Wednesday, April 17, 2013

ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

" மானுட உடல், ஒரு தலையணை போன்றது. அதனுல் பஞ்சு போல எதை வேண்டுமானாலும் போட்டு நிரப்பலாம்.

ஆனால் பக்தன் ஒருவனுடைய உள்ளமோ ஈசனுடைய ஆலயம் போன்றது. "

"சேற்று மீன் சேற்றினுள் புதையுண்டு கிடக்கிறது. ஆயினும் அம்மீன் மீது சேறு படிவது கிடையாது.

அதே பாங்கில் மனிதன் உலகில் வாழவேண்டும். ஆனால் உலகப் பற்றினுள் அவன் தோய்ந்துபோய்விடக்கூடாது.

"மக்களில் பெரும்பான்மையோர் பூந்தோட்டத்தின் அழகைக் கண்டு ரசிக்கின்றார்கள். ஆனால், அத்தோட்டத்தை உருவாக்கியவனைப் பற்றி அவர்கள் ஒன்றும் நினைப்பதில்லை.

அதுபோல, இப்பிரபஞ்சம் எனும் தோட்டத்தை மக்கள் கண்டு களிக்கிறார்கள்.இதற்கு ஆதிமூலமாக இருக்கும் இறைவனைப் பற்றி சிந்திப்பதில்லை. உலகுக்கு முதல் காரணமாகிய இறைவனை அடைவதுதான், மானுடப் பிறவியின் குறிக்கோளாக இருக்கவேண்டும்."

மனிதன் அருள் தாகம் கொண்டிருப்பானானால் அது போதுமானது.

இறைவனிடத்து மனிதனுக்கு அனுராகம் இருக்குமானால் அது போதுமானது.

அருள் நாட்டத்தைத் தொடர்ந்து இறைவன் காட்சி கிட்டுகிறது.

குழந்தையொன்று, படுக்கப்போனபோது தனக்குப் பசி வரும்போது தன்னை எழுப்பிவிட வேண்டும் என்ரு தன் தாயிடம் சொன்னது.
' பசி வரும்போது, நீயே எழுந்துகொள்வாய்.' என்றாள் தாய்.

அருள் நாட்டம் அத்தகையது.

ஒருவனுக்கு பக்தி ஓங்கும்கால், பிறரிடம் அவன் வைத்திருக்கும் பற்று மறைந்து, தெய்வீக அன்பு உடையவனாக மாறுகிறான்.

தன் கடமைகளை சரிவர செய்து வரும் போதும், தனக்குச் சொந்தமான இடம் இறைவனது திருவடி என்று உணருகிறான்.

உள்ளத்தை முதலில் தூயதாக்கு, பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு.

சத்தியத்தின் மூலமாக அன்றி, கடவுளை அடையமுடியாது.

இக் கலியுகத்தில், சத்திய விரதத்திற்கு நிகரான ஆத்ம சாதனம் இல்லை.

எக்காரணத்தை முன்னிட்டும், மனிதன் பொய் பேசலாகாது.

பொய் பேசிப் பழகுபவன், படிப்படியகப் பாபம் செய்வதற்கு அஞ்சாத கீழான மனப்பான்மை பெற்றுவிடுகிறான்.

சத்தியம் பேசுதல், சிறந்ததொரு தபசு ஆகிறது.

மக்களுள் பெரும்பான்மையோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர்.

அத்தகைய சேவைகள் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை.

உலகத்தவருடைய ஆமோதிப்பின் பொருட்டோ கீர்த்தியின் பொருட்டோ செய்கிற கர்மம், மனிதனை பந்தப்படுத்தும்.

உலகுக்கு உதவி பண்ணுகிறேன் என்று ஒரு மனிதன் நினைக்கிறான். ஆனால் உலகுக்கு உதவி பண்ண மனிதனுக்கு இயலாது... கடவுள் ஒருவரே அதைச் செய்யமுடியும்.

" வெண்ணையை உருக்கும்போது, அது சடபுட என்று சத்தமிடுகிறது.

முற்றிலும் உருகி நெய் ஆனபின் அதன் ஓசை நின்றுவிடுகிறது.

பிறகு, அதில் பொரிப்பதற்கு ஏதாவது மாவு உண்டையைப் போட்டால், அது மீண்டும் சத்தமிடுகிறது.

