கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் நவோமி எய்சென்பெர்கர் அவர்கள் அவமானம், நிராகரிப்பு போன்ற உணர்வுகள் மூளையில் வலி ஏற்படுத்தக் கூடியவை என்று கண்டறிந்துள்ளார்.
ஒரு உரையாடலின் போதோ, குழுவினராக இருக்கும் போதோ, பணிபுரியும் இடத்திலோ நிராகரிக்கப்படுதல் அல்லது ஒதுக்கப்படுதல் மிகுந்த வேதனை தரக்கூடியது. உண்மையாக சொல்வதென்றால் முகத்தில் அடித்தாற்போன்ற உணர்வினைப் பெறுவீர்கள். என்ன உண்மைதானே?
உங்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்த வேதனை தரும் நினைவிலிருந்து மீள்வது சிறிது கடினம்தான். இன்னமும் தெளிவாகச் சொல்வதென்றால், கத்தி அல்லது வாள் கொண்டு உங்கள் உடலில் செலுத்துவதற்கு நிகரான வேதனையை உணர்வீர்கள். இது போன்ற உணர்வுகளே வேதனை தரும் நினைவுகளிலிருந்து மீள்வதற்கு தடைகளாக அமைகின்றன. வலியின் வேகம் அதிகரிக்கும் போது தடைகளும் வலிமை பெறுகின்றன. இதை சரி செய்ய உங்களுடைய உடல், மனது மற்றும் உணர்வுகளை ஒருமுகப்படுத்தி ஒரு நிலைக்குக் கொணர்தல் வேண்டும்.
உடலுக்கு ஏற்படக் கூடிய வலி மற்றும் வேதனைகளை மருத்துவரின் உதவியுடன் குணப்படுத்தலாம். ஆனால் மருத்துவரா உங்களைக் குணப்படுத்துகிறார்? உண்மை என்னவென்றால் உங்களுடைய உடல் குணமடைவதற்காக மருத்துவர்கள் உதவுகிறார்கள். அவர்கள் அளிக்கும் உதவிகளைக் கொண்டு குணமடைகிறது உங்களுடைய உடல்.
அதே போல் மனதின் வேதனைகளும் உதவிகளைக் கொண்டு குணமடைந்திட வேண்டும். அது போன்ற உதவிகள் சிலவற்றைக் காண்போம்.
அவைகளில் ஒன்று காலம். காலம் ஒரு நல்ல மருந்தாக உதவும். ஆனால் அதற்காக பல வருடங்கள் வேதனையில் வாழ்ந்திட எவராலும் முடியாது. இதற்கென தனித்திறமை வாய்ந்த வல்லுனரின் உதவியை நாடுவது மற்றொரு வகை உதவி.
வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் பல வகையான சிகிச்சைகள் பலன் தருபவையே.
சிகிச்சைகள் எதுவும் பெறாமல் இருப்பதும் ஒரு விதமான சிகிச்சையே.
உங்கள் வேதனைகளிலிருந்து மள்வதற்காக பல ஆயிரங்களை செலவிடுமுன், ஓரு எளிய பயிற்சியை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம்.
இப்பயிற்சி உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை மாற்றாது. மாற்றவும் முடியாது. ஆனால் பயிற்சி உங்கள் உணர்வில் மாற்றம் ஏற்படுத்தும். உங்களுடைய உணர்வுகளை பிரித்துப் பார்க்க உதவும். நிகழ்வுகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும்.
பயிற்சியை ஆரம்பிப்போமா?
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல நிகழ்வையோ அல்லது விருப்பமான ஒரு கற்பனை நிகழ்வையோ எண்ணிக் கொள்ளுங்கள். அதை ஒரு காட்சியாக பார்க்க முயலுங்கள். காட்சியைப் பெரிதாக்கிப் பார்க்க முயலுங்கள். மேற்கூறிய வாக்கியங்களை வேகமாக படித்திருந்தால் நிதானமாக பயிற்சியை செய்து பாருங்கள். அற்புதமான உணர்வினைப் பெறுவீர்கள்.
இப்போது எதிர்மறையாக செய்து பாருங்கள். அந்தக் காட்சியை சிறிது சிறிதாக உங்களுக்கு தெளிவற்ற தூரத்தில் கொண்டு செல்லுங்கள். இப்போது உங்களுள் ஏற்படக்கூடிய மாற்றத்தையும் உணருங்கள்.
காட்சி பெரிதாகவும், தெளிவாகவும் தெரியும்போது எவ்வாறு உணர்கிறீர்கள்? காட்சி சிறிதாக தெளிவற்று தெரியும்போது உங்களுள் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா? காட்சி தெளிவாகவும், பெரிதாகவும் தெரியும்போது மகிழ்ச்சியடைகிறீர்கள். அதேநேரம் சிறிதாகவும், தெளிவற்றும் காணும்போது உணர்வுகளற்று இருக்கிறீர்கள்.
இப்பயிற்சி உங்களுக்கு வேதனையளிக்கூடிய நிகழ்வுகளிலிருந்து மீள்வதற்கு எவ்வாறு உதவுகிறதென்று பார்ப்போமா? உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு நினைவை காட்சியாக எண்ணிக் கொள்ளுங்கள். அதை பெரிதாக்கி அருகில் தெளிவாக காணும்போது நீங்கள் அனுபவிக்கக்கூடிய வேதனை அளவற்றது. அதே காட்சியை சிறிதாக தொலைவில் தெளிவற்று காணும் போது வேதனை குறைவதை உணர்வீர்கள்.
தன்னிரக்கம், மோசமான நிலை மற்றும் வாழ்வில் யாதொரு பிடிப்புமற்ற நிலை போன்ற எண்ணங்கள் உள்ளவர்கள் தெளிவான, பெரிதாக்கப்பட்ட, விருப்பமற்ற காட்சிகளை மிக அருகில் காண்பர். அவர்களால் மகிழ்ச்சியளிக்கக் கூடிய எண்ணங்களை நினைத்துப் பார்க்க முடியாது. அவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் சிறந்த மாற்றத்தைப் பெறுவார்கள்.
நினைவுகளும் உணர்வுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. அதனாலேயே பிறந்த நாள், திருமண நாள், சண்டையிட்ட நாள், அவமானமடைந்த நாட்கள் போன்றவைகளை நாம் எளிதாக நினைவில் கொள்கிறோம். அது போன்ற நினைவுகள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆதலால் இப்பயிற்சியைப் பின்பற்றுவது நன்கு பலனளிக்கும்.
வேதனை தரும் நினைவுகளை சிறிதாக்கி உங்களிடமிருந்து விலகுவதாக எண்ணிக் கொள்ளுங்கள். நினைவுகள் விலகி மறைவது போல அவை ஏற்படுத்தும் வேதனைகளும் விலகி மறையும்.
No comments:
Post a Comment