உட்காரும் போது, நிற்கும் போது அல்லது உறங்கும் போது, உங்கள் உடலை எப்படி வைத்துக் கொள்கிறீர்கள் என்பதே, உடல் தோரணை. குறைந்த மன அழுத்தத்துடன், அதிக தெம்புடன், தினசரி செயல்பாடுகளை செய்ய சரியான தோரணை என்பது மிகவும் முக்கியம்.
முதுகு வளைந்தபடி உட்காருதல், ஒரு காதில் மொபைல்போனை வைத்து, தலையை சாய்த்து பேசுவது, முன்னோக்கி வளைந்து உட்காருவது போன்றவை, தவறான உடல் தோரணைக்கான எடுத்துக்காட்டுகள். இதனால், தசைகளிலும் முதுகுத்தண்டின் மென்திசுக்களிலும், முதுகுத் தசைகளிலும், இடுப்பு, தோள்கள், கழுத்து மற்றும் வயிற்றுச்சுவரிலும் இறுக்கம் அதிகமாகிறது.
தவறான உடல் தோரணையால், முதுகு வலி, அடிமுதுகு நரம்பு வலி (ஸ்கையாடிகா), செரிமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உட்காரும் போது, அடி முதுகை தாங்கக்கூடிய வகையில் உள்ள நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் மேஜை அல்லது டெஸ்க் உங்கள் கைமூட்டின் உயரத்திலேயே இருக்க வேண்டும்.
நாற்காலியை மேஜைக்கு நேராக வைக்க வேண்டும். முதுகை தாங்கும் வகையில் சிறிய தலையணையோ, குஷனோ வைத்துக் கொள்ள வேண்டும்.
கால்களின் பின்பகுதியில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க, பாதங்களை வைத்துக் கொள்ள, ஒரு மேடை போன்ற அமைப்பை பயன்படுத்தவும்.
கூடுமானவரை, அவ்வப்போது எழுந்து நின்று, கைகளையும், கால்களையும் நீட்டி, மடக்கி தளர்த்தவும். நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர் எனில், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, சற்றுதூரம் நடந்து விட்டு வரலாம். அதிக நேரம் மொபைல்போனில் பேசுபவர் என்றால், தோள்பட்டையில் வைத்து பேசுவதற்கு பதில், ஹெட்செட் பயன்படுத்தலாம்.
உட்காரும்போது, பாக்கெட்டின் பின்பக்கத்தின் கனமான பர்சை வைத்திருக்க வேண்டாம். அது, இடுப்பின் சமநிலையை பாதிக்கலாம். கம்ப்யூட்டரை அதிகம் பயன்படுத்துபவர் எனில், அதிகமாக முன்னோக்கி வளைந்திருப்பதை தவிர்க்கவும். தாழ்வான உயரம் கொண்ட இருக்கையில் நீண்டநேரம் உட்கார்ந்திருக்க வேண்டாம்.
நிற்கும் போது, தலையை நிமிர்ந்து பார்த்தபடி, தாடையை, திடமாக முன்னோக்கி வைத்தபடியும், தோள்கள் பின்னோக்கியும், மார்பு முன்னோக்கியும், வயிறு உள் இறங்கியபடியும் நிற்க வேண்டும்; இது, உங்கள் சமநிலையை மேம்படுத்தும். ஹைஹீல்ஸ் அணிந்திருந்தாலோ, ஒரு புறம் சாய்ந்தபடி இருந்தாலோ, நீண்டநேரம் நிற்க வேண்டாம். முதுகைப் பாதிக்கும்படியான செயல் எதுவும் வேண்டாம்.
கனமான பையை தூக்கி செல்கிறீர்கள் என்றால், பொருட்களை பிரித்து, இரண்டு பைகளிலும் வைத்து கொள்ளலாம். இதனால் உடலின் இரண்டு புறமும் எடை சமமாக இருக்கும். முதுகில் மாட்டிக்கொள்ளும் பைகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஏனெனில், அவற்றைப் பயன்படுத்தினால் இரண்டு தோள்களுக்கும் பளு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
தரையிலிருக்கும் எதையேனும் எடுக்க, குனிய வேண்டியிருந்தால், முதுகை நேராக வைத்துக்கொண்டு கால் மூட்டுகளை வளைக்கவும். கோபம் அல்லது பயம் போன்ற உணர்வுகளும், மன அழுத்தமும் உடலில் இறுக்கத்தை அதிகரிக்கும். இசை கேட்பது, நடனமாடுவது போன்ற, மன அழுத்தத்தை குறைக்கும் விஷயங்களில் மனதை செலுத்த வேண்டும். யோகாசனங்கள், உடலின் தசை இறுக்கத்தை நீக்க மட்டுமின்றி, மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது
பால் பொருட்கள், கொழுப்பு நிறைந்த மீன்கள், ஆலிவ் போன்ற சத்துள்ள உணவுகள், நம் உடலுக்கு அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment