Saturday, February 1, 2014

மர்பி விதிகள் போட்ட குட்டி விதிகள்

மர்பி விதிகள் போட்ட குட்டி விதிகள் 

1.நம் மீது அன்பு செலுத்துபவர்கள் எப்போதும் நம்மை  விட்டுத் தூரமாகத்தான் இருக்கின்றார்கள்.

2.நம் மீது அன்பு செலுத்துபவர்கள் யார் என்றே நமக்கும் தெரியாது அவர்களுக்கும் தெரியாது.

3.நாம் எப்போதும் நமக்குப் பிடிக்காத மேல் அதிகாரியின் கீழ் தான் பணிபுரிந்து கொண்டிருக்கின்றோம்.நமக்குக் கீழ் பணிபுரிபவர்களும்  இப்படித்தான் நினைக்கின்றார்கள்.

4.நல்ல வேலைக் காரர்கள் எப்போதும் நமக்குப் பக்கத்து வீட்டில் தான்  வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

5.நமக்கு நல்ல கருத்து தோன்றும் போது யாரும் நம்மைப் பேச அழைப்பதில்லை.நாம் பேச அழைக்கும் போது மனதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.

6.நம்மிடம் வேலைக்குச் சேர்ந்தபின்புதான் நல்ல வேலைகாரனுக்கு எல்லா சோதனையும் வந்து அவன் கெட்டவன் என்று பெயர் எடுப்பான்.

7.நம்மிடம் ஒரு கோடி ரூபாய்   பணம்  வரும் வரை நமக்கு ஒரு கோடி ரூபாய் வைத்திருப்பவர்களைப் பிடிக்காது .

8.நல்ல கருத்துக்கள் நிறைந்த சிந்தனையானது நாம் எப்போது ஒரு துண்டு பேப்பரும் பென்சிலும் கூட இல்லாமல் தனியாக இருக்கின்றோமோ அப்போது தான் மின்னல் போலத் தோன்றி மறையும்.வீட்டுக்கு வந்து எப்படி நினைத்துப் பார்த்தாலும் நமது நினைவுக்கு வருவதில்லை.

9.மற்றவர்களுக்குச் சொல்ல எப்போதும் நம்மிடம் நிறைய அறிவுரைகள் இருந்து கொண்டே இருக்கும்.அதனை நாம் சொன்னாலும் அதை யாரும் கேட்டுக்  கடைப்பிடிக்க மாட்டார்கள்  என்று எல்லோரும் நினைத்துக் கொண்டே இருக்கின்றோம்.

10.நமக்கு நல்ல ஆன்மீகச் சிந்தணை வரும் போது தான் ஒரு சாமியார் தவறு செய்ததாக மாட்டிக் கொள்கின்றார்.

11.நாம் நல்ல ஆடை மனதிற்குப் பிடித்தாற்போல் அணிந்து கொண்டு சென்றால் அன்றுதான் என்றும் எதிராக வரும் அந்தக் கல்லூரியில் படிக்கும் பெண்ணைப் பார்க்க முடியாது.

12.நாம் யாரிடமாவது நமது திறமையைக் குறித்து பறை சாற்றிவிட்டு வீடு வந்து சேர்ந்திருக்க மாட்டோம் அந்தத் திறமையே  நம்மிடம் சுத்தமாகக் கிடையாது என்று ஒரு நிகழ்வு நடை பெறும்.

13.உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம் தாங்கள் யார் என்றும் தங்களது உண்மையான வாழ்வின் நோக்கம் என்ன என்றும் தெரியாமலேயே இருக்கின்றார்கள்.இப்படித்தான் எல்லா மனிதர்களும் நினைக்கின்றார்கள்.

14.நாம் நன்றாகச் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டோம் என்று நினைக்கும் போதுதான் எதிர்புற வளைவில் இருந்து ஒருவன் கண்மூடித்தனமாக வேறு பக்கம் பார்த்துக் கொண்டே தனது சைக்கிளை நம்மை நோக்கி ஓட்டிக் கொண்டு வருவான்.

