பணக்காரர் ஆவதற்கான 10 ஃபைனான்ஷியல் அட்வைஸ்!
இன்று புதிய புதிய வாய்ப்புகளும், தேவைகளும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் நமது தேவையை அறிந்து செயல்படுவதற்கு பட்ஜெட் போடுவது மிக அவசியம்!
நிதித் திட்டமிடல் என்பதே பெரும் பணக்காரர்களுக்குத்தான்; நம்மைப் போல் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு அல்ல என பலரும் தவறாக நினைக்கிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிதித் திட்டமிடல் முக்கியமானதாகும். அப்படித் திட்டமிட்டுப் பணத்தைச் செலவு செய்பவர்களே தனது வாழ்க்கை என்னும் பயணத்தில் மிகப் பெரிய பணக்காரராக ஜொலிக்கின்றனர். நிதித் திட்டமிடல் மூலம் பணக்காரர் ஆவதற்கான 10 வழிகளை இனி சொல்கிறேன்.
1. இணைந்த திட்டமிடல்!
முதன்முதலில், திட்ட மிட்டு நிதியை கையாள்வது என்பது சற்று கடினமான ஒன்றுதான். நமது மாத வருமானத்தை அவசிய செலவுக்கு பயன்படுத்துகிறோமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேலும், கணவன், மனைவி இருவரும் சேர்ந்து திட்டமிடவேண்டும். இதில் யார் தவறு செய்தாலும், ஒருவரை ஒருவர் குறை கூறாமல், அதனைத் திருத்திக் கொண்டு பணத்தினைச் சேமிக்கும் வழியைக் கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு நிதித் திட்டமிடலும், கணவன் மனைவி இருவரும் முறையாகத் திட்டமிட்டு, தீர்மானித்துச் செயல்பட்டால்தான் நீண்ட காலத்தில் நன்மை தருவதாக அமையும்.
2. நிதி இலக்கு!
நாம் நமது வாழ்க்கையில் தற்போது இருக்கும் நிலை என்ன, இப்போது கிடைக்கும் வருமானத்தி லிருந்து சேமித்து வைத்து, பிற்காலத்தில் எந்த நிலைமைக்கு உயரப் போகிறோம் என்பதனை திட்டமிட்டு, அதற்காக நிதித் திட்டம் ஒன்றை வகுத்து, அவ்வாறு செயல்படுவது நன்மையாகும். எப்படி ஓர் கட்டடத்தைக் கட்டுவதற்கு முன்னால், அந்தக் கட்டடத்தின் மாதிரி தோற்றம் (Blue print) என்று ஒன்றை உருவாக்கி, பின்பு அதற்கு செயல்வடிவம் கொடுக்கிறோமோ, அதேமாதிரி நிதித் திட்டம் நமது கனவுகளை நனவாக்க நிச்சயம் உதவி செய்யும். உதாரணமாக, ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு காரில் பயணம் செய்கிறோம். அந்தப் பயணம் பாதுகாப்பாகவும், இனிமையாகவும் அமைய வேண்டும் என்றால் நாம் முன்கூட்டியே, சில திட்டங்களைத் தீட்ட வேண்டும். அதாவது, நாம் எந்த வழியில், எவ்வளவு வேகத்தில் பயணம் செய்ய வேண்டும், எவ்வளவு எரிபொருள் தேவை, எந்த நேரத்தில் சென்றடைய வேண்டும் என்கிற விஷயங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இனிய பயணத்துக்கு நேரம், வேகம், எரிபொருள் ஆகிய விஷயங்களை கணக்கில் கொள்கிற மாதிரி, நிதித் திட்டமிடுதலில் சேமிக்கும் காலம், சேமிக்கும் தொகை, வட்டி விகிதம் ஆகிய மூன்றும் முக்கியமானதாகும். இதனைக் கருத்தில் கொண்டு, அவரவர் ஒரு வரைப்படம் ஒன்றினை வடிவமைத்து அதற்கேற்றவாறு செயல்படுவதே வாழ்க்கைப் பயணத்தை வெற்றி அடையச் செய்யும்.
