Thursday, September 11, 2014

ஸ்ரீ ரங்கநாதன் ஸ்ரீ ரங்கம் வந்த கதை

ஸ்ரீ ரங்கநாதன் ஸ்ரீ ரங்கம் வந்த கதை .........

எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அழகிய
சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் பள்ளிகொண்ட கரும்பாகிய என்
அரங்கனைக் கண்ட மாத்திரத்தில், சூடான இரும்பில் பட்ட நீர் எவ்வாறுவேகமாக உட்கவரப்பட்டு காணாமல் போகிறதோ அதுபோல், என்பாவமெல்லாம் என்னைவிட்டு பறந்தோடிவிட்டது என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து மங்களாசாசனம் செய்யப்பட்டஇத்தலம் இன்றைய இந்தியாவிலேயே மிகச் சிறப்பான தலமாகும். ஸ்ரீரங்கம்.......

திருமாலின் திவ்ய தேசங்கள் 108ல் இத்திருவரங்கம் தலையாயது
சோழநாட்டுத் திருப்பதிகளுள் முதன்மையானது. கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று பிரதானமாகச் சொல்லப்பட்ட மூன்றினுள்முதன்மையானது. அதாவது.....

கோயில் என்றால் ஸ்ரீரங்கம். 
திருமலை என்றால்திருப்பதி. 
பெருமாள் கோயில் என்றால் காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதி.

பெரிய கோயில் என்றும், பூலோக வைகுண்டம் என்றும் போக 
மண்டபம் என்றும் போற்றப்படும் இத்தலத்தை, அண்டர் கோன் அமரும்அணியரங்கமென்றும், தென்திருவரங்கமென்றும், செழுநீர்த் 
திருவரங்கமென்றும் திட்கொடிமதில் சூழ்த் திருவரங்கமென்றும் ஆழ்வார்கள்மாந்தி மகிழ்வர்.

பரமபதம், திருப்பாற்கடல், சூரிய மண்டலம், யோகிகளுடைய
உள்ளக்கமலம், இவையனைத்தும் இனியவை எனக்கருதி எம்பெருமான் ஸ்ரீ மந் நாராயணன் தானே மனமுவந்து இங்கு வந்து தங்கி, தேனும் பாலும்,கன்னலும், நெய்யும் அமுதும் கலந்தாற்போன்று மறைந்து உறைகின்றான்.

இங்கெல்லாம் மறைந்துறைகின்ற எம்பெருமான், இப்பூவுலகில் மாந்தரெல்லாம்தன்னைக் கண்ணாரக்கண்டு, தன் பேரழகை அள்ளிப்பருகிக் களிப்பெய்ததானே ஒரு அரங்கத்தைத் தெரிவு செய்து பள்ளிகொண்ட இடம்தான்ஸ்ரீரங்கம்.

எம்பெருமானின் பள்ளிகொண்ட திருக்கோலத்தையே பெயராகத் தாங்கிஸ்ரீரங்கநாதன் பள்ளியென்றே அழைக்கப்பட்ட இவ்விடம், தமிழில் திருச்சீரங்கநாதன் பள்ளியாகி அவ்விதமே அழைக்கப்பட்டு காலப்போக்கில்திருச்சிராப்பள்ளியாகி தற்போது திருச்சியாயிற்று.

இத்தலம் பற்றி எண்ணற்ற புராணங்களும், வடமொழி நூற்களும்
பண்டைத் தமிழ் இலக்கியங்களும் விவரங்களை வாரியிறைக்கிறது. 
இங்கு பள்ளி கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதன் பெருமாள் சத்தியலோகம் எனப்படும்பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்ட திருவாராதனப்பெருமாள் ஆவார்.

இப்பூவுலகில் சூரிய குலத்தில் வந்த மனு குமாரரான இட்சுவாகு 
என்னும் மன்னன் பிரம்மனைக் குறித்து கடுந்தவமியற்றினான். இவன் தவத்தைமெச்சிய பிரம்மன் இவனுக்கெதிரில் தோன்றி வேண்டிய வரம் கேள் என்றான்.

அதற்கு இட்சுவாகு, பிரம்மனே, உம்மால் தினந்தோறும் பூஜிக்கப்படும்
திருமாலின் திருவாராதன விக்ரகமே எனக்கு வேண்டுமென்று கேட்கபிரம்மனும் மறுப்பின்றி வழங்கினான். அப்பெருமானை அயோத்திக்குகொணர்ந்த இட்சுவாகு பூஜைகள் நடத்தி வந்தான். திருப்பாற்கடலில்பள்ளிகொண்ட வண்ணத்தில் உள்ள இப்பெருமானே இட்சுவாகு மன்னன்முதல் இராம பிரான் வரையில் உள்சூரியகுலமன்னரெல்லாம் வழிபட்டுவந்த குலதெய்வமாயினான்.

இட்சுவாகு மன்னனால் விண்ணுலகில் இருந்து இங்கு கொண்டுவரப்
பட்டு அவன் குலத்தோர்களால் பூஜிக்கப்பட்டு பின்பு எல்லோருக்கும்
உரியவனான். இப்பெருமாள் இட்சுவாகுவால் கொணரப்பட்டதால் இப்பெருமாள்இட்சுவாகு குலதனம் என்றே அழைக்கப்பட்டார்.

திரேதா யுகத்தில் இராமாவதாரம் மேற்கொண்ட திருமால்
இராவணனையழித்து, அயோத்தியில் பட்டம் சூட்டிக் கொண்டார்.
இலங்கையிலிருந்து தன்னுடன் போந்த வீடணனுக்கு விடைகொடுத்துஅனுப்பும்போது, தன் முன்னோர்களால் பிரம்மனிடமிருந்து கொணரப்பட்டஇந்த திருவாராதனப் பெருமாளை வீடணனுக்கு (விபீஷணனுக்கு) சீதனமாககொடுத்தார். வீடணன் இப்பெருமாளைப் பெற்றுத் திரும்பியதை வால்மீகி தமது இராமாயணத்தில்......

விபிஷனோபி தர்மாத்மா ஸஹ தைர் நைர்ருதைர்ஷபை
லப்தவா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாந்த மஹாயா

என்று கூறுகிறார்.

(வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 128 வது ஸர்க்கம், 
87 வது சுலோகம்.)

மிக்க பயபக்தியுடன் ப்ரணா வாக்ருதி என்ற விமானத்துடன்
அப்பெருமானை எழுந்தருளச் செய்து இலங்கைக்கு வீடணன்
கொண்டுவருங்காலை, வண்டினம் முரல, குயில் கூவ, மயிலினம் ஆட, செழுநீர் சூழ தன் சிந்தைக்கு இனிய அரங்கமாகத் தோன்றின, இந்த காவிரி,கொள்ளிட நதிகட்கிடையில் பள்ளி கொள்ள விரும்பிய திருமால் வீடணனுக்குசற்றுக் களைப்பையும் அசதியையும் உண்டுபண்ணிவீடணன் இப்பெருமாளைஇவ்விரு நதிக்கிடைப்பட்ட இவ்விடத்தில் சற்றே கிடாத்தினான்.

அம்மட்டே தன் உள்ளங்கவர்ந்த இடமாதலால் அசைக்க இயலா
அளவிற்கு வீடணன் செல்ல வேண்டிய தென்றிசை நோக்கி இன்றுள்ள வடிவில் பள்ளி கொண்டார்.

வீடணனோ விழுந்தான், தொழுதான், அழுதான், அலற்றினான்.
ஆற்றொன்னாமையால் அலமந்தான். இப்பகுதியை ஆண்டுவந்த 
சோழமன்னன் தர்ம வர்மன், என்பவன் இந்நிகழ்ச்சியை அறிந்து ஓடிவந்துபெருமாளையும் தொழுதுவிட்டு வீடணனுக்கு ஆறுதல் கூறினான்.

பித்துப் பிடித்த நிலையில் சின்னாட்கள் இங்கு தங்கியிருந்த 
வீடணணின் கனவில் வந்த எம்பெருமான் தான் இவ்விடத்தே பள்ளிகொள்ளத்திருவுள்ளம் பற்றியதை தெரிவித்து, நீ செல்லக்கூடிய பாதையை நோக்கியேநான் பள்ளி கொண்டுள்ளேன். கவலை வேண்டாம் என்று கூறி,ஆண்டுக்கொருமுறை வந்து தன்னை வழிபட்டுச் செல்லுமாறும் அருளினார்.

இதைத்தான் தொண்டரடிப் பொடியாழ்வார்......

“குடதிசை முடியை வைத்து

குணதிசை பாதம் காட்டி

வடதிசை பின்பு காட்டி

தென்திசை இலங்கை நோக்கி

கடல்நிறக் கடவுள் எந்தை

அரவணைத் துயிலுமா கண்டு

உடல் எனக்கு உருகு மாலோ

என் செய்கேன் உலகத்தீரே” என்பார்.,,,,,,,

பின்னர் தர்மவர்மன் அவ்விமானத்தைச் சுற்றி சிறிய கோவில் எழுப்பிவழிபாடு செய்ய ஆவன செய்தான். இக்கோவில் காவிரியாற்றின் வெள்ளப்பெருக்கால் சிதல மடைந்து, மண் அரித்துக்காடு சூழ்ந்து யாருக்கும்தெரியாவண்ணம் மறைந்து இருக்கையில் தர்மவர்மாவின் மரபில் வந்த கிள்ளி
வளவன் இக்காட்டிற்கு வேட்டையாட வந்து ஒரு மர நிழலில்
தங்கியிருக்கும்போது அம்மரத்தின் மீதிருந்த கிளி ஒன்று.......

காவேரீ விரஜா சேயம் - வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ வாஸூதேவோ ரெங்கேஸ ப்ரத்யக்ஷம் பரமம்பதம்.

வைகுண்டத்தில்உள்ள மகாவிஷ்ணுவின் கோவிலான திருவரங்கம் இருந்த இடம் இது.இப்போதும் அக்கோவிலைக் காணலாமெனத் திரும்பத் திரும்பச் சொல்லியது.இதைக்கேட்டுப் பலவிடத்தும் தேடியலைந்தும் கோவிலைக்காணாது அயர்ந்தகிள்ளிவளவனின் கனவில் தன் இருப்பிடத்தை எம்பெருமான் தானேகாட்டியருளினார். அவ்விடத்தைக் கண்ட கிள்ளி வளவன் மெய்சிலிர்த்துதொழுது நின்று மீளவும் மதிலும் கோபுரமும் எழுப்பினான். .......
கிள்ளி வளவன் ( கிளி சோழன் ) பின் வந்த சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள்,விஜயநகர மன்னர்கள், ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் ஆகியோரின்தொடர்பணியால் இன்று உள்ள அளவு உயர்ந்தோங்கி செம்மாந்து நிற்கிறதுதிருவரங்கம்.

மூலவர்
ஸ்ரீரெங்கநாதன், பெரிய பெருமாள்

நம் பெருமாள், அழகிய மணவாளன் என்னும் திருப்பெயர்களும்
உண்டு. ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டு தெற்கே திருமுகம் காட்டிய
புஜங்க சயனம்

உற்சவர்
நம் பெருமாள் (கஸ்தூரி ரங்கன் )
தாயார்
ஸ்ரீரங்க நாச்சியார், மற்றும் ஸ்ரீ தேவி , பூ தேவி ( உபய நாய்ச்சிமார்)

தீர்த்தங்கள்:

இங்கு மொத்தம் 9 தீர்த்தங்கள்

1. சந்திரபுஷ்கரணி 2. வில்வ தீர்த்தம்
3. நாவல் தீர்த்தம் 4. அரசு தீர்த்தம்
5. புன்னை தீர்த்தம் 6. மகிழ் தீர்த்தம்
7. பொரசு தீர்த்தம் 8. கடம்ப தீர்த்தம்
9. மா தீர்த்தம்

இதில் இன்று இருப்பதும், பிரதானமானதும் சந்திர புஷ்கரணியே.

ஸ்தல விருட்சம்
புன்னை
விமானம்
ப்ரணா வாக்ருதி

காட்சி கண்டவர்கள்

வீடணன், தர்மவர்மன், கிள்ளிவளவன், சந்திரன்.

சிறப்புக்கள்

இத்தலம் பற்றிய சிறப்புக்களைத் தொகுத்து தனி நூலொன்றே எழுதி
விடலாம். சிலவற்றை மட்டும் ஈண்டு நோக்குவோம்.

1) திருமகள் தினமும் வந்து பூஜித்துச் செல்லும் இத்தலம் இராமாயண
காலத்தோடு தொடர்பு கொண்டு இந்தியாவின் தேசியத்திற்கு மதமும் ஒருகாரணம் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

2) சிலப்பதிகாரத்தில் இத்தலம் கீழ்க்கண்டவாறு குறிக்கப்படுகிறது.
விரிந்த அலைகளோடு கூடிய மிகப்பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில்,திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவனும், நீலநிறம்கொண்டவனுமாகிய திருமால் ஆயிரம் தலைகளுடையவனுமாகிய ஆதிசேடன்என்னும் சிறந்த பாம்பனையாகிய பள்ளியணை மீது அழகுறச்சாய்ந்து
கொண்டிருக்கும் தன்மை நீல நிறமுடைய ஒரு மேகமானது ஒருபொன்மலையைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கிறது
.
“நீல மேகம் நெடும் பொற்குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர் தொழுதேத்த
விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தி
திருவமர்மார்பன் கிடந்த வண்ணம்”

என்கிறார் இளங்கோவடிகள்.

