தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை
“உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்ற பொன்மொழியை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். உழைப்பாளர் தினம் என்று இன்றைக்கு உழைப்புக்கும், உழைப்பாளிகளுக்கும் நாம் பெருமை தருகிறோம். அத்தகைய உழைப்பை நீங்கள் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும், உங்கள் வாழ்க்கை முழுவதும். நீங்கள் ஒரு லட்சியத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இந்த லட்சியப் பாதையில் உங்கள் பயணம் தொடர்ந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் – அஞ்சாமல் நீங்கள் முன்நோக்கிச் சென்று கொண்டிருக்க வேண்டும்.
தளராத ஊக்கத்தைக் கொள்ளுங்கள்
நீங்கள் எண்ணுகின்ற எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்க வேண்டும். நீங்கள் அடைய விரும்புகின்ற குறிக்கோள் உயர்ந்த தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். வெறும் எண்ணத்தோடு நின்றுவிடாமல், என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டு, அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் உங்களுக்கு ஊக்கம் வேண்டும். தளராத ஊக்கம் இருந்தால்தான் இடைவிடாத முயற்சிகளை நீங்கள் செய்ய முடியும். "ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை" என்ற வள்ளுவரின் கருத்தை நினைவில் கொள்ளுங்கள்.
விருப்பமில்லாமல் வாழ்க்கையில் நல்ல திருப்பமில்லை
நீங்கள் சிறந்த தொழிலதிபராக வர வேண்டும் என்று மிகவும் விரும்புகிறீர்கள். நீங்கள் எந்தத் தொழிலைச் செய்ய விரும்புகின்றீர்களோ, அந்தத் தொழிலில் அதிக நாட்டம் கொண்டு உழைக்க வேண்டும். முயற்சியும், உழைப்பும் இருந்தால் நீங்கள் விரைவில் முன்னேறி விடலாம். அம்பானி சகோதரர்கள் மிகச்சிறந்த தொழிலதிபர்களாக விளங்கிக் கோடிக்கணக்கான பணத்தை ஈட்டி முதன்மை இடத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இந்த அளவுக்கு அவர்கள் உயர்வடைந்ததற்குக் காரணம், அவர்கள் தொழில் மேல் கொண்ட விருப்பமே ஆகும். விருப்பமில்லாமல் வாழ்க்கையில் நல்ல திருப்பமில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் பலஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து உலக சாதனை படைத்திருக்கிறார் என்று சொன்னால், அதற்கு முக்கியக் காரணம் சச்சின் கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வமே. ஆர்வம் இருந்தால் முயற்சி தானாகவே வந்துவிடும். அதன்பிறகு கடுமையான உழைப்பும் உங்களைத் தேடிவந்துவிடும். இவைகள் எல்லாம் ஒன்று சேரும் போது உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போகுமா?
ஒரே குறிக்கோளுடன் உழையுங்கள்
நீங்கள் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். சிறந்த தொழில் அதிபராகத் திகழ வேண்டும் என்று நினைக்கும் நீங்கள், ஒரே மாதத்தில் உயர்ந்துவிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அவ்வாறெல்லாம் நீங்கள் நினைத்துப் பார்க்கக்கூடாது. உங்களுடைய லட்சியம் வெற்றி பெறும்வரை பொறுமையாக இருக்கவேண்டும். “பொறுமை கடலினும் பெரிது’ என்பதை மறந்துவிடாதீர்கள்’. “சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்று நரி திராட்சைத் தோட்டத்தை வெறுத்து ஓடிப்போன கதையாக உங்களுடைய செயல்களும் அமைந்துவிடக் கூடாது. “இந்தத் தொழில் எனக்குப் பிடிக்கவில்லை. நான் உயர்வடைவதற்கு நீண்ட காலத்தாமதம் ஆகும் போலத் தெரிகிறது. எனவே வேறு தொழிலை நான் நாடிச் செல்கிறேன்’ என்று சென்று விடாதீர்கள். நீங்கள் ஒரே நோக்கம், ஒரே லட்சியம் ஆகியவைகளைக் கொண்டிருக்க வேண்டாமா? குறிக்கோள்களை நீங்கள் மாற்றிக் கொண்டே இருந்தால் உங்களுடைய உயர்வு சிதைந்து போகாதா?
