Monday, August 5, 2013

இருவகை மகிழ்ச்சிகள்

மனிதன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியையே தேடுகிறான். மகிழ்ச்சிக்காகவே அனைத்தையும் செய்கிறான். அந்த மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாடுபடுகிறான். மகிழ்ச்சியே அவன் வாழ்வின் லட்சியமாக இருக்கிறது. ஆனால் அவன் மகிழ்ச்சியின் தேடலில் தன்னை இழந்து விடுகிறானா இல்லை, தன்னை இனம் கண்டு கொள்கிறானா என்பது அவன் தேடும் மகிழ்ச்சியின் தன்மையில் தான் இருக்கிறது.

கௌதம புத்தர் மகிழ்ச்சிகளை இருவகையாகப் பிரிக்கிறார். அதை வைத்தே மனிதன் அந்த மகிழ்ச்சிக்காக செல்ல வேண்டுமா அல்லது தவிர்க்க வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டும் என்கிறார். “எந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் நம் நல்ல குணங்கள் குறைந்து தீய குணங்களும், தீய விளைவுகளும் அதிகரிக்கின்றனவோ அந்த மகிழ்ச்சியை மனிதன் விலக்க வேண்டும். எந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் நற்குணங்கள் அதிகரித்து நல்ல விளைவுகளும் ஏற்படுகின்றனவோ அந்த மகிழ்ச்சிக்காக மனிதன் முயல வேண்டும்”

ஒரு குறிப்பிட்ட ஓய்வு மாலை நேரத்தில் மூன்று இளைஞர்கள் தனித்தனியாக மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து கோப்பை கோப்பையாக மது அருந்திக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி வாசலில் அமர்ந்து போகிற பெண்களை எல்லாம் கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்தாடிக் கொண்டிருக்கிறான். இந்த மூன்று இளைஞர்களுமே நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நேரம் போவதே தெரியாமல் தான் இருக்கிறது.

ஆனால் புத்தரின் அளவுகோலை வைத்து மகிழ்ச்சியை எடை போட்டுப் பார்த்தீர்களானால் முதலாமவன் மகிழ்ச்சி அவன் உடலைக் கெடுக்கிறது, இரண்டாமவன் மகிழ்ச்சி அவன் மனதைக் கெடுக்கிறது, மூன்றாமவன் மகிழ்ச்சி அவனுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த ஒரு நாள் மகிழ்ச்சியால் பெரிதாக எந்த விளைவும் வெளியே தெரியாமல் போகலாம். ஆனால் மூன்று பேரும் தொடர்ந்து பல காலம் அந்த மகிழ்ச்சியிலேயே திளைத்தார்கள் என்றால் ஒரு குடிகாரனும், ஒரு போக்கிரியும், ஒரு கால்பந்தாட்ட வீரனும் உருவாகக் கூடும். மகிழ்ச்சியுடன் காலம் கழித்தவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பது அந்த மகிழ்ச்சி எப்படி அவர்களுக்கு ஏற்பட்டது என்பதைப் பொறுத்து தான்.

ஹெர்மன் ஹெஸ்ஸே என்ற இலக்கியத்திற்காக நோபல் பரிசு வாங்கிய ஜெர்மானிய எழுத்தாளர் எழுதிய “சித்தார்த்தா” என்ற நாவலின் கதாநாயகனான சித்தார்த்தன் தியான முறைகளையும், பல சூட்சும சித்திகளையும் அறிந்தவன். அவன் ஓரிடத்தில் நண்பன் கோவிந்தனிடம் விளையாட்டாகச் சொல்வான். “ தியானம் என்பது என்ன? உடல் மறந்து கிடப்பதும், உபவாசம் இருப்பதும், மூச்சை அடக்குவதும் எல்லாம் என்ன?அகத்தை விட்டுப் பறப்பது தானே! நான் என்ற வேதனையிலிருந்து சற்றே தப்பித்துக் கொள்ளும் தந்திரங்கள் தானே! உயிர்த் துயரங்களையும் தொல்லைகளையும் சற்றே மறந்திருக்கின்ற தன் ஏமாற்றம் தானே! எருதுகள் பூட்டி வண்டியடித்து அலுத்தவனும் இதே வழியைத் தானே பின்பற்றுகிறான். ஏதோ ஒரு விடுதியில் நுழைந்து கொஞ்சம் பனை நீரையோ, புளித்த காடியையோ ஒரு மொந்தை போட்டு விட்டால் எல்லாத் துன்ப நினவுகளையும் அதில் மூழ்கடித்துக் கொண்டு விடுகிறான். அப்போது அவனுக்கு சுய உணர்வு போய் விடுகிறது. உயிர்த் துன்பங்களை அவன் அறிவதில்லை.”

அவன் நண்பன் கோவிந்தன் கூறுவான். “குடி வெறியன் ஏதோ ஆறுதல் பெறுவது சரி தான். சற்று நேர அமைதியும் ஓய்வும் கூட பெறலாம். ஆனால் போதை தெளிந்து பார்க்கும் போது எல்லாம் முன்னிருந்தபடியே அவன் பார்க்க நேரிடும். இதனால் அவன் நுண்ணறிவு பெற்று உயர்ந்து விடுவதில்லை. ஒருபடி கூட மேலேறி விடுவதில்லையே”

வாதத்திற்கு என்று பார்க்கும் போது இருவரும் தன்னிலை மறந்து மகிழ்ச்சி பெறுகிறார்கள் என்றாலும் முடிவில் ஒருவன் தன் பழைய நிலையிலிருந்து ஒரு படி உயர்ந்தும், மற்றவன் ஒரு படி தாழ்ந்தும் போகிறது தான் புத்தர் சுட்டிக் காட்டுவதும்.

எனவே மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது வாழ்வின் அர்த்தமும், தேவையும் கூட தான். ஆனால் மகிழ்ச்சியின் தரத்தை மட்டும் அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளுங்கள். புத்தர் சொன்னது போல முடிவில் ஏதாவது விதத்தில் நீங்கள் உயர்வதும், பயன் பெறுவதும் மிக முக்கியம். அது தான் உங்கள் மகிழ்ச்சியின் வகையை அளக்க உதவும் சரியான அளவு கோல்.

இன்று அடையும் மகிழ்ச்சிகள் எல்லாம் நாளைய துக்கத்தின் விதைகளாக இருந்து விட அனுமதிக்காதீர்கள்.


இன்றைய மகிழ்ச்சிகள் உங்கள் தரத்தை குறைத்து விடவும் அனுமதிக்காதீர்கள். அப்போது தான் உங்கள் மகிழ்ச்சிகள் உண்மையான மகிழ்ச்சிகளாக இருக்கும். அந்த மகிழ்ச்சிகள் நாளையும் நீடிக்கும். நாளை உங்களை பச்சாதாபத்தில் ஆழ்த்தாது.

இது தான் மகிழ்ச்சி என்று ஓரிரண்டை மட்டும் வைத்துக் கொண்டு கடைசியில் அலுப்படைந்து போகாதீர்கள். மகிழ்ச்சி என்ற பெயரில் உங்கள் தரம் தாழ்ந்து விடாதீர்கள். உங்கள் திறமைகளை நீட்டிக்கும் செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி பெறுங்கள். வாழ்வின் புதிய புதிய பரிமாணங்களைக் கண்டு களியுங்கள். அந்தப் புதியனவெல்லாம் உங்களைப் புதுப்பிப்பதாகவும், புதிய மைல்கல்களை அடைய வைப்பனவாகவும் இருக்கட்டும்.

ஆறறிவை ஐந்து நான்கு என்று குறைத்து விடும் மகிழ்ச்சிகள் உண்மையில் மகிழ்ச்சிகளே அல்ல. மகிழ்ச்சியின் போர்வையில் உங்களைத் துன்பப் படுகுழியில் வீழ்த்த வரும் தூண்டில்கள் அவை. மகிழ்ச்சியில் ஆழ்ந்து கிடக்கும் தருணங்களில் கூட இந்த உண்மையை மறந்து விடாதீர்கள். தூண்டிலா, ஏணியா என்று மகிழ்ச்சியின் தருணங்களிலும் ஒரு முறை விழிப்புடன் கேட்டுக் கொண்டால் அது உங்களுக்குப் பெரிய பாதுகாப்பாகவும், வாழ்க்கைக்குப் பெரிய வழித்துணையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment