Thursday, April 23, 2015

சிவராத்திரி உணர்த்தும் உண்மைகள்

சிவராத்திரி உணர்த்தும் உண்மைகள்

ஆணவம் ஏற்படுத்தும் அறியாமை என்கின்ற செறுக்கு உள்ளவரை உயிர்கள் இறைவனின் திருவருளைப் பெறமுடியாது என்றும் இறைவனின் திருவடி இன்பத்தில் திளைக்க முடியாது என்றும் சிவராத்திரி நமக்கு உணர்த்துகின்றது. திருமாலும் பிரமனும் ஆணவச் செறுக்கினால் தர்க்கித்து இறைவன் திருவடியையும் இறைவன் திருமுடியையும் காண முயன்று சோர்ந்தனர் என்பது இதனையே உணர்த்துகின்றது. 

அவர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து அன்பினால் உருகி இறைவன் திருவருளை வேண்டித் தவமிருந்தபோது இறைவன் திருவருள் கிடைக்கப்பெற்றனர் என்பதும் கூறப்பட்டது. எனவே “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்று அடியார் பெருமக்கள் குறிப்பிடுவது போல அன்பினால் இறைவனை அடையலாம் என்று சிவராத்திரி உணர்த்துகின்றது. அன்றாட வாழ்வில் பணம், பதவி, படிப்பு, அழகு, அறிவு என்று பல்வேறு அறியாமையால் தர்க்கித்துத் திரியும் நாம் சிவராத்திரியன்று இதை எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய பணம், பதவி, படிப்பு, அழகு, அறிவு என்பதெல்லாம் கருணையினால் இறைவன் அளித்தது என்றும் அதனைக் கொண்டு இறைவனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற பிற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டி உயிர் ஈடேற்றம் பெறுவதற்கு அவன் திருவருளை எண்ண வேண்டும் என்பதை அன்றைய தினம் எண்ணி எண்ணிப்பார்க்க வேண்டும். இறைவன் நமக்கு அளித்திருக்கின்ற குறுகிய வாழும் காலத்தைத் தற்காலிக உலக போகங்களை எண்ணிப்பார்த்து நம் ஆணவத்தை நீக்கி வாழ வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 

கணவன், மனைவி, மறுமகள், மாமனார், மாமியார், முதலாளி, தொழிலாளி, தலைவன், தொண்டன் போன்ற செறுக்குகளையெல்லாம் விட்டு இறைவன் திருவடிக்குச் செல்ல துடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு உயிர் என்ற எண்ணத்தில் அன்பு பாராட்டும் இயல்பு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி நிற்க வேண்டிய நாள் அது. இதனையே “ஆருயிர்களுக்கு எல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என்று வள்ளல் பெருமான் வேண்டினார்.

எனவே சிவராத்திரி என்பது வருடத்திற்கு ஒருமுறை ஆணவத்தினால் ஏற்படும் நம் அறியாமைச் செறுக்கினை எண்ணிப்பார்க்கின்ற நாளாய் அமைகின்றது. ஆணவத்தினால் நாம் செய்கின்ற அன்பில்லாச் செயல்களையும் வார்த்தைகளையும் எண்ணங்களையும் எண்ணிப்பார்த்து அவற்றைச் சரிப்படுத்துவதற்குறிய வழிவகைகளை ஆராயும் நாளாய் அமைகிறது. இறைவனை வழிபட்டு, அவன் திருவருளை வேண்டி நின்று, கண் விழிப்பதோடு மட்டுமல்லாமல் நம் உயிரினை விழிப்படையச் செய்யும் நாளாகவும் விளக்குகின்றது. இவ்வளவு சிறப்புக்களையும் உண்மைகளையும் உணர்த்தும் உயரிய சிவராத்திரியை உரிய முறையில் உள்ளவாறு உய்த்து உணர்ந்து கொண்டாடுவோமாக!

No comments:

Post a Comment