Monday, August 5, 2013

36 மணி நேரம் வேண்டுமா??

"அடடா! ஒரு நாள் என்பது 36 மணி நேரமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!" என்று எப்பவாவது அங்கலாய்த்திருக்கிறீர்களா ? ...லாய்த்திருப்பீர்கள். ஆனாலும் இல்லை என்று கெளரவமாக மறுக்கப் பார்க்கிறீர்கள்.....வேணாப்பூ! உண்மைய சொல்லிப் போடுங்க...தப்பில்ல ....நாம எல்லாரும் ஒரே மாதிரிதான்!

ஒரு வேளை அப்படி 36 மணி நேரம் கிடைத்தாலும் நம்மில் பலர் தலை அறுந்த கோழி போல குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருப்போமே தவிர, எல்லா வேலைகளையும் சரி வர முடிக்க மாட்டோம். அப்படி என்றால் பிரச்னை எத்தனை மணி நேரம் நம் கையில் இருக்கிறது என்பதல்ல, அதனை எப்படி திட்டமிட்டு உபயோகப் படுத்துகிறோம் என்பதிலும், தேவை இல்லாத விஷயங்களுக்கு ஒரு பெரிய NO சொல்வதிலும்தான் இருக்கிறது. 

சரி! இதனால் என்ன பலன் என்கிறீர்களா? தேவையில்லாத மன உளைச்சல்கள் எல்லாவற்றையும் பாம்பு சட்டை உறிக்கிற மாதிரி உதறிப் போட்டு விட்டு, பட்டாம்பூச்சி போல மனசு லேசாகி பறந்து பறந்து வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

உங்களிடம் உள்ள ஒரு மணி நேரத்தை சரியாக உபயோகிக்காத போது அது சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்த மணி நேரங்களைப் பாதித்து அந்தந்த நேரங்களில் முடிக்க வேண்டிய வேலைகளையும் தாமதப்படுத்தி மொத்தமாக ஒரு குழப்பத்தில் உங்களைத் தள்ளி விடும். 

உங்கள் மேலதிகாரி உங்களின் வழக்கமான பணிகள் தவிர, கூடுதலான பணிகளைச் சொல்லும்போது "முடியாதுன்னா தப்பா நெனச்சுப்பாரோ என்னவோ" என்று பலி பீடத்தில் நிற்கிற ஆடு மாதிரி தலையாட்டாதீர்கள். உங்கள் திறமை என்ன, உங்கள் பலம், பலவீனம் என்ன, அந்த கூடுதல் வேலைகளைச் செய்ய முடியுமா என்று நிதானமாக யோசியுங்கள். முடியுமென்றால் 'யெஸ்' சொல்லுங்கள். இல்லையென்றால் ஏற்கனவே இருக்கிற பணிகளைச் செய்வதற்குத்தான் நேரம் சரியாக இருக்கிறது, புதிதாக எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெளிவாகச் சொல்லுங்கள். அதற்காக ஒன்றும் உங்களை வேலையை விட்டுத் தூக்கி விட மாட்டார்கள்.

எப்போது எதற்கு முதலிடம் தர வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். நிறைய திருமணங்கள் மற்றும் உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கும், தோல்வியின் எல்லைகளைத் தொடுவதற்கும் இந்த தெளிவின்மையே காரணம். அலுவலக வேலைகளுக்கும் வீட்டுக் கடமைகளுக்கும் மத்தியில் தெளிவான கோடு கிழியுங்கள். இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான தருணங்களில் மனைவி, குழந்தைகளை, மற்ற உறவுகளை காக்க வைத்து விட்டு அலுவலகத்தை கட்டிக் கொண்டு அழாதீர்கள்.

அலுவலக வேலைகளை மட்டும்தான் சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என்று யார் சொன்னது? வீட்டுத் தேவைகளையும் சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் ரொம்ப குழப்பம் வரும். முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பே ஒரு காகிதத்தில் வரிசையாக எழுதுங்கள் மறுநாள் என்னென்ன செய்ய வேண்டுமென்று….

பால் வாங்கும் போது காபி தூள் வாங்க வேண்டும்
அக்காவுக்கு போன் பண்ணி 'Happy Wedding Day' சொல்ல வேண்டும்.
குட்டிக்கு ரெண்டு வரி நோட் வாங்க வேண்டும்.

இது போல எல்லாவற்றையும் வரிசையாக எழுதுங்கள். ஒன்று விடாமல் செய்து முடியுங்கள். உங்களுக்கே பெரிய வித்தியாசம் தெரியும். மற்றவர்களுக்கு உங்கள் மேல் உள்ள மதிப்பு உயரும். நேரத்தை நிர்வகிப்பது ஒன்றும் பெரிய ராக்கெட் விஞ்ஞானமல்ல!

No comments:

Post a Comment