Saturday, January 19, 2013

உறுதிமொழிகளை நிறைவேற்றுவது எப்படி?


புத்தாண்டு பிறந்தவுடன் உபயோகப்படுத்துகிறோமோ இல்லையோ, டைரி வாங்கிவிடுகிற மாதிரி, கடைபிடிக்கிறோமோ இல்லையோ? இந்தப் புத்தாண்டில் நாம் சாதிக்க வேண்டியவை என்று சில உறுதிமொழிகளையும் எடுத்துக்கொள்கிறோம்.

ஆண்டு நிறைவில் எழுதாமல் விட்ட டைரி பக்கங்கள் போலவே நிறைவேற்றாத உறுதிமொழிகளும் உறுத்திக்கொண்டே இருக்கும்.

உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்போது இருந்த உறுதி, அதைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரத்தில் ஏன் நமக்கு இல்லை என்பதை கண்டறிந்தால் இந்த ஆண்டு எடுத்துக் கொண்டுள்ள உறுதிமொழிகளுக்கும் பழைய நிலையே ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இனி நான் மது அருந்தப்போவதில்லை என்று ஒருவர் முடிவெடுத்தார். ஒருவாரம் 10 நாள் கட்டுப்பாடாக இருந்துவிட்டார். ஒரு நாள் ரோட்டில் நடந்து செல்லும்போது டாஸ்மாக் கடை கண்ணில் பட்டது. அவர் உறுதி மேல் அவருக்கே சந்தேகம் வந்து விட்டது. ‘கடவுளே எப்படியாவது என்னைக் கட்டுப்படுத்திவிடு’ என்று வேண்டியபடியே மெல்ல அக்கடையை கடந்துவிட்டார். தன் சுயக்கட்டுப்பாட்டை நினைத்து உற்சாகம் பீறிட்டது. உடனே ‘சக்சஸ் சக்சஸ்’ என்று கத்தியவாறே டாஸ்மாக்கிற்குள் நுழைந்தார் தன் வெற்றியைக்கொண்டாட…

இன்னொரு நண்பர் சிகரெட் குடிப்பதை நிறுத்திவிட்டதாக உற்சாகமாகச் சொன்னார். “கஷ்டமாக இல்லையா?” என்று கேட்டதற்கு, “இல்லை இல்லை ஏற்கனவே 3 முறை சிகரெட் குடிப்பதை விட்டிருக்கிறேன்” என்றார்.

பலருடைய உறுதி இந்த லட்சணத்தில்தான். நீங்கள் இப்படி இல்லாமல் லட்சத்தில் ஒருவராக.. லட்சியம் உள்ளவராக மாறவிரும்பினால் உங்கள் மன உறுதியின் அளவை அதிகப்படுத்துங்கள். முடிவெடுப்பது, செயல்படுத்துவது என இரண்டு நிலைகளுக்கு இடையே உள்ள இடை வெளியை படிப்படியாக குறைத்து இரண்டையும் ஒன்றாக்குங்கள்.

நிச்சயம் உங்கள் உறுதிமொழி களை நிறை வேற்றும் வழிமுறைகள்.

1 கனவுகள், திட்டங்க ளோடு இணைக்கப்படும்போதுதான் இலக்காக மாற்ற மடைகிறது. எனவே உங்கள் கனவுகள் அனைத்தையும் இலக்காக மாற்றுங்கள்.

2 அன்றாட பணிச்சுமையில் சில இலக்குகளை நாம் மறந்து விடுகிறோம். எனவே எழுதி ஒட்டுங்கள்.

3 காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை இலக்குகளை சொல்லிப்பாருங்கள்.

4 செய்யவேண்டியவைகளை பட்டியலிட்டு, அதை எப்போதும் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள். செய்து முடித்தவுடன் டிக் செய்து கொள்ளுங்கள். அடுத்த டிக்கை சீக்கிரம் அடிக்க, ஒவ்வொரு டிக்கும் உங்களுக்கு உற்சாகம் தரும்.

5 கடந்த வருடம் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் என்ன? அவற்றின் நிலைதான் என்ன? நிறைவேறியது எதனால்? நிறைவேறாதது எதனால்? என்று ஒரு சுயஆய்வு நடத்துங்கள்.