15.நாம் சரியென்று வாழ்வின் முன்னேற்றத்திற்காகக் கடைப்பிடித்து வந்த முக்கியமான தத்துவங்களும் கொள்கைகளும் நமக்கு நன்கு மறந்து போயிருக்கும்.எப்படி நினைத்தாலும் நினைவிற்கே வராது.

16.நாம் செய்தது நியாயம் தான் என்று நான்கு  பேர்கள் சொல்லுவார்கள் என்னும் செயலை நாம் செய்திருக்கின்றோம் என்று நினைக்கும்  போது தான் யாரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள்.

17.நாம் நமது நிலத்திற்கு வேலி போடலாம் என்று எண்ணும் போது தான் பக்கத்து நிலத்திற்காரன் அதி ல் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்திருப்பான்.

18.நாம் ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொண்டு எல்லோரிடமும் சொல்லலாம்  என்று போனால் அன்று அதனை ஒரு அற்ப விசயமாக எல்லோரும் சொல்லுவார்கள்.யாரும் அதனைப்  பற்றி பேச மாட்டார்கள்.

19.நாம் ஒரு புத்தகம் எழுதலாம் என்று பாதி கஷ்டப்பட்டு பல நாட்கள் எழுதிவிட்டு ஒரு நாள் தற்செயலாகப் பார்த்தால் இணையத்தில் அதுபற்றிய பல   நல்ல  புத்தகங்கள் இலவச பதிவிறக்கத்திற்காக இருக்கும்.

20.இன்று தான் ஒரு புதிய சிந்தனை மனதில் மின்னல் போல வந்து  அந்த சிந்தனை வந்த போது நமக்கு பென்சிலும் பேப்பரும் கிடைத்து எழுதி அதனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருவதற்குள் அது ஒரு அற்ப சிந்தனையாக நமக்கே தெரியும்.

21.இன்றுதான் எல்லோரும் கவரும் வண்ணம் நாம் இருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே சார் கண்ணிலே பீழை மாதிரி ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கின்றது என்று பக்கத்தில் இருப்பவர் சொல்லுவார்.

22.நாம் நல்ல வித்தியாசமான சிந்தனைகளாகச் சிந்திக்கின்றோம்  என்னும் போது தான் அதைவிட  பல வித்தியாசமான சிந்தனைகள் அடங்கிய பல  புத்தகங்கள்  பல நூற்றாண்டுகளுக்கு முந்தியே எழுதப்பட்டுள்ளது என்று நமக்குத் தெரிய வரும்.

23.இந்த உலகம் மாயையானது எல்லாமே பொய்யானது இன்பமோ துன்பமோ என்று எதுவுமே இல்லை என்று நாம் உறுதியாக முடிவு செய்து இருக்கும் போது தான் ஊரில் இருந்து போன் வரும் மனைவியிடம் இருந்து ஏங்க கேஸ் சிலிண்டர் தீர்ந்து  போச்சு உடனே ஏற்பாடு பண்ணுங்க என்று.

24.நமக்கு நன்கு  பழக்கமான மேல் அதிகாரி மாறுதல் ஆகி நாம் பணிபுரியும் ஊருக்கு வரும் போது அவர் நம்முடன் பணிபுரியும்  எல்லோருக்குமே ஏற்கனவே நன்கு  பழக்கமானவராக இருப்பார்.

25.நம்மிடம் ஐடியா கேட்டு தங்களது வேலைகளைச் செய்பவர்கள் தங்களது சந்தேகம் நமக்குத்தான் வந்தது போலப் பேசுவார்கள்.நாம் கொடுத்த ஐடியாவை அவர்கள் தான் நம்மிடம் கூறியது போலக் கூறுவார்கள்.நாம் தான் சந்தேகம் கேட்டதைப்  போலக்  கூறுவார்கள்.

26.நாம் யாராவது ஒரு பெரிய மனிதர்  நமக்குப் பழக்கம் அவரிடம் இக்கட்டில் உதவி கேட்கலாம் என்றிருந்தால் அவர் நமது  வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருப்பார்.

27.நாம் ஒரு நல்ல கவிதை எழுதியிருக்கின்றோம் என்று நினைத்தால் மறு நாள் நமக்கே அதனைப் பிடிக்காது.

