Tuesday, May 14, 2013

சபரிமலையில் மண்டலகால பூஜைகள் தொடக்கம்!


ஹரியாகிய விஷ்ணுவுக்கும், ஹரனாகிய சிவனுக்கும் பிள்ளையாக "ஹரிஹரபுத்திரன் அவதரித்தார். கைலாயத்தில் வளர்ந்தார். பின், மானிடரூபம் எடுத்து, பந்தள மன்னரின் வளர்ப்பு மகன் மணிகண்டனாக மாறினார். புலிப்பாலுக்காக காட்டுக்குச் சென்ற அவர், மஹிஷியை வதம் செய்தார். தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், சபரிமலையில் கோயில் கொண்டார். இதுதான் வழக்கமாகச்சொல்லப்படும் வரலாறு. ஆனால், "பூதநாதோபாக்கியானம் என்ற நூலில், சற்று மாறுதலான கதை சொல்லப்படுகிறது. பந்தளமன்னருக்குப் பதிலாக பாண்டியமன்னரின் சேவகனாக ஐயப்பன் இருந்ததாகவும், அவரைப் புலிப்பால் கொண்டு வர அனுப்பியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

யாத்திரையின் தனித்தன்மை: 41 நாட்கள் பக்தர்கள் விரதமிருந்து மனதாலும், உடலாலும் தூய்மை காக்கின்றனர். கற்கள் நிறைந்த காட்டுப்பாதையில் குளிர்காலத்தில் மலையேறிச் செல்ல வேண்டி இருப்பதால், உடல்வலிமை தேவையானதாக உள்ளது.எனவே பிரம்மச்சர்யம் அனுஷ்டிக்கின்றனர். ஆடம்பரம் இன்றி அனைத்து பக்தர்களும் சரிசமமாக நீலம், கருப்பு உடையில் சமத்துவத்தை வளர்க்கின்றனர். வழக்கமான நடைமுறை வாழ்வில் இருந்து விலகி, ஆறு, மலை என்று இயற்கையான சூழலில் மலையேறி, உற்சாகம் பெறுகின்றனர். இதுவே, சபரிமலை யாத்திரையின் தனித்தன்மை.

சுவாமியே சரணம் ஐயப்பா: சபரிமலை யாத்திரை முதன்முதலாகச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் நடத்தும் சடங்கு கன்னிபூஜை. இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழிபூஜை என்றும் கூறுவர். மண்டல காலமாகிய, கார்த்திகை முதல்நாளில் இருந்து, மார்கழி பதினொன்றாம் தேதிக்குள், (இவ்வாண்டு நவ.16 முதல் டிச.26க்குள்) வீட்டில் இச்சடங்கை நடத்துவதற்கு நாள் குறித்து விட வேண்டும். பந்தலிட்டு, அதன் நடுப்பகுதியில் மண்டபம் அமைக்க வேண்டும். மண்டபத்தின் நடுவில் ஐயப்பன் படம் வைத்து, சுற்றிலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசுவாமி, கடுத்த சுவாமி, வாபர், ஆழி ஆகியவற்றிற்கு உரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும். எல்லா தெய்வங்களுக்கும் அவல், பொரி, பழம், வெற்றிலை, பாக்கு, சித்ரான்னம் படைத்து பூஜை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இருமுடி வைக்க ஏற்ற திசை: சபரிமலை யாத்திரை புறப்படும் முன், "கட்டுக்கட்டுதல் என்னும் இருமுடி நிகழ்ச்சி நடத்துவர். யாத்திரைக்கு தேவையான உணவுப்பொருட்கள், ஐயப்பனுக்குரிய அபிஷேகத்திற்குரிய நெய்த்தேங்காய், கற்பூரம், கடுத்தசுவாமிக்கு அவல், பொரி ஆகியவற்றை வைக்கும் சடங்கே கட்டுக்கட்டுதல். பூஜைக்குரிய நெய்தேங்காயை முன்கட்டிலும், உணவுப்பொருள்களை பின்கட்டிலும் வைப்பது முறை. குருசுவாமியைக் கொண்டு இருமுடி கட்டிய பின் கற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும். கிழக்கு நோக்கி நின்று தலையில் வைத்துக் கொண்டு, "சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிடவேண்டும். மகரஜோதி தரிசனம்: மகரசங்கராந்தியன்று சபரிமலையில் மாலைநேர தீபாரதனையின்போது நடக்கும் நிகழ்ச்சி மகரஜோதி தரிசனம். பொன்னம்பல மேட்டில் தேவதைகள், முனிவர்கள் ஒன்று கூடி, சபரிமலை வாசனான ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவதாக ஐதீகம். ஐயப்பன் எழுந்தருளியிருக்கும் கோயிலின் வடக்குபக்கமாக உள்ள மலைமுகட்டில் இந்த தரிசனம் நிகழும். ஜோதிதரிசனத்தின் போது பக்தர்களின் "சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் விண்ணை முட்டும் விதத்தில் பேரொலியாக இருக்கும்.

வேஷமிட்டு ஆடும் பக்தர்கள்: இருமுடியுடன் விரதமிருந்து மலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஒன்றாகக் கூடுமிடம் எரிமேலி. மகரஜோதி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அக்காலத்தில் மார்கழி கடைசி வாரத்தில் பேட்டைத்துள்ளல் ஆடுவது வழக்கமாக இருந்தது. அப்போது தான் ஓரளவுக்காவது கூட்டம் வந்தது. ஆனால், தற்போது கூட்டம் அதிகமாகி விட்டதால், கார்த்திகை முதல்நாளில் இருந்தே பேட்டை துள்ளல் நடத்தப்படுகிறது. எரிமேலி அருகில் பேட்டைசாஸ்தா கோயில் உள்ளது. இங்கு வில்லும் அம்பும் ஏந்தியபடி வேட்டையாடச் செல்லும் கோலத்தில் சாஸ்தா வீற்றிருக்கிறார். பக்தர்கள் அக்கோலத்தை நினைவூட்டும் விதத்தில் சாயம், கரி பூசிக்கொண்டு பச்சிலை ஏந்தியபடி கோயில் வாசலில் கூடுவர். ""ஐயப்ப திந்தக்கதோம் சுவாமி திந்தக்கத்தோம் என்று பாடிய படி மேளதாளம் முழங்க ஆடுவர். கோயிலை மூன்று முறை வலம் வந்ததும் பேட்டைத் துள்ளல் முடிந்து விடும். பேட்டை சாஸ்தா கோயில் அருகில், வாபர் பள்ளிவாசல் உள்ளது.

கதை வடிவில் சாஸ்தா பாட்டு: மலையாளத்தில் ஐயப்பன் வரலாற்றை "சாஸ்தா பாட்டு என்கின்றனர். இதில், மலையாளப் போர் வீரனாக ஐயப்பன் சித்தரிக்கப்படுகிறார். அவரது வெற்றிக்கு கருப்பன், வாபர் என்னும் இருவர் துணை நின்றதாக கூறப்பட்டுள்ளது. பாண்டிச்சேவம், புலிச்சேவம், இளையரசுச்சேவம், வேளிச்சேவம், ஈழச்சேவம், பந்தளச்சேவம், வேளார்சேவம் என்னும் ஏழு சேவங்கள் இந்தப் பாடல்களில் உள்ளன. "சேவம் என்றால் "சேவகம். பாண்டியமன்னரிடம் ஐயப்பன் போர் வீரனாக பணி செய்ததாக கதை சொல்வார்கள். உடுக்கை அடித்தபடியே இந்தப்பாடல்களைப் பாடுவர்.

No comments:

Post a Comment