6 100 டிகிரி கொதித்தால்தான் நீர் ஆவியாகும். அதுபோல் சாதிக்க வேண்டும் என்ற உங்கள் வெற்றி விருப்பம் 100 டிகிரியாக இருந்தால்தான், செயலாகும். 99 டிகிரியாக இருந்தால்கூட செயலாக மாறாது. எனவே, உங்கள் வெற்றிக்கான வெப்பத்தை அதிகப்படுத்த உங்கள் துறை முன்னோடிகள் பற்றிய புத்தகங்களை படியுங்கள்.

7 கார் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தவுடனேயே, “அடுத்த மாசம் நான் கார் வாங்குகிறேன்”, என்று எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்துவிடுங்கள். தாமதமானால் சொன்னவரை சந்திக்கும்போது உறுத்தும். பிறகு சும்மா இருக்க முடியாது. எப்பாடு பட்டாவது வாங்கிவிடுவீர்கள்.

8 இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள் போல, நம் உற்சாகத்தை உறிஞ்சும் சில எதிர்மறை சிந்தயைôளர்களைக் கண்டால் ஒதுங்கிவிடுங்கள். அல்லது உங்களுக்கு சக்தி இருந்தால் அவர்களை நேர்மறையாக மாற்றிவிட்டு பிறகு பழகுங்கள்.

9 மாதத்தில் ஒருநாள் உண்ணாவிரதம் இருங்கள். உணவில் கட்டுப்பாடாக இருப்பதுதான் சிறந்த சுயக்கட்டுப்பாடு. ஒருநாள், உங்களால் உணவில்லாமல் இருக்க முடியுமானால், உங்கள் சுயக்கட்டுப்பாட்டில் சீக்கிரமே உச்சத்தை அடைந்துவிடுவீர்கள் என்று அர்த்தம்.

10 நீங்கள் உங்கள் இலக்கில் வெற்றி பெறுவீர்களா, இல்லையா? என்பதை ஒரே வாரத்தில் கண்டறிந்து விட முடியும். உங்கள் வீட்டில் உள்ள மாதாந்திர காலண்டரில் நீங்கள் திட்டமிட்டபடி அந்த நாள் உழைத்திருந்தால், டிக் செய்துகொள்ளுங்கள். பாதி நிறைவேற்றயிருந்தாலோ அல்லது ஒன்றையும் செய்யவில்லை என்றாலோ, அன்றைய தேதிக்கான கட்டத்தில் பெருக்கல் குறி (இன்டு மார்க்) செய்யுங்கள். அதாவது டிக் அடித்தால் அந்த நாள் வெற்றி நாள். பெருக்கல் குறியிட்டால், தோல்வி நாள் என்று அர்த்தம். ஒரே வாரத்தில் உங்களுக்கே தெரிந்துவிடும் நீங்கள் உங்கள் உறுதிமொழியில் வெற்றிபெறுவீர்களா இல்லையா? என்று.

11 ஒவ்வொரு நாளும் உறுதியாக இருங்கள். அன்று செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல் ஒரு நாளும் உறங்கச்செல்லாதீர்கள். அன்றைய நாள் தோல்வி நாள் என்றால் உங்களுக்கு உறக்கம் வருமா என்ன?

12 உங்களால் முடியுமா? முடியாதா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் புதிது புதிதாய் நிறைய முயற்சிகளில் இறங்கிக்கொண்டே இருங்கள். உங்கள் உற்சாகத்தை உயர்த்திக்கொண்டே இருக்க இதுவே சிறந்த வழி.

13 உங்களின் உற்ற நண்பரைக்கூட உங்கள் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு ஒரு வழிகாட்டியாக நியமித்துக்கொள்ளலாம். அல்லது கருத்துக்கேட்கலாம்.

14 பிராகரஸ் கார்டு ஒன்றைத் தயாரியுங்கள். அதில் உங்கள் உறுதிமொழியை செயல்படுத்த செயல்படுத்த முன்னேற்றத்தைக் குறித்து வைத்துக்கொண்டே வாருங்கள். உங்கள் குழந்தைகளிடம் அதில் கையெழுத்து வாங்குங்கள். (குழந்தைகளுக்கு கையெழுத்து போடுகிற வயதில்லை என்றால் மட்டும் உங்கள் மனைவியிடம்).

இதையெல்லாம் உறுதியாக கடைபிடித்தால் இந்த ஆண்டிற்கு, உறுதிமொழிகள் நிறைவேறும் ஆண்டு என்று நீங்கள் பெயரே வைக்கலாம். உறுதிமொழிகளை உறுத்தல்மொழிகள் ஆக்காமல் நிறைவேற்றிக்காட்டலாம்.

No comments:

Post a Comment