28.நமக்கு ஒரு புதிய சிந்தனை வந்துள்ளது என்று நினைக்கும் போது அது ஒரு அற்ப சிந்தனை என்று மற்றவர்கள் எல்லோருக்கும் தெரிந்து நமக்குத் தெரியாமலேயே இருக்கும்.

29.ஒருவர் நம் மீது வெறுப்பாக இருக்கும் போது தான் அவர் மீது நமக்கு மிகுந்த அன்பு ஏற்படும் .

30.நமக்கு மற்றவர்களோடு உரையாடத் தெரியவில்லை என்று மற்றவர்கள் நினைக்கும் போது தான் நாம் நிறையப் பேசிக் கொண்டிருப்போம்.

31.நமக்குத் தீவிர கடவுள் நம்பிக்கை ஏற்படும் போது நாம் மருத்துவமனை படுக்கையில் அறுவைசிகிச்சையில் இருந்து நகர முடியாதபடி மயக்க நிலையில் இருப்போம்.

32.நமது நம்பிக்கைக்குரிய வேலையாள் எப்போதும் நாம் சரியாகச் செய்ய வேண்டும் என்று விரும்பும் காரியத்தை மட்டும் செய்யாமல் மறந்துவிடுவார்.

33.மேலதிகாரிக்கு  எந்தத்தீங்கும் வராமல் தன்னுடைய பணியைச் செய்யும் பணியாளரை அந்த மேலதிகாரிக்குப் பிடிக்காது.

34.நமது குழந்தை வகுப்பறையில் ஆசிரியரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் போது நாம் அவனை மற்றவர்களிடம் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்போம்.

35.நாம் நமது குழந்தையைக் கடினப்பட்டு ஒரு புகழ் வாய்ந்த பள்ளியில் சேர்த்துவிட்டு வீடு திரும்பும் போது தான் தற்செயலாக அந்தப் பள்ளியைப் பற்றிய குறை கூறியுள்ள ஒரு செய்தியை நாளிதழில் பார்ப்போம்.

36.நமது ஆளுகை மற்றவர்கள் மீது நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று எண்ணும் போது நாம் மற்றவர்களின் ஆளுகைக்குட்பட்டு செயல்களைச் செய்து கொண்டிருப்போம்.

37.மற்றவர்களுடைய பலவீனங்களை நாம் பார்க்கும் போது நமது பலத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு நம்மை பலவீனர்களாக மாற்றுகின்றார்கள் என்பது நமக்குத் தெரியாது.

38.நாம் அப்பாடா வாழ்க்கை நிம்மதியாகப் போகின்றது என்னும் தருணத்தில் இருந்து தான் நமது நிம்மதியிழப்புக்கான சூழ்நிலை ஆரம்பிக்கின்றது.

39.அமைதி என்பது கொந்தளிப்பில் தான் ஒளிந்து கொண்டிருக்கின்றது.

40.வாழ்க்கையைப் பிரச்சினையில்லாமல் ஓட்ட நாம் எத்தனை வழிகளைக் கடைப்பிடித்தாலும் அத்தனை வழிகளும் பிரச்சினையாகத்தான் இருக்கும்.

41.ஒரு விசயத்தை நாம் நன்றாகப் புரிந்து விட்டோம் என்று  எண்ணும் போது தான் அது பற்றிய புதிய புரியாமை மனதில் தோன்றி ஏற்கனவே புரிந்ததையும் புரியாமல் செய்து விடும்.

42.நாம் நமது புதிய நண்பர்களுடன் நமது கண்ணியத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் போது தான் பால்ய  நண்பன் வந்து நீயெல்லாம் இப்படி உயர்ந்த நிலைக்கு வருவது கனவிலும் நடக்காதது என்று அவர்களது அன்பைக்  காட்டுவார்கள்.

43.நம்மைப்  படுகுழியில் தள்ளத்தக்க திறமை வாய்ந்தவர்கள் தான் நமக்கு நமது மனம் கோணாதபடிக்கு சேவகம் செய்து கொண்டிருப்பார்கள்.