3) பரமபதத்தில் இரண்டு மணத்தூண்கள் உள்ளது. பரமபதத்திற்குச்
செல்வோர் இந்த மணத்தூண்களைத் தழுவி நித்ய சூரிகளாக
விளங்குகின்றனர். (நித்ய சூரி-அழிவில்லாத பேரின்பமயமான சூழ்நிலையில்எம்பெருமானுக்கு பணிவிடைபுரியும் ஆத்மாக்கள்)இதே போல் இங்குள்ளகருவறையிலும் இரண்டு மணத்தூண்கள் உள்ளன. இந்த மணத்தூண்களைத்தழுவிக்கொள்வோர் பரமபதத்து நித்ய சூரியாகும் பாக்கியம் பெறுவர், என்பதுஐதீஹம். இந்த மணத்தூண்களை பற்றிக்கொண்டு எம்பெருமானை வாழ்த்தும்நாள் எந்நாளோ என்று குலசேகராழ்வார், மயங்கி நிற்கிறார். இதோ அவரின்பாடல்,.....

“கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூனே பற்றி நின்றென்
வாயாரா என்று கொலோ வாழ்த்தும் நாளே”

4) உலகு போற்றும் காவியமான கம்ப இராமாயணத்தை கம்பர்
இங்குதான் அரங்கேற்றினார். இவ்விடம் தாயார் சன்னதிக்கு எதிரே கம்பர்மண்டபம் என்ற பெயரில் நின்றிலங்குகிறது. கம்பர் தமது இராமாயணத்தில்இரண்யனை சம்ஹாரம் செய்த வரலாற்றை விளக்குகிறார். இராமாயணத்தில்இரண்ய வரலாறு வரக்கூடாது இதை ஏற்கமாட்டோம் என அறிஞர் பலரும்உரைக்கவே, அவ்வாறாயின் எம்பெருமான் திருமுன்பு அரங்கேற்றம்நடத்துவோம் அவர் ஒப்புக் கொண்டால் அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான், என்று முடிவு கட்டி இவ்விடத்தே வந்து கம்பர் தமதுராமாயணத்தை அரங்கேற்றம் செய்யும் வேளையில் இச்சன்னதிக்குள்மேட்டுப்புறத்தில் எழுந்தருளியுள்ள அழகிய சிங்கப் பெருமாள்,கம்பரின் இராமகாதையை நாம் அங்கீகரித்தோம் என்ற கர்ஜனையுடன்பெருமுழக்கம் செய்ததாகக் கூறுவர். இந்த மேட்டு அழகிய சிங்கர் கோவில்5வது திருச்சுற்றுக்குள் 5வது மதிலுக்குள்) உள்ளது.

5) இப்பெருமானுக்கு அழகிய மணவாளன் என்பதும் ஒரு திருநாமம்.
அதாவது இவர் மிகவும் அழகான மாப்பிள்ளை ஆவார். எனவேதான் அழகியமணவாளர் ஆனார். ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளையும், உறையூர்கமலவல்லி நாச்சியாரையும் இவர் அழகான மாப்பிள்ளை திருக்கோலத்தில்ஏற்றுக் கொண்டார். தான் பேணி வளர்த்த பெண்ணான ஆண்டாளைஇப்பெருமாள் பெண்டுகொண்டு போனதைப் பற்றி பெரியாழ்வார்.......

.ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனான்பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்றவசோதை
மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறம் செய்யுங்கொலோ

- பெரியாழ்வார் திருமொழி 3-8-4
என்று மயங்கி மகிழ்வார்.

6) ஆழ்வார்கள் பன்னிருவரில் பதினோரு ஆழ்வார்களின்
மங்களாசாசனத்தைப் பெற்ற திவ்யதேசமாகும் இது. 11 ஆழ்வார்கள் 247
பாக்களில் மங்களாசாசனம் பொழிந்த திவ்யதேசம். 108திவ்யதேசங்களில்இப்பெருமை வேறெந்த திவ்ய தேசத்திற்கும் இல்லை.

12 ஆழ்வார்களில்மதுரகவியாழ்வார் வேறொன்றும் நானறியேன் என்று நம்மாழ்வார் ஒருவரைமட்டுமே மங்களாசாசனம் செய்து உய்ந்தார். இவர் எந்த திவ்ய தேசத்தையும்பாடவில்லை. திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள்
மதுரகவியாழ்வார் தவிர்த்த மீதி 11 ஆழ்வார்கள்தான். இந்த 11
ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதால் இவர் ஆழ்வார்களுகந்தஎம்பெருமான் என்று போற்றப்படுகிறார்.

No comments:

Post a Comment