மாவுண்டை முழுவதும் பொரிந்தபின் சத்தம் அடங்கிவிடுகிறது.

உருகுகிற வெண்ணை, ஓலமிடுவதற்கு ஒப்பான ஞானவிசாரம்.

விசாரித்துத் தெளிந்தபின், பேச்சு நின்றுவிடுகிறது.

அப்படித் தெளிந்த ஞானி, மற்றொரு மனிதனுக்கு ஞானோபதேசம் செய்யும்போது, மீண்டும் பேசவேண்டியதாகிறது. "

எட்டு விதமான தளைகள் மனிதனைப் பந்தப் படுத்துகின்றன.

விவேகம் எனும் தீபத்தை மனிதனுடைய உள்ளத்தில் ஏற்றிவைத்தால், பந்தங்கள் மறையும்.

தான் செய்த பாபங்களைப் பற்றியே ஓயாது எண்ணிக் கொன்டிருப்பவன், மகா பாபியாகிறான்.

அவைகளை மனதிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு, தெய்வத்தை நினைப்பவன் தூயவனாகிறான்.

இறைவனுடைய திரு நாம உன்னைத் தூய்மைப்படுத்துகிறது என்ற நம்பிகையை உன் உள்ளத்தில் உறுதியாக வை.

" பலாப் பழத்தை அரிவதற்கு முன், கையில் எண்ணை தடவிக் கொள்ளவேண்டும், இல்லையேல், கையில் அதன் பிசின் ஒட்டிக் கொள்ளும்.

அதுபோல,உலக வாழ்க்கையில் புகுவதற்கு முன், மனம் பக்தியில் ஊறியிருக்கும்படி செய்து கொள்ளவேண்டும், இல்லையேல், உலகப் பற்று எனும் பிசின் மனதைத் துன்புறுத்தும் "

"மனம் எனும் பாலானது, உலகம் எனும் நீரில் கலந்துவிடும்.

மனதை, ஏகாந்தத்தில் நிலை நிறுத்தி, பக்தி எனும் வெண்ணையைக் கடைய வேண்டும்.

பிறகு, அதை உலக வாழ்வு எனும் நீரில் வைத்தால்,அதில் கலக்காமல், மிதக்கும்.

எனவே முதலில், பக்தியை வளர்த்துக் கொள்ளவேண்டும் "

" மரம் வெட்டுகிற ஒருவன், சிரமப்பட்டு, பெரும் பகுதியை வெட்டி முடிக்கிறான்.

வெட்டுப்படாத, எஞ்சிய பகுதி, தன்னைதானே ஒடித்துக் கொண்டு, தரையில், தடால் என்று விழுகிறது.

மனிதன் மரத்தை வெட்டிய பகுதிக்கு நிகர்... குரு, சிஷ்யனுக்கு செய்யும் ஆத்ம பரிபாகம்

மரம் தானே ஒடிந்து விழுவது...சிஷ்யன் எடுத்துக் கொள்ளும் சுயப் பிரயத்தனம். "

" நாணல் ஒன்று தன்னளவில் நீரின் மீது மிதக்கிறது...அதன் மீது சிறு குருவி உட்கார்ந்தாலும், அது மூழ்கிவிடும்.

ஆனால், பெரிய மரக்கட்டை ஒன்றோ, தான் மிதப்பது மட்டுமில்லாமல், பல பேர் அதன் மீது உட்காரவும் இடம் கொடுக்கிறது.

தங்கள் சொந்த முக்தியைக் கவனித்துக் கொள்பவர்கள்.....நாணல் போன்றவர்.

உலகை உய்விக்க வந்த குருமார்கள்......பெரிய மரக் கட்டை போன்றவர்கள். "

" உடலில் ஈசன் எப்படி உறைந்திருக்கிறார் ?

பீச்சாங்குழலில் தன்ணீரைத் தள்ளிக் கொடுப்பதற்கு இருக்கும் ஒரு தண்டு போல, அவர் உடலில் இருக்கிறார்.

தண்டு, குழலில் இருந்தாலும், அது குழலில் ஒட்டாது.

ஈசன் நம் உடலில் இருந்தாலும், அவர் ஒட்டுவதில்லை. "

" காந்தத்திற்கு நிகர் பரமாத்மா; ஊசிக்கு நிகர் ஜீவாத்மா.