3 . கடன்…கவனம்!
நாம் ஒவ்வொருவரும் ஆரம்பக் காலத்தில் நம் முன்னேற்றத்துக்குப் பலதரப்பட்ட கடனை பெற்று வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வரப் போராடியிருப்போம். அவ்வாறு பெற்ற கடனனானது உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கிறதா அல்லது எதிர்மறையாக இருக்கிறதா என்பதனை கண்காணிக்க வேண்டும். உதாரணத்துக்கு, நாம் வாங்கிய கடன் தொகையை, கொடுத்த தவணைக் காலத்துக்கு முன்னராகவோ அல்லது தவணைக் காலம் முடிவடையும்போதோ சரி செய்வதாக வைத்துக்கொள்வோம்; அல்லது தவணைக் காலத்துக்குள் அந்தக் கடனை அடைக்க முடியாமல், அந்தக் கடனை அடைக்க மேலும் கடன் பெறுவதாக வைத்துக்கொள்வோம். இவற்றில் எதைச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான், நீங்கள் வாங்கிய கடன் எப்படிச் செயல்படுகிறது என்பதை உணர்வீர்கள். ஆகவே, வட்டி விகிதம், கடன் பெறும் தொகை, கடன் தவணைக் காலம் என்பவை கடன் பெறுவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும். வட்டி தொகை அதிகமோ அல்லது தவணைக் காலம் அதிகமோ, எதுவாக இருந்தாலும் ஆரம்பத்தில் கடனுக்காக நீங்கள் செலுத்தும் மாதத் தவணையில் சிறு தொகையாவது சேர்த்துச் செலுத்தினால் கடனை விரைவாக அடைத்து, கடனினால் உங்கள் பணம் விரையமாவதை கட்டுப் படுத்தாலாம்.
4 . சேமிப்பு Vs முதலீடு
நாம் எல்லோரும் அவரவர் எண்ணம் போல வாழ, வருமானம் ஈட்ட மிகக் கடினமாக உழைக்கிறோம். அவ்வாறு ஈட்டும் பணத்தை நமது முன்னேற்றத்துக்கும், நமது ஆசைகளை நிறைவேற்றுவதற்கும், நன்கு வளரும் முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். பணத்தைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கும், பணத்தைத் தேவைக்கேற்ப முதலீடு செய்வதற்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்துகொள்ள வேண்டும்.
பணம் நமக்குச் சில வருடத்தில் அல்லது சில காலமே தேவைபடுகிறது என்றால் அது சேமிப்பாகும். உதாரணத்துக்கு, எதிர்பாராத நிகழ்வுகளுக்கு அவசர காலத் தேவைக்காக எடுத்து வைப்பது சேமிப்பு. மேலும், வீடு கட்டுவதற்காக முன் பணமாக எடுத்து வைப்பதும் சேமிப்பே. எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், வங்கியில் பாதுகாப்பாக வைத்திருப்பதும் சேமிப்புதான்.
அதுவே வருங்காலத்தில் நிகழவிருக்கும் நிகழ்ச்சிக்கு, நல்ல வளர்ச்சியை மட்டும் எதிர்நோக்கி செய்யும் செயலானது முதலீட்டைக் குறிக்கும். அதாவது, சுமார் ஐந்து அல்லது ஏழு வருடத்துக்கு மேல் நிகழும் நிகழ்ச்சிக்காக முதலீடு செய்வதும், மேலும் பணவீக்கத்தைத் தாண்டி வளர்ச்சி அடையக்கூடியதுமே முதலீடாகும். உதாரணத்துக்கு, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, பாண்ட் முதலீடு போன்றவையாகும். ஆகவே, சேமிப்பு என்பது குறுகிய காலம், முதலீடு என்பது நீண்ட காலமாகும். ரியல் எஸ்டேட்டும் முதலீடுதான். ஆனால், அதற்கு ஆரம்ப முதலீட்டு பணம் அதிகம் தேவைப்படும். அதுவே மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்குச் சந்தை எனில், வெறும் 100 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம்.
