாழ்த்தி வணங்குகின்றேன்