காந்தம் ஊசியைக் கவர்வது போல, பரமாத்மா, ஜீவாத்மாவைத் தன் மயமாக்குகிறது.

ஊசியை மண் மூடிக்கொண்டு இருந்தால், காந்தத்தால், அது கவரப் படுவதில்லை.

ஜீவாத்மாவை, உலக ஆசைகள் எனும் மண் மூடிக் கொண்டிருக்கும் வரை அது பரமாத்மனிடம் கவரப் படுவதில்லை. "

சிஷ்யர் :

மனதைக் கடவுள் மீது நாட்டுவது எப்படி ?

ராமகிருஷ்ணர் :

இறைவனுடைய திருநாமத்தை இடைவிடாது ஜபி.

அவர் பெருமையைப் புகழ்ந்து பாடு.

எல்லோருடனும் இணக்கம் வைத்துக் கொள்.

பக்தர்களையும், சான்றோர்களையும் தரிசனம் செய்.

பிரார்த்தனையும், சத்சங்கமும், இன்னல்களிடமிருந்து விடுபடுவதற்கு உபாயங்களாகும்.

ஏதோ ஒரு நாள் சத்சங்கம் செய்தால் போதாது; திரும்பத் திரும்ப நல்லார் இணக்கத்தை நாட வேண்டும்.

ஏனென்றால், உலகப் பற்று எனும் நோய் உடலில் ஊறிப் போய்விட்டது.
நாடியை நீயே சரியாகத் தெரிந்துகொள்ள முடியாது; வைத்தியன் துணை தேவை.

இடையறாது சத்சங்கம் செய்யவேண்டும்.

சான்றோர்கள் தங்களுடன் பழகுபவர்களை தெய்வத்திற்கு அறிமுகப் படுத்துகிறார்கள்.

சத்தியத்தின் மூலமாக அன்றிக் கடவுளை அடையமுடியாது.

இந்தக் கலி யுகத்தில், சத்தியம் பேசுதலே சிறந்த தபஸ் ஆகிறது.

மேட்டில் நீர் நிலைத்து நிற்காது, அது பள்ளத்திற்கு ஓடிவிடும்.

ஆதலால், பள்ளத்தில் சாகுபடி செய்வது, மேட்டு நிலத்தில் செய்வதை விட எளிது.

பணிவுடன் இருப்பவன் இறைவன் அருளுக்குப் பாத்திரமாகிறான்; வீண் கர்வம் படைத்தவனுக்கு அது வாய்க்காது.

எளிமையும் எதார்த்தமும் உடையவனுக்கு இறை அருள் எளிதில் கிட்டும்.

" அருள்தாகம் ஒருவனுக்கு எப்போது உண்டாகும் ?

மனிதன் உலக ஆசைகளில் உழன்றுகொண்டிருக்கிறான்...இந்த ஆசைகளை நிறைவேறிச் சலித்துப் போனபின் அருள்தாகம் தானாக வருகிறது.

பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடும்போது, குழந்தை தன் தாயை நினைப்பதில்லை...விளையாடிச் சலித்துப் போனபிந்தான், தாயின் ஞாபகம் வருகிறது. "

" நீ எம்மதத்தைச் சார்ந்தவன் என்பது முக்கியமல்ல..நீ எவ்வளவு தூரம் அருள்தாகம் பிடித்தவனாக இருக்கிறாய் என்பதே முக்கியம்.ஒருவனுக்கு அருள்தாகம் தீவிரமாக உன்டாகிவிட்டால், அவன் எம்மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், இறைவனை நிச்சயமாக அடியமுடியும். "

" அருள் தாகம் என்றால் என்ன ?
தன் உத்தியோகத்தை இழந்துவிட்ட ஒருவன், ஒரு உத்தியோகத்தைப் பெறும் பொருட்டு, இங்கும் அங்கும் ஓடியலைந்து திரிகிறான்...அம்முறையில் கடவுள் நாட்டம் கொள்ளுதல்தான் அருள்தாகம்."

"குழந்தையின் எளிய இயல்பு சாதகனுக்கு வரவேண்டும்.
தன் தாயைக் காண குழந்தை அழுவதைப் போல, ஆத்ம சாதகன், இறைவனைக் காண அருள்தாகம் பிடித்தவனாக இருக்கவேண்டும்."

No comments:

Post a Comment