5 . பிரித்து முதலீடு செய்தல்!
நம்மில் பலபேர் முதலீட்டை வளர்ச்சிக்கு ஏற்றவாறு பிரித்து முதலீடு செய்வதில்லை. பலர் தங்கத்தில் மட்டும் அதிகம் முதலீடு செய்வார்கள். சிலர் வங்கி டெபாசிட், அஞ்சல் சேமிப்பில் மட்டும் முதலீடு செய்வார்கள். சிலர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வங்கி சேமிப்புக் கணக்கில் அதிகம் சேமிப்பார்கள். ஆனால், அவரவர் கண்ணோட்டத்தில் பார்த்தால், தாங்கள் மிக நன்றாகத் திட்டமிட்டதாகத் தோன்றும்.ஆனால், உண்மையில் அவரவர் தேவைக்காக, காலத்தைப் பொறுத்து முதலீட்டின் வளர்ச்சி வேறுபடும். ஒரே மாதிரியான முதலீட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவரவர் கனவு மற்றும் இலக்குகள், அவை நிகழும் காலத்தைப் பொறுத்து, அதற்கேற்ப சேமிப்பு அல்லது முதலீட்டைத் தொடங்க வேண்டும். மேலும், அதனைச் சுலபமாகப் பணமாக மாற்ற முடியுமா என்பதைப் பொறுத்து முதலீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆக, அவசர காலத்துக்கு வங்கி சேமிப்பும், மூன்று வருடத்துக்கு வங்கி டெபாசிட்டும், அஞ்சல்வழி சேமிப்பும், ஐந்து வருடத்துக்கு மேல் ஸ்டாக், மியூச்சுவல் பண்ட், கோல்ட் மற்றும் ரியல் எஸ்டேட் என அவரவர் தேவையைப் பொறுத்து முதலீடு செய்ய வேண்டும். இதில் தங்கத்தை உடனடியாகப் பணமாக்க முடியுமா என்றால், அதன் மதிப்பு குறைத்துப் பணமாகப் பெறலாம். ஆனால், ரியல் எஸ்டேட்டை உடனே பணமாக்குவது கடினம். ஆக, ஒரே கோணத்தில் முதலீட்டுத் தன்மையைப் பார்க்காமல், அதன் தன்மையை வெவ்வேறு கோணத்தில் ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
6 . கனியும் வரை காத்திருத்தல்!
நாம் முறையாக நிதித் திட்டமிட்டு பயணிக்கு ம்போது, எண்ணற்ற இடர்பாடுகளும், அவநம்பிக்கைகளும் வரக் கூடும். அதில் திடமாக நிலையாக இருப்பவர்களே, குறைந்த முதலீட்டில் நன்கு வளர்ச்சி அடைந்து மகிழ்கின்றனர். வாழ்க்கையில் சில கஷ்டங்கள், பிரச்னைகளை தாங்கும் தகுதியுடையவர்களே வெற்றியை ருசிக்கிறார்கள். மேலும், முதலீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, அவசரமான முடிவை எடுப்பதைத் தவிர்த்து, இந்த முதலீடு நமக்கு ஏற்றதா என்று பலமுறை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். மா விதை விதைத்தவன், அது பூவிட்டு, காயாகி, கனியும் வரை காத்திருக்க வேண்டும். அதுபோல ஒருவர் தனது முதலீடு, தேவையான அளவுக்கு வளர்ச்சியடையும் வரை காத்திருப்பதே சிறந்ததாகும்.
7 . பாதுகாப்புக்கு காப்பீடு!
