வெற்றியும் தோல்வியும் நன்மைக்கே…
யார் ஒருவர் இந்த வாழ்க்கையை ஒரு உயர்ந்த தன்மையை அடைவதற்குரிய ஒரு படியாக பார்க்கிறாரோ அவருக்கு தோல்வியே கிடையாது. வாழ்வின் சின்ன சின்ன விஷயங்களையே தன் லட்சியமாக கொண்டவருக்குத்தான் வெற்றியும், தோல்வியும். இந்த வாழ்க்கையை ஒரு உயர்ந்த தன்மையை அடைவதற்குரிய ஒரு படியாக பார்ப்பவர், வெற்றி கிடைத்தால், அதை தன் நன்மைக்குத்தான் பயன்படுத்துவார். தோல்வி கிடைத்தால் அதையும் தன் நன்மைக்குத்தான் பயன்படுத்துவார்.
பொருளாதாரம் நல்லநிலையில் இருந்தபோது, முட்டாள்கள் கூட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தினர். பொருளாதாரம் நல்லநிலையில் இருந்தபோது, முட்டாள்கள் கூட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தினர். இடையே பொருளாதாரம் சிறிது வீழ்ச்சி கண்டபோது தொழிலில் நிலைத்திருக்கவும் வெற்றி பெறவும் புதிய திறமை தேவைப்பட்டது. மக்கள் தோல்வி குறித்து பயப்படுவதாக கூறுகிறார்கள். தோல்வி என்பதே துயரம்தான். அதில் பயம் என்ற மசாலாவை வேறு ஏன் தடவுகிறீர்கள்? வெற்றி என்பது எல்லோருடைய விருப்பம்தான். ஆனால் வெறும் விருப்பத்தினால் மட்டும் வெற்றி வருவதில்லை. திறமை இருந்தால்தான் வெற்றி. எந்த சூழ்நிலையும் அழகானதுதான்… நீங்கள் சொல்லலாம். “என் திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு முன் என் பணித்திறனை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அசந்து போயிருப்பீர்கள்..!” உண்மைதான். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிய சூழலை சமாளிக்கவும் ஒரு வகையான திறமை தேவைப்படுகிறது, இல்லையா? பொருளாதாரம் சிறப்பாக இருந்தபோது பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. அப்போதே பணம் குறித்த வேட்கையை நீங்கள் குறைத்திருக்கலாம். இப்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து பணவரவு குறைந்துவிட்டது. அதனால் என்ன? நிறைய பணம் கையில் இருந்தபோது வாழ்க்கையில் எதற்கும் நேரம் இல்லாமல் இருந்தீர்கள். இப்போது உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. இப்போதாவது தியானம் செய்ய முடிகிறதே என்று பாருங்கள். எனவே வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பரவாயில்லை. உயர்ந்த நிலையை அடைவதற்கு அது ஒரு படிநிலை என்று பார்த்தால் எந்த சூழ்நிலையும் மிகவும் அழகானதுதான். மிகவும் பயன் தருவதுதான். முன்பெல்லாம் ஒவ்வொரு வேளைக்கும் விருந்து போல் உணவு… இப்போதோ ஏதோ சுமார்தான். ஆனால் நீங்கள் விரும்பினால் இதையும் கூட மகிழ்ச்சியுடன் சாப்பிடலாம். நிறைய பேர் இது போல் எளிய உணவை முழு விருப்பத்துடன் தேர்வு செய்கிறார்கள். கையில் அதிக பணம் இல்லாவிட்டால் என்ன? சிறிய கார், சிறிய வீடு, எளிமையான உணவு என்று வாழ முடியும். கார் இல்லாவிட்டால் நடந்து போகலாமே! கோவையில் 100 வயது கடந்த ஒருவரை 100-வது பிறந்த நாளில் பேட்டி எடுத்தார்கள். அவர் இப்போதும் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதைக் கண்டு, “உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு walking தான் காரணம், நான் ஒரு walk-king” என்று பதிலளித்தார். விவசாயி கேட்ட வரம் ஒரு விவசாயி இருந்தார். இயற்கை சக்திகள் தன் பயிரை ஆள்வதை குறித்து துயரம் கொண்டார். எனவே ஒருநாள் அவர் சிவனை அழைத்து, “இயற்கை சீற்றங்களால் எனக்கு மிகவும் தொல்லையாக உள்ளது. இந்த விவசாயியின் துயரம் உங்களுக்கு புரியாது. ஏனென்றால் நீங்கள் ஒரு விவசாயி அல்ல. ஒரு வேடன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எப்போது மழை பெய்ய வேண்டும். எப்போது சூரியன் வர வேண்டும் என்று எல்லாமே எனக்கு நன்றாகத் தெரியும். வேடனும், பித்தனுமான உங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் புரிவது கஷ்டம்தான். எனவே இயற்கை சக்திகளை என்னிடமே விட்டுவிடுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். சிவனும் நல்ல மனநிலையில் இருந்ததால் அந்த வரத்தை கொடுத்துவிட்டார். தோல்வி என்று எதுவும் கிடையாது. அது உங்கள் எண்ணம் மட்டுமே. வெற்றி என்பதும் கூட கிடையாது. அதுவும் கூட உங்கள் முட்டாள்தனமான எண்ணம்தான். விவசாயி நன்றாக திட்டமிட்டார். சோளம் விதைத்தார். “மழை!” என்றார். மழை பெய்தது. ஆறு அங்குலம் நிலம் நனைந்தவுடன், “மழை நிற்கட்டும்” என்றார். மழை நின்றது. நிலத்தை உழுதார். விதை விதைத்தார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் மழை என்றார். பெய்தது. “இன்று நான் வயலில் வேலை செய்ய வேண்டும். என்ன வெயில்…! வெயில் வேண்டாம். மேக மூட்டம் வேண்டும்” என்றார். அப்படியே ஆனது. மிகவும் மகிழ்ச்சியானார். பசேலென பயிரும் வளர்ந்து வந்தது. இயற்கை எப்போதுமே விவசாயியின் கையில் இருப்பதுதான் நல்லது என்று சொல்லிக் கொண்டார். அறுவடைக்கான நேரம் வந்துவிட்டதா என்று பார்த்தபோது, ஒரு பறவையைக் கூட காணவில்லை. அதையும் கட்டளை போட்டு விட்டாரே, பறவைகளே வரக்கூடாது என்று… அருகில் சென்று பெரிய பெரிய சோளக்கருதுகளை தொட்டுப் பார்த்தார். மெதுவாக அதை திறந்து பார்த்தார். ஒரு மணி சோளம் கூட இல்லை. “என்ன நேர்ந்தது? வெயில், மழை எல்லாம் நான் சரியாகத்தானே நிர்வகித்தேன். சிவனிடமே கேட்போம்” என்று சிவனிடம் சென்று, “எல்லாம் சரியாக இருந்தும், ஒரு சோளம் கூட விளையவில்லை. நீங்கள்தான் கெடுத்தீர்களா?” என்று கேட்டார். “நீ செய்வதை எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். நீயே எல்லாவற்றுக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டாய். எனவே நான் சிறிதும் தலையிட விரும்பவில்லை. மழை, வெயில் எல்லாம் சிறப்பாகத்தான் செய்தாய். ஆனால் காற்றை முழுவதுமாக நிறுத்திவிட்டாய். நான் நிர்வாகம் செய்தபோது அதிக வலுவான காற்றை அனுப்புவேன். பயிர்கள் வீழ்ந்துவிடும் போல் நிலை ஏற்படும். அவை தம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேர்களை ஆழமாக நிலத்தில் செலுத்திக் கொள்ளும். வேர் உள்செல்வதால் பயிர் நன்றாக விளைந்து சோளமும் வரும். ஆனால், இப்போது சோளக்கருது மட்டும் உள்ளது. சோளம் எதுவும் இல்லை” என்றார். எனவே, உங்கள் வாழ்க்கையில் பல சூழ்நிலைகள் ஏற்படலாம். அவற்றை பயன்படுத்தி நீங்கள் வலிமையடையலாம். அல்லது உட்கார்ந்து அழலாம். இந்த இரண்டு வாய்ப்புகள் தாம் உள்ளன. உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களை வாழ்க்கையில் படிக்கற்களாக மாற்றிக் கொள்ளலாம். உண்மையில் தோல்வி என்று எதுவும் கிடையாது. அது உங்கள் எண்ணம் மட்டுமே. உண்மையில் வெற்றி என்பதும் கூட உங்களின் முட்டாள்தனமான எண்ணம்தான். வெற்றி – தோல்வி என்னும் கருத்துக்கள் எது வெற்றி, எது தோல்வி என்பது உங்கள் கருத்து மட்டுமே. உலகையும், சூழ்நிலைகளையும் மாற்றுவதைக் காட்டிலும் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லவா? அப்படி மாற்றிக் கொண்டால் உங்களுக்கு நடக்கும் எல்லாமே நன்மைதான். ஒரு பிச்சைக்காரனுக்கு இருபது ரூபாய் கொடுத்தால் ஹோட்டலுக்கு சென்று மசால் தோசை சாப்பிடுவது வெற்றியின் உச்சம் போன்றது அல்லவா? ஆனால் அதுவா வெற்றியின் உச்சம்? சொல்லுங்கள்.. இதை ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் சமூகத்தின் கருத்துக்களுக்கு அடிமையாகி விட்டீர்கள். எனவே முதலில் வெற்றி தோல்வி குறித்து மற்றவர்களின் எண்ணத்திற்கு அடிமையாவதை நிறுத்துங்கள். வெற்றி தோல்வி மட்டும் அல்ல. நீங்கள் கொண்டுள்ள ஒவ்வொரு கருத்தும், ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு உணர்வும் எங்கோ வெளியிலிருந்து தான் எடுத்துக் கொண்டீர்கள். அவை இப்போது உங்களுக்குள்ளிருந்து உங்களையே ஆட்டிப் படைக்கின்றன. உங்கள் முதல் வெற்றி எது தெரியுமா? நீங்கள் யாருடைய கருத்துக்கும் அடிமை இல்லை என்பதுதான்! வாழ்வில் என்ன சூழ்நிலை வேண்டுமானால் வரட்டும். நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்றால், அதுவே ஒரு வெற்றிதான். நான் சொல்வது சரிதானே? உங்களுக்கு வாழ்க்கை குறித்து எதுவும் தெரியவில்லை. உயிர் பற்றி எதுவும் புரியவில்லை. எனவே, தான் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு அழுது கொண்டு இருக்கிறீர்கள். நிறைய பணம் இழந்து விட்டேன் என்று உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கிறீர்கள். பணம், வசதி போன்றவை எல்லாம் சமூக விஷயங்கள். குடும்பம், சமூகம் போன்றவை எல்லாம் உங்கள் நலத்திற்காக ஏற்படுத்தப்பட்டவை. உங்கள் உயிரை எடுப்பதற்காக அல்ல. அவை எல்லாம் நீங்கள் உருவாக்கியவை. நீங்கள் உருவாக்கியவற்றை உங்களை விட மிகவும் முக்கியம்போல் ஆக்கிவிட்டீர்கள். படைத்தவனின் அற்புதமான படைப்புகளில் நீங்களும் ஒன்று. ஆனால் உங்களுக்குள் உள்ள அற்புதத்தை பார்க்காமல் சிறிய விஷயங்களுக்கும் துன்பப்படுகிறீர்கள். காரணம் உங்கள் அறியாமையே. எனவே தோல்வி என்று எதுவும் கிடையாது. அது உங்கள் எண்ணம் மட்டுமே. வெற்றி என்பதும் கூட கிடையாது. அதுவும் கூட உங்கள் முட்டாள்தனமான எண்ணம்தான். சமூகத்தின் கருத்துக்களுக்கு அடிமையாகி உங்கள் எண்ண ஓட்டமும் இப்படி ஆகிவிட்டது. எனவே வெற்றி என்று நினைத்து ஒன்றை பெரிதாக கொண்டாடுவதும் தோல்வி என்று நினைத்து உட்கார்ந்து கண்ணீர் வடிப்பதும் தேவையற்றது.
No comments:
Post a Comment