44.நாம் மற்றவர்கள் புகழ்ச்சியில் நம்மை மறந்திருக்கும் நிலையில் தான் நமது அழுக்குகளை எடை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

45.ஒரு நண்பன் தப்பானவனாக இருப்பானோ என்று நாம் நினைக்கும் அந்த நிமிடத்தில் இருந்து அவன் தப்பானவனாக மாறும் சூழல் உருவாகிவிட்டது.

46.நாம் நமது கடமைகளை சரியாகச் செய்தாலும் கூட மற்றவர்கள் எவரும் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்வது கிடையாது அவர்களும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

47.நம்மைச் சுற்றியுள்ளவர்கள்  இவன் எதிலேயாவது  மாட்டமாட்டானா என்று நினைக்கும் போது தான் நாம் நமது திறமைகளைப் பற்றிப்  பெருமை பேசிக் கொண்டிருப்போம்.

48.நம்மைப் பார்த்தவுடன் பவ்வியமாக எழுந்து வணக்கம் சொல்லுபவர்கள் நமது நல்ல குணத்தை மதித்து எழுந்து வணக்கம்  சொல்வதில்லை நமது விச குணங்களை உணர்ந்து தான் .

49.மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணும் போது  நம் மூலமாக  அவர்களுக்கு நல்லது நடக்கும்.

50.நமக்கு வரும் தீங்குகளை ஒருவர் அவர் மூலமாக நமக்குச் செய்து நமக்கு அதை நல்லதாக மாற்றுவார்.

51.நாம் வாய்விட்டுச் சிரிக்கும் போது  மற்றவர்களுக்கு அது பிடிக்காது .

52. மிகவும் முக்கியமான விசயம் நினைவுக்கு வந்து அதனை உடனடியாக மனைவியிடம் சொல்லி எச்சரிக்கை செய்ய நினைக்கும் போது நமது அலை பேசியில் டவர் தெரியாது.டவர் தெரியும் போது நமக்கு அது ஒரு முக்கியமான விசயமாகத் தெரியாது .

53.நாம் காசிக்கு போய் மகான் ஒருவரை தரிசணம் செய்து கொண்டிருக்கும் போது அவர் நமது ஊரில் உள்ள ஒரு சிறிய கோவிலைச் சொல்லி அது ரொம்ப விசேசமானது என்று கூறுவார்.

54.நாம் மிகுந்த கோபமாக இருக்கின்றோம் என்று எல்லோரும் நினைக்கும் போது நாம் அமைதியாக நமது காரியங்களைச்  செய்து கொண்டிருப்போம்.

55.நாம் அமைதியாக நமது காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் போது மற்றவர்கள் நமக்கு கோபம் ஏற்படும் செய்திகளைச் சொல்லுவார்கள்.


56.எப்போதும் நமக்கு வாடகை வீடு கிடைத்தால் வீட்டு உரிமையாளர் அதன் அடித்தளத்தில் குடியிருந்து நம்மைக் கண்கானித்துக் கொண்டே இருப்பார்.வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருந்தால் அந்த வீட்டில் குடி தண்ணீர் இணைப்புக் கூட இருக்காது.

57.நாம் எந்த வீட்டிற்கு வாடகைக்குச் சென்றாலும் அந்த வீட்டின் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டே தீரும்.மழைக் காலத்தில் வீடும் ஒழுகும்.

58.நாம் ஒரு வீட்டில் வாடகைக்கு புதியதாகக் குடியேறும் போது அந்த வீட்டின் உரிமையாளர் நமக்கு மிக மிக நல்லவராகத் தெரிவார் அவருக்கும் தான் நாம்.

59.நாம் ஒரு வாடகை வீட்டில் இருந்து வெளியேறும் போது அந்த வீட்டின் உரிமையாளர் போல ஒரு கெட்டவர் உலகில் எங்கும் இல்லை என்று தோன்றும் ,அவருக்கும் தான்.

60.இந்த விதிகளில் ஏதோ ஒன்று இருப்பது போன்று தோன்றும் ஆனால் நமக்கு அது புரியாது புரிந்தாலும் வாழ்க்கையில் தகுந்த நேரத்தில் பயன்படுத்த முடியாது.

61.ஏதாவது ஒரு விசயத்தைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்திருக்கும் போது தான் ஒரு பதிவை எழுதி முடித்து வெளியிட்டிருப்போம்.