ஒருவர் தன்னையும்,தனது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள காப்பீடு மிக முக்கியம். எந்த காப்பீடாக இருந்தாலும், மனதில் தோன்றும் ஏதோ ஒரு தொகைக்குக் எடுப்பது தவறு. சம்பாதிக்கும் ஒருவருக்கு அசம்பாவிதம் என்றால், அது அவரது குடும்பத்தினருக்குப் பேரிழப்பாகும். எனவே, அவர் ஈட்டும் வருமானத்துக்கு ஏற்ப காப்பீடு எடுத்துவைக்க வேண்டும். ஒருவர் இறந்துவிட்டால், அவரோடு அவர் ஈட்டும் வருமானத்தையும் சேர்ந்தே இழக்கிறது அந்தக் குடும்பம். ஆகவே, உங்களைப் பாதுகாத்து கொள்வதன் மூலம், உங்கள் வருமானமும் பாதுகாக்கப்படுகிறது என்பதனை உணர்ந்து ஆயுள் காப்பீடு எடுத்து வைக்கவேண்டும்.
8 . பட்ஜெட் அவசியம்!
அவரவர் வருமானத்துக் கேற்ப பட்ஜெட் தயாரிப்பது அவசியம். செலவாக இருந்தாலும், முதலீடாக இருந்தாலும், அதனைக் கணக்கில் கொண்டு பட்ஜெட் தயாரித்தால்தான் பற்றாக்குறையும், மீதமிருக்கும் தொகையும் தெரியும். ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் எந்தச் செலவினைக் குறைக்க முடியுமோ, அதனைக் குறைத்து நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும். மேலும், வருமானம் உயரும்போது புதிய கனவுகளுக்கும் நடப்பில் உள்ள கடமைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து நிதித் திட்டமிடப் பழக வேண்டும். இன்று புதிய புதிய வாய்ப்புகளும், தேவைகளும் வந்து கொண்டிருக்கின்றன. இதில் தேவையை அறிந்து செயல்படுவதற்கு பட்ஜெட் அவசியம்.
9 . சேமிப்பும் செலவுதான்!
நீங்கள் செய்யும் சேமிப்பா கட்டும், முதலீடாகட்டும் அதனை ஒரு செலவுக் கணக் காகப் பாருங்கள். அப்போதுதான் அவற்றின் பயனை முழுமையாக அடையலாம். இடையில் வளர்ச்சியோ, வீழ்ச்சியோ வந்தால், அதற்கேற்ப முதலீட்டை மாற்றி அமைக்க வேண்டும். நமது முதலீட்டை அந்தந்த இலக்கு நெருங்கும் வரை செலவாகப் பாவிக்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
10 . கோடீஸ்வரர் ஆக்கும் கூட்டு வட்டி!
குறைந்த வருமானம் தரும் முதலீட்டிலிருந்து, கிடைக்கும் பணத்தை மீண்டும் முதலீடு செய்தால் அந்த முதலீடு பெரிய அளவுக்கு வளர்ந்துவிடும். தனிவட்டியில் முதலீட்டிலிருந்து மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். கூட்டு வட்டி முறையிலோ முதலீட்டிலிருந்து கிடைக்கும் லாபத்தைத் தவிர, வட்டி மீதும் வட்டி கிடைக்கும். சீரான முதலீட்டை நீண்டகால அளவில் செய்தால், கூட்டு வட்டியினால் நல்ல பயன் பெறலாம். பணத்தை ஆரம்பத்திலிருந்தே முதலீடு செய்து, அதைத் தொடாமல் இருந்தால் கூட்டு வட்டி நம்ப முடியாத பலன்களைத் தரும்.
ஒரு லட்சம் ரூபாயை ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி விகிதத்தில், தேவைக்கு ஏற்ப காலத்தை நீட்டித்து உங்கள் முதலீட்டை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
ஒரு சிறு விதை மரமாக வளர்வது போல், சிறு தொகையானது கூட்டு வட்டி விகிதத்தில் பெரும் தொகையாக வளரும். அதுவே உங்களைப் பணக்காரர் ஆக்கும்.
No comments:
Post a Comment