Monday, August 5, 2013

உனக்குள் உள்ளது சக்தி

நாம் வாழ்க்கையில் தினசரி எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். அவர்களிடம் 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது?' என்று கேளுங்கள். அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும் தெரியுமா? 'ஏதோ போகிறது', 'என்னவோ ஓடிக்கிட்டு இருக்கு', 'எப்படியோ தள்ளிக்கிட்டு இருக்கேன்' என்ற தொனியில்தான் இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் இது மாதிரியான பதில் சொல்கின்றவர்கள் 60 வயதினர் மட்டுமல்ல; பதினேழு பதினெட்டு வயது கல்லூரி மாணவர்களும்தான்! 

இதற்குக் காரணம் என்ன என்று யோசிப்போமா?...

அம்மாவுக்குப் பிடித்த டிரஸைப் போட்டுக் கொண்டு, அப்பாவுக்குப் பிடித்த பாடத்தைப் படித்துக் கொண்டு, கணவனின் விருப்பத்திற்கேற்ப பிள்ளை பெற்றுக்கொண்டு, குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப வாழ்ந்துகொண்டு... இப்படி அடுத்தவர்களுக்காக வாழும் மனப்பான்மையினால் இந்தச் சலிப்பு ஏற்படுகின்றதா? இருக்கலாம்.

ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்குப் பிடித்த மன நிறைவான, தன்னிறைவான வாழ்க்கையை வாழத்தான் விரும்புகிறான்.ஒரு திருப்தியான - எதிர்பார்த்து விரும்பிய வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலருக்கு எது தன்னிறைவான வாழ்க்கை என்று தெரிவதில்லை. பணமாக இருக்குமோ, பதவியாக இருக்குமோ, அதிகாரமாக இருக்குமோ என்று ஒவ்வொன்றாகத் தேடித் தேடி, கானல்நீரைத் தேடி ஓடும் மான்கள் போல ஏமாந்து நிற்கின்றனர். 

தன்னிறைவான - மனத்திற்குப பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எப்படி?

முதலில் உங்களுக்கு உங்களைப் பற்றிய தெளிவான பார்வை வேண்டும்!

என்ன தெளிவு?

உங்களுள் ஒளிந்திருக்கும் தனித்திறமைகள் என்னென்ன, உங்களுடைய ஆழ்மன ஆர்வம் என்ன, நீங்கள் மதித்துப் போற்றக் கூடியவை என்னென்ன என்பவை பற்றித் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

கண்டுபிடித்து விட்டீர்களா?

இப்போது அவற்றை எப்படி ஆக்கபூர்வமாக ஆதாய வழியில் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள்.

இந்தக் கண்டுபிடிப்புகளில் நீங்கள் வெற்றி அடைந்தால், அதுவே உங்களை உயர்த்தக் கூடிய ஒரு நெம்புகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

சரி.. உங்கள் மனதில் உடனடியாக ஒரு வினா எழ வேண்டுமே!

ஏன் உங்களுடைய திறமை அல்லது ஆழ்மன ஆர்வத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்?

இதற்கு பதில் யோசிப்பதற்கு முன் இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்!

ஆழ்மன ஆர்வம் என்பது என்ன?

அதுதான் சக்தி... வீரியம். இப்போது புரிந்ததா? உங்கள் ஆழ்மன ஆர்வம் கண்டுபிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை!

ஆம்! உங்களுடைய அடிமனதில் ஒளிந்திருக்கும் பேரார்வம்தான் சக்தியை எழுப்புகிறது! அந்த சக்தி, நீங்கள் விரும்பக்கூடிய மனநிறைவான வாழ்க்கையைத் தரும்.

எப்படி இந்த ஆழ்மன ஆர்வத்தை அறிந்து கொள்வது? 

உங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பி விடை காண்பதன் மூலம் உணரலாம். 

நீங்களும் வாழ்க்கையில் கேள்வி கேட்டிருப்பீர்கள்! வாழ்க்கையில் 'எனக்கு வேண்டியன யாவை' என்று. இந்தத் தவறான கேள்விதான் மனித சமுதாயத்தின் பொருள் தேடலுக்குக் காரணமாக அமைகின்றது. இந்தத் தேடலில் நீங்கள் எதிர்பார்க்கும் மனநிறைவு கிடைக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. அதனால்தான் வீட்டிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் மனம் நிறைவு அடையாமல் போராட்டத்தில் இருக்கிறது. 

ஆழ்மன ஆர்வத்தைத் தெரிந்து கொள்ள நீங்கள் உங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் எவையெவை தெரியுமா?

1. நான் யார்? எதற்காகப் படைக்கப்பட்டுள்ளேன்?

2. நான் மற்றவர்களுக்கு அதிகமாக கொடுக்க விரும்புவது எது?

3. எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செயல் எது?

4. மற்றவர்கள் என்னை எதற்காக நாடுகின்றனர்?

5. நான் எதற்காகப் பாராட்டப்படுகின்றேன்?

6. என்னுடன் நெருக்கமாக உள்ளவர்கள் என்னுடைய ஆழ்மன ஆர்வம் எது என்று கூறுகின்றனர்?

7. எந்த மனிதரால், எந்த இடத்தால், எந்தப் பொருளினால், எந்தச் சிந்தனையால் கவரப்படுகின்றேன்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் உங்களைப் பற்றி நீங்கள் உணர்ந்து கொள்ள ஓரளவு துணையாக இருக்கும். 

இத்தனை பாடுபட்டு ஆழ்மன ஆர்வத்தை அறிந்து கொண்டு என்ன செய்யப்போகிறோம்?

இறைவனின் படைப்புகளில் எதுவுமே குறிக்கோள் இன்றி படைக்கப்பட்டதல்ல. ஒரு உதாரணத்தைப் பாருங்கள்!

மனம் ஒன்றி அன்போடு வாழ்ந்த தம்பதியருள் மனைவி இறந்து விடுகின்றாள். மனதைக் கல்லாக்கிக் கொண்டு கொள்ளி வைக்கும் கணவன், ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு மனைவியைப் பற்றி யோசிக்கின்றான். 'என் மீது முழுமையாக அன்பு வைத்திருந்தாய். என்னுடைய கனவுகளுக்கு உறுதுணையாக இருந்ததோடு அவற்றை செயல்படுத்த முழுச் சுதந்திரம் கொடுத்தாய். உன்னைப் பிரிந்திருப்பது எனக்குத் துன்பந்தான். ஆனால் உன்னுடைய அன்பு, அரவணைப்பு, ஆன்மா இவையனைத்தும் என்னைச் சுற்றியே இருக்கும்' என்று நினைத்தவாறு கொள்ளி வைக்கிறான்.

அந்த மனைவி இறந்த பின்னரும், கணவனுக்கும் அவள் குழந்தைகளுக்கும் இனிமையான நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறாள்.

இறந்த பின்னரும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் ஒரு ஈடுகட்ட முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்றால் அதுதான் உங்கள் வாழ்வின் பயனாகும்

No comments:

Post a Comment