62.நமக்கு நன்கு விளக்கமாகத் தெரிந்த விசயத்தைப் பற்றி நமக்கு பதிவிட வேண்டும் என்றே தோனாது.

63.எப்போதெல்லாம் மனதில் குழப்பங்கள் தோன்றுகின்றதோ அதுவே ஒரு பதிவைத்  தட்டச்  சரியான  நேரம் .

64.நம்மை யாரும் சினிமாவில் நடிக்க அழைக்கமாட்டேன் என்கின்றார்கள் எனக்கு நடிகர்களே   பிடிக்காது.

65.நம்மைக் கொஞ்சம் கூட மதிக்காதவர்களுக்குத்தான்   நாம்  நமது அன்பைப் பொழிந்து கொண்டிருப்போம்.

66.சின்ன "ன" "ள" வும் பெரிய "ண" "ல" வும் எங்கே போடுவது என்று நாம் தெரியாமல் இருக்கும் போதே சார்  உங்க எழுத்து நன்றாக உள்ளது  என்று நான்கு பேர்கள் சொல்லுவார்கள்.

67.நல்ல நண்பர்கள் எப்போதும் நம்முடன் தொடர்புடன் இருக்க மாட்டார்கள்.தொடர்புடன் இருப்பவர்களுக்கு நாம் தான் நல்ல நண்பர்கள்.

68.நமது  வேலையில் நாம் பண்டித்யம் பெற்று விட்டோம் என்று நினைக்கும் போது தான் மேலதிகாரியிடம் இருந்து ஒரு மெமோ வரும்.

69.நம்மிடம் சரளமாக எப்போதும் போனில் பேசும் ஒருவரிடம் நாம் ஒரு உதவி கேட்கலாம் என்று போன் செய்தால் அப்போது தான் அவர் நமது அழைப்பை ஏற்கமாட்டார்.அவர் மீண்டும் நம்மை அழைக்கும் போது நாம் அவரிடம் அந்த உதவியைக் கேட்கமாட்டோம்.

70.நான் தற்போது அசைவம் எல்லாம் சாப்பிடுவதில்லை என்று எல்லோரிடமும் அறிவித்துக் கொண்டிருக்கும் போது தான் ஒரு படாக்கான் விருந்துக்கு நமக்கு அழைப்பு வரும் .

71.நமது பெற்றோர்கள் எப்போதும் நமது சகோதரனுக்குத்தான் அதிக சலுகை காட்டுகின்றார்கள் இது சகோதரிகள்,சகோதரனும் இப்படித்தன் நினைத்துக் கொண்டிருகின்றான் சகோதரிகளுக்குச் சலுகை காட்டுகின்றார்கள் என்று.

72.நாம் ஒரு மேடையில் பேசக் குறிப்பெடுத்திருக்கும் தகவல்கள் அடங்கிய தாள் அடுத்த பேச்சுக்குத் தேடும் போதுக்  கிடைக்கவே கிடைக்காது.முதல் மேடையில் நாம் எடுத்த குறிப்புகளில் இருந்து எதையும் பேசியிருக்க மாட்டோம்.

73.நாம் ஒரு சவாலான காரியத்தை இன்றே செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்து  ஒரு இடத்திற்கு வேகமாகப் போக வேண்டும் என்று போகும்  போது தான் நமது பைக் மூன்று முறை பஞ்சர் ஆகும் வண்டியை பஞ்சர் கடைக்குத் தள்ளிக் கொண்டிருப்போம்.

74.நாம் கல்யாணத்திற்கு முதன் முதலிம் பத்திரிக்கை கொடுக்கலாம் என்று சென்றால் நமது எதிர்புறமாக நாம் முதலில் பார்த்து  மறுத்த  பெண் வந்து கொண்டிருப்பார்.

75.நாம் ஒரு விசயத்தை நன்றாகப் புரியப் புரிய நாம் எதில் இருந்து சிந்தனையை ஆரம்பித்தோமோ அதிலேயே தான் வந்து நிற்போம்.

இந்த விதிகளுக்கு மூலம் மர்பி விதிகள் தான் அதனைத் தழுவியே இந்த விதிகள் எழுதப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment