Monday, August 5, 2013

தேடினால் கிடைக்கும் புதையல்

உங்கள் அனுபவத்தைப் போன்ற சிறந்த தங்கப் புதையல் வேறு எதுவும் இருக்க முடியுமா என்ன? அதில் தான் உங்களின் திறமைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் ஆர்வங்கள் புதைந்திருக்கின்றன. அவற்றை ஆராய்ந்தாலே வேண்டிய புதையலை எடுக்கலாம். தங்களைத் தாங்களே தெரிந்து கொள்வது, தங்கத்தை தோண்டி எடுப்பதைப் போன்ற கடும் உழைப்பைக் குறிக்கும், ஆனால் அதனால் கிடைக்கும் பலன் மேலானது. 

நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் - அடுத்து வரும் பத்து வருடங்களில் நான் என்னவாக வேண்டும்? எந்த இலக்கை அடைய வேண்டும்? எந்த மாதிரியான உத்யோகம் அல்லது தொழிலில் ஈடுபட வேண்டும்? எவ்வளவு வருமானம் ஈட்ட வேண்டும்? 

கருத்துக் கணிப்புகளிலிருந்து, தங்களுடைய தற்போதைய வருமானத்தை விட மூன்று மடங்கு கிடைத்தால் மக்கள்திருப்தி அடைவார்கள் என்பது தெரிய வந்துள்ளது. தங்களுக்கு எப்படி?

நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் - வரும் ஐந்து வருடங்களில் எவ்வளவு பணம் நான் சேர்க்க விரும்புகிறேன்? எத்தகைய கார், வீடு வாங்க வேண்டும்? எவ்வித பொழுதுபோக்கு? மீன் பிடித்தல், படகு ஓட்டுதல், தடகள விளையாட்டு, கோல்ஃப், டென்னிஸ், போலிங், சீட்டு, செஸ் - இவற்றில் எவை? இந்த பொழுதுபோக்குகளில் எவையெவை என்னுடைய விருப்பத்திற்கேற்றவை? 

நாளிதழ்களில் நான் முதலில் படிக்கும் பக்கம்? என் ஓய்வு நேரங்களை எவ்வாறு செலவிட வரும்புகிறேன்? எப்படிப்பட்ட திரைப்படங்கள் எனக்கு பிடிக்கும்? எந்தெந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்? எவ்வாறான புத்தகங்கள், பத்திரிக்கைகள் எனக்கு பிடிக்கும்? நாவல்களா? கதை புத்தகங்களா? அல்லது மற்ற படைப்புகளா? எனக்கு மிகவும் பிடிக்கும் தலைப்புகள்?

இவ்வாறு தங்களைப் பற்றி அறிந்து கொண்ட சில அல்லது அனைத்துத் தகவல்கள் வாயிலாக ஒரு பொதுவான சாராம்சம் புலப்படும். அதைத் தெரிந்து கொண்டீர்களா? 

மேலும், நீங்கள் மேற்கொண்ட பயணங்களில் பிடித்தவை, பிடிக்காதவை எவை? உங்களுக்கு, மக்கள், யோசனைகள், வார்த்தைப் பிரயோகம், எண்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள விருப்பமா? உங்களுக்கு விருந்துக்குப் போவதற்குப் பதில் ஒரு புத்தகத்தைப் படிப்பதில் தான் அதிக விருப்பமா? உங்களைப்பற்றி நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? சகஜமானவரா? கூட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பவரா? நடுநிலையானவரா? எவற்றினால் நீங்கள் அதிகம் கற்றுக் கொள்கிறீர்கள்? கண்களாலா? காதுகளாலா? அல்லது செய் முறையினாலா? 

மிகச்சிறிய சாதனையே ஆயினும் அவை உங்களை மகிழ்வித்திருந்தால், அவற்றைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். மற்றவர்கள் அதை பாராட்டாவிட்டாலும் கவலையில்லை. 

ஆரம்ப சாதனைகளில் இரண்டு அம்சங்கள் தேவை: முதலாவது, நீங்கள் அவற்றைச் செய்வதில் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும்; ஆகையால் அவை சுலபமாகவும், இயற்கையாகவுமே அமைந்திருக்கும். இரண்டாவது, நீங்கள் பெருமிதம் கொள்ளுபடியான சாதனையாக அமைந்திருக்கும் - உலகமே அதிரும்படியானதல்ல - ஆனால் நீங்கள் திருப்தி அடையும் வண்ணம் கொண்டது.

இங்கு தந்திருக்கும் கேள்விகளும், யோசனைகளும் உங்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் சாதனங்களே. உங்கள் எதிர்பார்ப்புகளை, திறமைகளை, தனிச்சிறப்புகளை, ஆற்றலை, உங்களின் முழு சக்தியை, இந்த நோக்கு வெளிக் கொணரும். 

உங்களுக்கு ஒரு திருப்பு முனை அமைந்தால் (நீங்கள் அரிய செயல் ஏதேனும் மேற்கொண்டால்) அவற்றை முன்பு அறிந்து கொண்டவற்றுடன் ஒப்பிட்டும், சேர்த்தும் பாருங்கள். ஆரம்ப சாதனைகளில் காணப்பட்ட ஏதேனும் ஒன்றில் அல்லது சிலவற்றில் காணப்பட்ட தன்மைகள், அடையாளங்கள், அம்சங்கள் ஆகியவற்றை அலசவும். அவற்றில் காணப்பட்ட ஒன்று அல்லது இரண்டு அல்லது மேற்பட்ட குணங்கள் தற்போதைய சாதனையிலும் காணப்படும்!

ஒரே மந்திரம் தான் - தங்களின் சாதனைகளை பட்டியலிடுங்கள்; அவற்றை ஒப்பிடுங்கள், ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்திப் பாருங்கள் - அவற்றின் 'பொதுத்தன்மை' என்ன என்று தெரியும்.

தங்களின் எல்லா (அண்மை மற்றும் பழைய) சாதனைகளுக்கும், தங்களின் திறமைகள், தனித்தன்மைகளே காரணம். அவற்றை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். உங்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். உங்களுக்குத் தான் தெரியும் எந்தச் செயல்கள் தங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும், சுலபமாக இருக்கும், பெருமிதம் கொள்ளச் செய்யும் என்று. அப்படித் தம்மையே அறிகிறவர்கள்தான் வெற்றிப்படிகளில் உயரம் செல்பவர்கள்!

எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும் தெரிந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment