Monday, June 2, 2014

நம்பிக்கை சிந்தனைகள் - 1


1. பிறரை தண்டிக்க வாய்ப்பிருந்து அதற்கான நியாயமும் இருக்கையில் எவனொருவன் தன்னை மாய்த்துக் கொண்டாவது அவர்களை விட்டுக் கொடுக்கிறானோ அவன் உண்மையிலேயே ஏமாளியல்ல ஏற்றமுடையவன்,

2. தவறே செய்யாதவனைவிட பெருந்தவற்றைச் செய்து திருந்தி விடுகிறவனின் மனோபலம் பெரிதாயும் தெளிவாயும் இருக்கும்,

3. மறக்கக் கூடாதவை மறந்து போய் விடுவதும், மறக்க வேண்டியவை மறக்க முடியாமல் போவதும் ஒரு மனிதனின் வாழ்வில் சகஜமானதாய் அமையும்போது வாழ்க்கையின் தடமும் சர்வ சகஜமாய் மாறிப்போய் விடுகிறது.

4. சாதாரணமாக ஒருவனை வீழ்த்த முற்படும்போது அவனது பலத்தை அறிந்து அதை முறியடிக்க முயல்வதைவிட பலவீனத்தை அறிந்து அதை அதிகப்படுத்துவதுதான் சரியானது அல்லது லாபகரமானது.

5. வாழ்க்கையில் ஓர் அர்த்தத்தையும் மதிப்பையும் அளிக்கக்கூடிய ஒரே அம்சத்தை இழந்துவிடும் பட்சத்தில் எவ்வளவு ஆதாயம் கிடைத்தாலும் வாழ்க்கையே அர்த்தமற்றதாய் தான் அமைகிறது.

6. பல விஷயங்களில் பல சந்தர்ப்பங்களில் பெண்ணானவள் நம்பிக்கையை தரக்கூடியவளாய் இருந்தாலும் அந்தரங்க உறவின் பேரில் ஏற்படும் சிறு சந்தேகத்தால் அனைத்து நம்பிக்கைளும் அர்த்தமற்றுப் போவதோடு அவநம்பிக்கைக்கு உரியவளாகவே கருதப்படுகிறாள்.

7. ஆழப்பதிந்துவிட்ட வெறுப்புக்குமுன்னால் பிற விஷயங்களின் பேரிலான ஆராய்ச்சி குறுகிய எல்லைக்குள் நடக்கிறதே தவிர உபரி பரிமாணங்களை அடைவதில்லை.

8. பிறர் உண்டாக்கி வைக்கும் சந்தேகம் என்பது நமது அறிவுக்கு வைக்கப்படும் தீயைப்போன்றது. தெளிவான சிந்தனையும் துணிவும் உள்ளவர்களால் அறிவினாலேயே அத்தீயை அனைத்துவிட முடியும். பெரும்பாலானவர்கள் தீயின் பிரவேசத்தாலேயே இவ்விரண்டையும் இழந்து விடுவதால் அத்தீ கணிசமான நாசத்தை உண்டாக்கி பின்பே அழிக்கிறது.

9. சுய சந்தேகத்தைவிட பிறரால் உருவாகும் சந்தேகள் அதிகமாகப் பாதிக்கக் கூடியது. ஏனென்றால் சுய சந்தேகத்தில் இருக்கும் பாதுகாப்பு பிறரால் உருவாக்கப்படும் சந்தேகத்தில் இருப்பதில்லை. தன் மனைவியின் நடத்தை பற்றி சுயசந்தேகள் கொள்பவன் அச்சந்தேகம் உண்மையாகும் போது வேதனைப்பட்டாலும் மற்றவர்களுக்குத் தெரியாத பட்சத்தில் ஓரளவு ஆறுதலடைகிறான். நிதானப்படவும் முயல்கிறான். ஆனால் அதே சந்தேகத்தை மற்றவர்கள் உருவாக்கி உண்மையாகவும் இருந்துவிடும் பட்சத்தில் அவனது கவலை அதிகமாகிறது. மற்றவர்களுக்கு தெரிந்து விட்டதால் உண்டாகும் அவமானம் அவனை வதைக்கிறது. நிதானப்பட முடியாமல் தவிக்கிறான். சிலர் வெறிக்கும் ஆளாகிறான்.

10. வாழ்க்கை என்பது நாம் உணர்கிற அனுபவம் அல்லது அனுபவிக்கும் உணர்வே தவிர சமூகமும் சம்பிரதாயமும் சொல்லி வைத்துள்ள அமைப்பல்ல.

11. கெடுப்பவர் கெடுத்தால் கடவுளும் கெடலாம். ஒரு பிரச்சனையை முறியடிப்பது என்பது அதைச் சமாளிக்க முயல்வோரின் திறமையைப் பொறுத்து என்று சொல்வதைவிட அது எப்படிப்பட்ட நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்பதைப் பொருத்து என்று சொல்வதே சரியானது. வெறும் பிடிவாத்ததால் பிரச்சனையை துவக்குகிறவனை எப்படிப்பட்டவனாலும் எளிதில் மாற்றிவிட முடியாது. பிரச்சனைக்காகவே பிரச்சனையை உண்டாக்க்கிறவன் கொஞ்சத்தில் அசைந்து கொடுக்க மாட்டான்.

12. ஒரு காரியத்தில் தோல்வியும் ஏமாற்றமும் தடைகளும் குறுக்கிடும் போது அறிவு பூர்வமாய் இறங்கியவர்கள் லட்சியமாக எண்ணித் தொடர்கிறார்கள். மற்றவர்களோ அவற்றால் அலட்சிப்படுத்தப்பட்டு அகன்று விடுகிறார்கள்.

13. தன் சுயநலத்தை மதித்து செயல்படும் எந்த மனிதனாலும் பிறர் குடும்பத்தை கெடுக்காமல் இருக்க முடியாது என்பதும் பிறர் குடும்பத்தை கெடுக்கும் எந்த மனிதனும் நிம்மதியாக இருக்க முடியாது என்பதும் மனித வாழ்க்கையின் அடிப்படை உண்மைகள்.

No comments:

Post a Comment