Monday, August 5, 2013

மறைந்திருக்கும் உண்மைகள்

'மறைந்திருக்கும் உண்மைகள்' என்ற ஓஷோ நூலிலிருந்து சில கருத்துகள் 

முல்லா நஸ்ருத்தீன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டார். எப்போதும் குற்றம் குறைகளே சொல்லிக் கொண்டிருந்த அவர் திடீரெ‎ன ஒரு நாள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அதைக் கண்டு ஊரே ஆச்சரியப்பட்டது. அவர்கள் கேட்டார்கள், "இன்று மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே? என்ன ரகசியம்?"

முல்லா பதிலளித்தார், "தவிர்க்க முடியாதவற்றோடு நான் சமரசம் செய்து கொண்டு விட்டேன். பல ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு இதை நான் கண்டு கொண்டேன். வாழ்வில் என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும். அதனால் தவிர்க்க முடியாமல் எது வந்தாலும் அந்தச் சூழலோடு ஒத்துப் போக முடிவு செய்து விட்டேன். இனி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்." 

முல்லா விமானத்தில் நடை பயின்று கொண்டிருந்தார். ஏன் என்று கேட்டதற்கு "எனக்கு ரொம்ப அவசரம்" என்றார். விமானம் தரையிறங்கி, அவர் சேர வேண்டிய இடத்தை அடைந்தபோது அவரால் நிற்கக்கூட முடியவில்லை. அவ்வளவு களைப்பு! கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று. இதை அவர் விமானத்திலேயே செய்திருக்க வேண்டும்! 

பிரபஞ்சம் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது. அவசரப் படத் தேவையே இல்லை. அவசரப்பட்டுப் பயனும் இல்லை. இதை அறிந்து கொண்டவரே சமயப் பண்பு கொண்டவர். பிரபஞ்ச இயக்கத்தோடு ஒன்றிணைந்து ஒத்திசைந்து போனால் அதுவே பரவசம்! 

***

மன அழுத்தத்தைக் குறைக்க பத்துக் கட்டளைகள் 

1.நீங்கள் எல்லா நேரங்களிலும், எல்லா விஷயங்களிலும் ரொம்பக் கச்சிதமாக இருக்க வேண்டும், செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூட முயலாதீர்கள்.

2. எல்லாருக்கும் எல்லாமாகவும் இருக்க நினைக்காதீர்கள்.

3. செய்ய வேண்டிய காரியங்கள் சிலவற்றைச் செய்யாமலே விட்டு வையுங்கள்.

4. நெடு நேரம் வேலை செய்ய வேண்டாம்.

5. "முடியாது" என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.

6. உங்களுக்காகவும் உங்களுக்கு ஆதரவு தரும் இணைப்புகளுக்காகவும் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

7. அவ்வப்பொழுது குறிப்பிட்ட நேரங்களில் உங்கள் "இயந்திரத்தை" அணைத்து விட்டு ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருங்கள்.

8. சில நேரங்களில், போர் அடித்துக்கொண்டு ஒழுங்கில்லாமல் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லாமல் சாதாரணமாக இருங்கள்.

9. ஒரு பொழுதும் குற்ற உணர்ச்சி கொள்ளாதீர்கள்!

10.குறிப்பாக, நீங்கள் உங்களுக்கு விரோதியாக இல்லாமல், நல்ல நண்பனாக இருங்கள்!
***
பணத்தை எண்ணிக் கொடுக்கும்போது ஞாபகமாக வாழ்த்திக் கொடுங்கள். அதனிடம் சொல்லுங்கள். "செல்வமே! யார் உன்னைத் தொட்டாலும் அவர்களுக்கு நன்மை செய்வாயாக. போய் பசித்தவர்களின் பசியைத் தணித்து துணியில்லாதவர்களுக்கு ஆடை அணிவித்து பன்மடங்காகக் பல்கிப் பெருகி என்னிடம் திரும்பி வருவாயாக" - திருக்குரான் 

***

"நான் பேஸ்பால் குழுவில் சேர்ந்து விளையாடினேன். உள்ளுக்குள் நடுக்கம். ஆகவே அதை மறைக்க மிகவும் பழக்கப்பட்டவனைப் போல் சாவகாசமாக நடந்துகொண்டேன். சோம்பேறிப்பட்டம் கட்டி வெளியேற்றி விட்டார்கள். அடுத்து ஒரு வாய்ப்பு வந்தது. ஆட்டம் துவங்கிய வினாடி முதல் மின்சாரம் பாய்ந்த மாதிரி படு உற்சாகமாக ஓடியாடினேன். பத்து லட்சம் பாட்டரிகள் எனக்குள் இயங்குகிற மாதிரி பரபரப்புடன் சுழன்று ஆடினேன். மாஜிக் வேலை செய்தது. ஒரே பாராட்டு. பத்திரிகைகள், புகழாரங்கள் என்னைத்தேடி வந்தன." - பிரான்க் பெட்கர்

No comments:

Post a Comment