Monday, August 5, 2013

உங்கள் வரங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்..!

பிறந்த உடனே அனாதையாக்கப்பட்டான், அவன். குதிரைக்காரனின் மகன் என்றும், இழிபிறவி என்றும் பலரால் அவமானப்படுத்தப்பட்ட அவன், தன் கீழ் நிலையிலிருந்து, ஏழ்மை நிலையிலிருந்து, உயர்ந்து முன்னேறி ஒரு நாட்டுக்கே மன்னனானான். சூரிய புத்திரன். பிறக்கும்போதே கவச குண்டலங்களோடும் தெய்வாம்சங்களோடும் பிறந்தவன். 

ஆயினும் அவன் மன்னனெனும் நிலையை அடைய, இவை எதுவுமே துணை நிற்கவில்லை. புராணங்களில் தன்னம்பிக்கையை வலியுறுத்தும் மிக முக்கிய பாத்திரம், மகாபாரத கர்ணன். 

பிறந்த உடனே தாய் ஆற்றில் விட்டதிலிருந்து அவன் இழப்புகள் துவங்கியது. 
இளவயதிலிருந்தே அவன் முகத்தில் அறைந்த விடயங்கள் இரண்டு. ஒன்று ஏழ்மை. மற்றது சாதி. 

அந்த இரண்டினாலும் அவன் பல முறை, பல விதங்களில் அவமானத்துக்குள்ளானான். 

அவன் தன்மானம் எட்டி உதைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் எண்ணிலடங்கா. எத்தனை முறை அழுதிருப்பானோ? யாருக்குத் தெரியும்? 

அந்த அவமானங்களும் துன்பங்களுமே அவனுக்குள் கிரியாஊக்கியாய் இருந்து அவனை செயல்பட வைத்தது. 

உறக்கம் மறந்து இடைவிடாத பயிற்சியினாலும் முயற்சியினாலும் உழைத்தான். 

துரியோதனனின் பார்வை பட்டது. இவனது தகுதிகளையும் திறமைகளையும் முழுமையாய் ஆராய்ந்தறிந்த பின்புதான், அவன் தன் மாமா சகுனியின் ஆலோசனையின் பேரில் கர்ணனை நண்பனாக்கிக் கொண்டு, பின்னர் மன்னனாக்கினான். 

(துரியோதனன் தன் வாழ்வில் செய்த ஒரே நல்ல காரியம் கர்ணனை நண்பனாகக் கொண்டது. கர்ணன் செய்த ஒரே கெட்ட காரியம் துரியோதனனின் நட்பை ஏற்றுக்கொண்டது.) 

ஒவ்வொரு முறை கர்ணன் அரியணையில் ஏறும்போதும், தன்னை இழிவுக்குள்ளாக்கிய சாதியை எட்டி உதைத்தான். 

அவன் வாரி வாரி வழங்கியபோதெல்லாம், தன்னைப் பெருந்துன்பங்களுக்காளாக்கிய ஏழ்மையை ஏளனத்துக்குள்ளாக்கினான். 

அவனுடைய ஏழ்மையின் காரணமாகவே. கேட்டவருக்கு, 'இல்லை' என்று சொல்லாத தெய்வத்தன்மை அவனுக்கு வாய்த்தது. 
இழிவுகள் அவனை சிறந்த வீரனாக்கியது. 

("கிருஷ்ணனுடைய தகிடுதத்தங்கள் மட்டும் இல்லாவிட்டால் கர்ணன்தான் வென்றிருப்பான்" என்று ஓர் ஆன்மிக சொற்பொழிவாளர் வேடிக்கையாக குறிப்பிட்டார்.) 

கர்ணனைப் போலவே இழப்புக்களையும் இழிவுகளையும் வரமாக்கி சாதித்துக் காட்டியவர்கள் சரித்திரத்தில் எத்தனையோ பேர். 

பள்ளிப் படிப்பின் போது சாதியின் பெயரால், அவமானத்துக்குள்ளாகிய மாணவர் பின்னாளில் அண்ணல் அம்பேத்கர் என அறியப்பட்டார். 

பார்வை இழந்த, காது கேளாத, வாய்பேச முடியாத சிறுமி, ஹெலன் கெல்லராக உருவெடுத்தார். 

கழுத்துக்குக் கீழ் செயல்படாத, பேச்சிழந்த மனிதர், படித்து விஞ்ஞானியாகி, சர். ஐசக். நியூட்டன் வகித்த பதவியை வகித்தார். 

இன்றும் கூட தன் நர்ஸ் டீம் உடன் வர, மின்சார நாற்காலியில் உலகம் முழுக்கப் பயணம் மேற்கொண்டு, ஸிந்தசைசரின் உதவியோடு விஞ்ஞான உரைகளை நிகழ்த்தி வருகிறார். அவர் பெயர் ஸ்டீவன் ஹாக்கின்ஸ். 

சாதாரண கிராமத்திலிருந்து, சென்னை வந்து, கையில் பணமில்லாமல் பிளாட்பாரத்தில் தூங்கியதால் ஒரு போலீஸ்காரரால், துரத்தப்பட்டவர், இன்று பல கோடிகள் வர்த்தகம் செய்யும் மதுரா ட்ராவல்ஸ் அதிபர் திரு. வீ. கே. டி. பாலன் என்று அறியப்படுகிறார். 

இன்னும் நமது முதல்வர் கலைஞர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், என நம்மிடையே வாழும் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 

இன்றைக்கு வாழ்வின் அடிமட்டத்திலிருந்து உயர்ந்தவர்கள் அனைவருமே, தங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு கட்டத்தில், அவமானங்களையும் இழப்புகளையும் சந்தித்திருப்பார்கள். 

இவர்கள் அனைவருமே கர்ணனைப் போலவே காயங்களையும் இழப்புக்களையும் அவமானங்களையும் ஜொலிக்கும் வெற்றி மகுடமாக உருமாற்றி அணிந்த பெருவீரர்கள்தான். 

Big - Bang தியரிப்படி சூரியன் வெடித்து, பின்பு அதைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சூரியத் துண்டுகளில் ஒன்றாகிய, பூமியின் அங்கமாகப் பிறந்த நீங்களும் சூரிய புத்திரர்கள்தான் என்று விஞ்ஞானம் சொல்கிறது.

உங்கள் இழப்புக்களும் அவமானங்களும் சுரணை கெட்ட அழும்பாக மாறும் அபாயத்தை அனுமதிக்காதீர்கள். 

அவை உங்கள் வெற்றிக்கான வீரிய விதைகள். 

உங்களை வாழ்வின் உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் மகா வரங்கள் அவை.

அந்த வரங்கள், உங்களுடைய உடற்குறைபாடாகவோ அல்லது ஏழ்மையாகவோ, அல்லது சாதியாகவோ அல்லது அலுவலகத்தில் சந்தித்த அவமானமாகவோ இருக்கலாம்.

உங்கள் வரங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்

No comments:

Post a Comment