Monday, November 6, 2017

இதுவும் கடந்து போகும்! - உழைத்தேன்... உயர்ந்தேன்..!

தொழில் செய்ய களம் இறங்கிவிட்டாலே வரிசைகட்டி பிரச்னைகள் தொடுத்து நிற்கும். அதிலும் எந்தப் பின்புலமுமே இல்லாதவர்களுக்கு சொல்ல தேவையில்லை. அத்தகையதொரு நிலையிலிருந்து வந்து, தன் உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து வளர்ந்திருக்கிறார் சாத்தூர் க.பொன்ராஜ். 

சுவர்களில் குழாய்கள் பதிக்க உதவும் கிளாம்ப் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கும் பொன்ராஜை சந்தித்தோம். பிஸியான வேலைகளுக்கு இடையே வரவேற்றவர், தான் புதிதாக வாங்கவிருக்கும் மாருதி சுஸூகி (Maruthi Suzuki) எர்டிகா காருக்கு முகவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னபடி நம்முடன் பேச ஆரம்பித்தார் பொன்ராஜ்,    
                                                  
“எனக்கு சொந்த ஊர் சாத்தூர். என்னுடன் பிறந்தவர்கள் மூன்று அண்ணன், ஒரு அக்கா. நான் கடைசி பையன். என் ஒன்றரை வயதிலே அப்பா கதிரேசன் இறந்துவிட்டார். அதன்பிறகு எங்கள் அம்மா சுப்புதாய் எங்களை எல்லாம் வளர்த்தார். 

என் பள்ளிக்கூட நாட்களில் நன்றாகப் படித்துக்கொண்டு இருந்தேன்.  எட்டாம் வகுப்பு வரை படித்தேன். மேலும் படிக்க குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை. பின் விடுமுறையிலிருந்து நிப் கம்பெனிக்கு வேலைக்கு சென்றேன். விடுமுறை முடிந்த கையோடு ஆசிரியர்கள் வந்து அழைத்தனர். ஆனால், வறுமை காரணமாக என் அண்ணன்கள், ‘விடு, டூடோரியல் எழுதிக்கிடலாம்’ என்று சொல்லிவிட்டனர்.

நாட்கள் சென்றன. சைக்கிள் கடையில் சில நாட்கள், கட்டுமானத் தொழிலில் சில நாட்கள், கேரளாவில் வைக்கத்தில் உள்ள ஒரு  ஹோட்டலில் சில நாட்கள் என அடுத்துவந்த காலம் பல்வேறு  வேலை களில் கழிந்தது. எனக்குக் கிடைத்த ஊதியத்தின் சிறு தொகையை வீட்டுச் செலவுக்கு அம்மாவிடம் கொடுத்ததுபோக, மீதிப் பணத்தை ஏலச் சீட்டுக்கு கட்டிவிடுவேன். இவ்வாறு சிறிது, சிறிதாக பணத்தை சேமித்து வைத்தேன்.

2003-ல் ஏலச்சீட்டு எடுத்து என் நண்பர் சீனிவாசன் உதவியுடன் ரூ.6,900 செலவில் கிளாம்ப் மெஷினை சொந்தமாக வாங்கினேன். இரண்டு ஆண்டு காலம் இரவு, பகல் பார்க்காமல் உழைத்தேன். அதில் கிடைத்த சிறிய அளவிலான லாபத்தை தேனீயை போன்று சேகரிப்பேன். பின் 2005-ல் ஆறு மெஷின்களை வாங்கினேன். 

அந்த சமயத்தில், இரண்டு பேர் எனக்கு நல்லது செய்வதாக சொல்லி, என் தொழிலில் சிறிது முதலீடு செய்துவிட்டு, என்னுடன் இணைந்துக் கொண்டனர். நல்ல லாபம் கிடைத்ததைப் பார்த்த அவர்கள், ‘உனக்கு மெஷினுக்கான முழு தொகையையும் தந்துவிடுகிறோம். எங்களிடம் பணி ஆளாக மட்டும் இருந்துகொள்’ என்று கூறினர். நான் ‘முடியாது’ என்றேன். ஆனால், அப்போது நான் 18 வயது பையன் என்பதால், என்னை எளிதாக ஏமாற்றிவிட்டார்கள்’’ என்று கூறியவர், புது காருக்கான புக்கிங் புத்தகத்தில் கையெழுத்து போட்டு, முகவரை அனுப்பி விட்டு,  தொடர்ந்து பேசினார். 



‘‘சொந்தத் தொழில் கைதவறிப் போனதால், வேறு வழியின்றி ஓராண்டு காலத்துக்கு கிளாம்பினை சாத்தூரிலிருந்து கேரளாவுக்குக்  கொண்டு செல்லும் முகவர் வேலை செய்தேன். மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அந்த வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில், சாத்தூரில் கிளாம்பினை வாங்கி, இரவு 12.45 மணிக்கு  கொல்லம் பாசஞ்சர் ரயிலில் ஏறி, அதிகாலை கேரளாவில் உள்ள பரவூரில் இறங்கி, ஆட்டோவில் பயணம் செய்து, உரியவரிடம் கொண்டு சேர்ப்பேன். உடனே அடுத்த நாளுக்கான ஆர்டர் எடுத்துவிட்டு, பரவூரில் ரயில் ஏறி கொல்லம் சென்று, அங்கிருந்து புனலூர் ரயில் நிலையம் வழியாக சிவகாசி வழியாக மதுரை செல்லும் ரயிலினைப் பிடித்து சாத்தூர் வந்துவிடுவேன். மீண்டும் அன்றிரவே கிளாம்பினை எடுத்துக் கொண்டு, கேரளா செல்லும் ரயிலில் ஏறிவிடுவேன். இப்படி  தொடர்ந்து வேலை இருக்கும். சிறிது நேரம்கூட தூங்க முடியாது’’ என்று கூறியவருக்கு வந்த போனை அழுத்தி மலையாளத்தில் பேசிவிட்டு நம்மிடம் தொடர்ந்தார். 

‘‘பிறகு 2006-ல் நாமே சொந்தமாக செய்தால் என்ன? என்று தோன்றியது. ஹரிபாலகிருஷ்ணன் என்பவரிடம் மூன்று மெஷின்களை ரூ.2,000 அட்வான்ஸ் செலுத்தி, மாதம் ரூ.200 வாடகைக்கு வாங்கினேன். அந்த சமயத்தில் என்னை வளர விடாமல் தடுக்க பல இடையூறுகள் வந்தன. எனினும் உழைத்துக்கொண்டே இருந்தேன். இரவு, பகல் பார்க்காமல் உழைத்தால் மாதம் ரூ.8,000 வருமானம் வரும். அதில் ரூம் வாடகை ரூ.350, மின் கட்டணம்  ரூ.250 என பல வழிகளில் செலவாகும். அந்த சமயத்தில் வங்கியில் கடன் கேட்டேன். நல்ல பின்புலம் இல்லாத காரணத்தால் தவிர்த்தனர். 

‘‘அதன்பிறகு விற்பனை முறையில் சிறிது மாற்றத்தை கொண்டுவந்தேன். நானே நேரடி யாக கடைகளுக்குப் போய் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. சிறிது, சிறிதாக பணம் சேமித்து படிப்படியாக மெஷின்களை வாங்க ஆரம்பித்து வேலைக்கு ஆட்களை அமர்த்தினேன். இன்று வங்கிகள் என்னைத் தேடி வந்து கடன் கொடுக்கின்றன. மின்சாரத்தில் இயங்கும் ஒரு மெஷின் உட்பட 65 மெஷின்கள் உள்ளன. என் தொழிற்சாலையில் 25 ஆண்கள், 30 பெண்கள், 22 வெளி மாநிலத்தவர்கள பணியாற்றுகிறார்கள். அதில் மாற்றுத் திறனாளிகளும் அடங்கும்’’ என கூறியதைத் தொடர்ந்து, ஒரு மணிச் சத்தம் கேட்க, அவரது தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட சென்றனர். 

‘‘எனது தொழிற்சாலையில் தயாரிக்கக்கூடிய கிளாம்புகள் கேரளா, ஆந்திரா, சென்னை, பெங்களுரு என செல்கிறது. நாம் தொழிலில் உயர வேண்டுமெனில், யார் புகழ்ந்தாலும், திட்டினாலும் செவி சாய்க்கக் கூடாது’’ என்று தொழிலில் வளர உதவும் மந்திர சொல்லுடன் முடித்தார் பொன்ராஜ்.

‘‘அப்பா சாப்பிட வாங்க’’ என்ற குரலுடன் மகன் விஸ்வாதன், தனது அக்கா வினுஜா மற்றும் தாய் பிரியாவுடன் அழைக்க, நாம் விடை கொடுத்துவிட்டுப் புறப்பட்டோம்.

No comments:

Post a Comment