உங்களிடம் தனித்துவம் இருக்கிறதா?
வெற்றி என்பது தனித்துவத்தின் சாரம்தான். யாரும் செய்ய முடியாததை அல்லது அனைவருக்கும் முன்பாக, முதன்மையாக செய்து முடிப்பதே வெற்றி. இதைச் செய்து முடிப்பதற்கான திறனே தனித்துவம் ஆகிறது.
உங்களுக்குள் அந்த தனித்துவம் இருந்தால் நீங்களும் வெற்றி பெறுவீர்கள். அதை பரிசோதித்துப் பார்க்க சில வினாக்களை உங்களை நீங்களே கேட்டு பதில் பெறுங்கள். விடைகள் உங்களின் தனித்துவத்தை விளக்கும். இருப்பதை இருக்கிற மாதிரியே தொடர விரும்பாத புதுமை விரும்பிகளா நீங்கள்? சின்ன விஷயங் களையும் பெரிதுபடுத்துவீர்களா? எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த மனம் உண்டா?
இல்லை, இத்தனைக்கும் எதிரான எண்ணம் உங்களுக்குள் இருக்கிறதா? அதாவது புதுமையை விரும்பாமல் அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே என்று அசாதாரணமாக இருப்பீர்களா? அப்படியென்றால் உங்களின் தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். கால மாற்றத்துக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதுதான் தனித்துவங்களில் முதன்மையானது!
நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள், பரபரப்பாகிறது விவாதம். எதிர்ப்பு அதிகம் இருந்தாலும் உங்கள் தரப்பு கருத்துக்களை திடமாகவும், தெளிவாகவும் முன்வைப்பீர்களா? இல்லை பின்வாங்கிவிடுவீர்களா? உங்கள் கருத்துக்களை தெளிவாக முன்வைப்பது ஒரு தனித்துவம். அதில் உறுதியாக இருப்பதே வெற்றிக்கான அடித்தளம். இந்த தனித்துவத்தில் குறைவு இருந்தால் வளர்த்துக் கொள்ளுங்கள். அதுபோல உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும், அடிக்கடி `தெரியாது’ என்று பதில் அளிக்கிறீர்களா? பணியிடத்திலும் புதிய பணியை ஏற்றுச் செயல்பட தயக்கம் காட்டுகிறீர்களா? தயக்கம் என்பது தனித்துவத்தை குறைக்கும் பெரிய சக்தியாகும். அவசியமானவற்றை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவற்றுக்கு தெளிவான விளக்கம் கொடுங்கள். புதிய பணிகளையும் பிறர் ஆச்சரியப்படும் வகையில் செய்து காட்டுங்கள். ஒரு இக்கட்டான சூழலில் மிகவும் நெருக்கமானவர் உங்களுக்கான முடிவை அறிவிக்கிறார். அவர் அது தொடர்பான விஷயங்களில் அனுபவம் உடையவர். ஆனால் அவர் எடுத்த முடிவு உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த முடிவை ஏற்றுக் கொள்வீர்களா? அவர் அனுபவத்தின் பேரில் சரியான முடிவு எடுத்திருப்பார் என்று கருதி விட்டுவிடுவீர்களா? இதற்கு நீங்கள் ஆம் என்று பதில் அளித்தாலோ, அந்த முடிவை ஏற்றுச் செயல்பட்டாலோ? உங்களிடம் போதிய தனித்துவம் இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் திருப்தி இல்லாமல் செய்யும் எந்த விஷயமும் முழுமை அடைவதில்லை. யார் ஆலோசனை வழங்கினாலும், முடிவு உங்களுடையதாக இருக்கட்டும். அதே நேரத்தில் `தீதும், நன்றும் பிறர் தர வாரா?’ என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேற்கண்டபடி நீங்களே முடிவு செய்து காரியத்தில் இறங்கிவிட்டீர்கள். இடையில் கவனிக்கும்போது நாம் செய்வதெல்லாம் சரியா என்ற கேள்வி எழுகிறது, அவர் சொன்னபடி செயல்பட்டு இருக்கலாமோ என்று தோன்றுகிறது, இலக்கை அடைய முடியுமா? என்ற தவிப்பும் வருகிறது.
அப்போது நீங்கள் மிரண்டுபோய் பின்வாங்கிவிடுவீர்களா? நமது திட்டம் சரிதான், எங்கு பிழை செய்தோம் என்று தேடி அதை சரி செய்வீர்களா? இல்லை, இடையிலேயே வேறு திட்டத்துக்கு மாற முயற்சிப்பீர்களா? இங்குதான் `தீதும் நன்றும் பிறர் தர வராது’ என்பதற்கு விடை கிடைக்கும். முடிவு எடுத்தபிறகு அதை கண்டிப்பாக செயல்படுத்துங்கள். தவறு நேர்ந்தாலும் அதற்கும் பொறுப்பேற்று செயல்படுங்கள். அது மாற்றுத்திட்டமோ, குறைகளை களைவதோ, எதுவாகவும் இருக்கலாம். நமக்குத் தேவை இலக்கு. அதற்கான உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுங்கள்! நீங்கள் நேர்மையாகவும், சரியாகவும் செயல்படுவதாக தோன்றுகிறது. ஆனால் முன்னேற்றம் கிடைக்கவில்லை. நாம் தவறு செய்துவிட்டோம், குறுக்கு வழியிலாவது முன்னேற வேண்டும் என்று நினைப்பீர்களா?
அதேபோல் எதிர்பாராதவிதமாக கட்டுக்கட்டான பணம் உங்களிடம் கிடைக்கிறது. அதிர்ஷ்ட தேவதை நமக்கு அருளிவிட்டாள் என்று நினைப்பீர்களா? இந்தத் தொல்லைபிடித்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்து காலாட்டிக் கொண்டு வாழ்க்கையைத் தள்ளலாம் என்று நினைப்பீர்களா? இரண்டுமே தன்னம்பிக்கை இல்லாததை உணர்த்தும் எண்ணங்களாகும். தன்னம்பிக்கை இல்லாவிட்டால் தனித்துவமும் இல்லை. சரியான செயல்பாடு சரியான விளைவுகளையே ஏற்படுத்தும். அதற்கான பலன் கிடைக்க உழைப்பு இன்னும் தேவை என்று எண்ணி தொடர்ந்து நேர்மையையே கடைபிடியுங்கள். அதிர்ஷ்டம் என்பதே குருட்டு நம்பிக்கைதான். அதை எண்ணிக் கொண்டிருந்தால் வந்தது போலவே திடீரென்று காணாமல் போகும்.
எனவே தன்னம்பிக்கையே வெற்றி. தனித்துவமே வெற்றிப் பாதை. உணருங்கள், உயர்வீர்கள்.
No comments:
Post a Comment