ஒரே துறையில் இறுதி வரை போராடுங்கள்
சாதாரண எறும்புகளைப் பாருங்கள். ஊர்ந்து ஊர்ந்து சென்று கடினமான கல்லைக் கூடத் தேய்த்துவிடுகிறது. எனவே ஒரே லட்சியத்தில் முயற்சி மட்டும் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறலாம். ஒரு வேளை நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் துறையில் தோல்வி ஏற்பட்டால் மனம் சோர்ந்து போய் விடாதீர்கள். அத்துறையில் மீண்டும் மீண்டும் கவனத்தைச் செலுத்தி, முன்னுக்கு வரும் வழிகளை ஆராய்ந்து பார்த்து அத்துறையில் வெற்றி பெறுங்கள். கொள்கைகளை மாற்றிக் கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. அரசியலில் வேண்டுமானால் கொள்கைகளை மாற்றிக் கொண்டு “கே(ô)டீஸ்வரர்கள்” ஆனவர்கள் உண்டு. ஒரே துறையில் இறுதிவரை போராடிக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். இப்படி நீங்கள் கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும்.
தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்
கடுமையான உழைப்பு வீண் போனதாகச் சரித்திரம் கிடையாது. கடுமையான உழைப்பாளி வெற்றி பெற்ற வரலாறே இங்கு அதிகம். கடுமையாக உழைக்கும் உழைப்பாளி தோற்றுப் போனதாக எவரையேனும் நீங்கள் சொல்ல முடியுமா? நீங்கள் கடுமையாக உழைப்பதற்குத் தூண்டுகோலாக இருப்பது, உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையே. தன்னம்பிக்கை என்ற ஆணிவேர் இல்லாவிட்டால் நீங்கள் என்ன உழைத்தும் பயனில்லாமல் போய்விடும். தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால் உங்களுக்கு எப்போதும் மனதில் மலர்ச்சி இருக்கும். தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லாவிட்டால் உங்களுக்கு விரைவில் தளர்ச்சி வந்துவிடும். தளர்ச்சி வந்துவிட்டால் பிறகு உழைப்பதில் நாட்டம் வருமா என்ன? எனவே உங்களின் செயல்களின் மேல் – ஏன் உங்களின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அந்தத் தன்னம்பிக்கை இருக்குமானால் நீங்கள் எதையும் சாதிக்கலாமே.
பொறுமையும், விடாமுயற்சியும் வேண்டும்
நீங்கள் பொறுமையோடு, விடாமுயற்சியையும் தொடர வேண்டும். நீங்கள் தன்னம்பிக்கையோடு ஒரு செயலைச் சாதிக்க முற்படும்போது சோதனைகள் உங்களுக்கு வரத்தான் செய்யும். சோதனைகள் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும் போதனைகள் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். எனவே சோதனைகள் வரும் போது மனதில் வேதனை கொள்ளாமல் சாதனைகளைப் படைப்பதில் நாட்டம் கொள்ளுங்கள். நீங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டே இருங்கள். அதே சமயத்தில் மிகச்சிறந்த வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி பெறுவதற்குக் காலம் கூடி வரும். அதுவரையில் நீங்கள் பொறுமையோடு இருங்கள்.
அவமானங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள்
ஸிங்க்ளேர் லூயிஸ் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை ஆறு மாத காலமாக இரவு, பகலென்று பாராமல் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதி முடித்ததும் ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். எவரும் இவருடைய கட்டுரையைப் படித்துப் பார்க்க விரும்பவில்லை. அந்தப் பத்திரிக்கை ஆசிரியர், “இடியட், இந்தப் பத்திரிக்கைக்கு உன் கட்டுரையைக் கொடுக்க வந்துவிட்டாய், உன் கட்டுரை இடம் பெறவேண்டிய இடம் எது தெரியுமா?’ என்று கூறிக்கொண்டே, கட்டுரையைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். லூயிஸ் கோபம் கொள்ளவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானம், சோதனைகளைத் தாங்கிக் கொண்டார். இவரது பொறுமையும், சகிப்புத் தன்மையும், விடாமுயற்சியும் வெற்றிப் பாதைக்கு இவரை அழைத்துச் சென்றது. இவர் எழுதிய “மெயின் ஸ்டிரீட்’ என்ற நாவல் உலகத்திலேயே எந்தப் புத்தகமும் விற்காத அளவுக்கு விற்பனையாயிற்று. இவரைக் கோடீஸ்வரர் ஆக்கிவிட்டது. லூயிஸ் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டிருந்தார். தன் திறமையைப் பிறர் கேவலப்படுத்தும்போது அதன் காரணமாக அவர் மனத்தளர்ச்சியடைய வில்லை. முயற்சி, உழைப்பு ஆகியவைகளைத் தன் வாழ்க்கையில் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார்.
பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுங்கள்
எனவே வாழ்க்கையில் எந்த வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் எவரும் முன்னுக்கு வர முடியாது. திட்டமிட்டு உழைத்து, அந்த முயற்சியின் மூலம் வாழ்க்கையில் உயர வேண்டும். தகுந்த முயற்சிகள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் நாம் நினைத்ததெல்லாம் நிறைவேறிவிடாது என்பதை உணர வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் வறுமையும், பிற தொல்லைகளும் உங்களை வாட்டி வருத்துகின்றனவா? இதற்காக நீங்கள் வருந்தாதீர்கள். எப்பேர்பட்ட மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் வாழ்வதில் ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும். உங்களுடைய லட்சியப் பயணத்தில் சில சங்கடங்களும், பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். இதற்காக நீங்கள் கொஞ்சம் கூடக் கவலைப்படக் கூடாது. வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனைகள் தோன்றினாலும் அதை நீங்கள் எதிர்த்துக் கொண்டு சமாளிக்க முற்பட்டால், நீங்கள் நினைப்பதெல்லாம் எளிதாக நிறைவேறிவிடும்.
மனத்தின் வலிமையைப் பெருக்குவன, துன்பங்கள் தாம்!
எனவே உங்களுடைய வாழ்க்கையில் சங்கடங்களும், இடையூறுகளும் ஏற்படுகின்றனவே என்று மன அதிர்ச்சியும், வியப்பும் கொள்ளாமல் அவைகளை நீங்கள் வரவேற்று மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும். உங்களுடைய அறிவையும், திறமையையும் தொடர்ந்து பயன்படுத்துங்கள். வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லாவிட்டால், உங்களுடைய அறிவையும், திறமையையும் பயன்படுத்தவே முடியாமல் போய்விடும். வாழ்க்கையில் தோன்றுகின்ற இடையூறுகளும், துன்பங்களும், சிக்கல்களும், தொல்லைகளும் உங்கள் மனத்தின் வலிமையைப் பெருக்குகின்றன. எனவே இவைகளைக் கண்டு எப்போதும் பயப்படாதீர்கள்.
அச்ச உணர்வை அகற்றுங்கள்
நீங்கள் ஒரு செயலைச் செய்து முடிக்க அஞ்சுகிறீர்களா? உங்களுக்கு அச்சம் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முக்கியக் காரணம், உங்களுக்குத் தன்னம்பிக்கை இல்லை. உங்களுக்கு மன உறுதி இல்லை என்று அர்த்தம். எனவே அச்சத்தை நீக்கி வாழுங்கள். திறமையற்றவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு – தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு எப்போதும் பயம் இருந்துகொண்டு தான் இருக்கும்.
தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை
நீங்கள் எந்தக் காலத்திலும் கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய முன்னேற்றத்தில் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கையே வாழ்க்கையின் அடிப்படை. நீங்கள் உழைக்கும்போது சில தோல்விகள் வரத்தான் செய்யும். தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. எனவே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். உழைத்துக் கொண்டே இருங்கள். உயர்வு வராதா பார்க்கலாம்.
No comments:
Post a Comment