Wednesday, April 1, 2015

இயலாமை பலவீனம் அல்ல

இயலாமை பலவீனம் அல்ல

ஒவ்வொரு உயிரினமும், ஏதோ ஒரு பயன்பாட்டிற்காகத்தான் உலகில் இருக்கிறது. பரிணாம வளர்ச்சியின்படி வெவ்வெறு திறமைகள், வெவ்வேறு உயிரினங்களிடம் உள்ளன. அனைத்து திறமைகளும், ஒருங்கே உள்ள உயிரினம் என்பது, கிடையாது. கழுதை பொதி சுமக்கும்; நாய் மோப்பம் பிடிக்கும். இவை திறமை; அதாவது இயன்ற விஷயங்கள். கழுதையால் மோப்பம் பிடிக்க முடியாது; நாயால் பொதி சுமக்க முடியாது. அதேபோல்தான் மனிதர்களிடமும். சில விஷயங்கள் சிலரால் முடியும்; பலரால் முடியாது. உதாரணம், திறமையாக சமைப்பவரால், இனிமையாக பாட முடியாது. எல்லாரும், எல்லாவற்றிலும், திறமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாம் இயலும் என்று நம்புவது அறிவீனம்.


அதேநேரம், ஒவ்வொரு மனிதனும் தன்னால் இயன்றது எது, இயலாதது எது என, அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் இயலாததை முயன்று, வீணாகாமல் இருக்க முடியும். 

இயன்றதை செய்து, கிடைத்ததை பெற்று வாழ்பவனே சிறந்தவன். ‘என்னால் இது இயலாது’ என, புலம்பினால் அது ஒருவனது பயம். தனது பலம் அறியாமல், ‘எல்லாம் முடியும்’ என, எண்ணினால், அது பலவீனம். 

எனவே, இயலாமை என்பது, பலவீனமல்ல. இயலாமையை அறிந்திருந்தால் அதுவே பலம். அதேபோல் இயன்றதை அறியாமல் இருப்பதும் பலவீனமாகும். அனைத்தையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆகவே, இயலாமையை அறிந்து கொண்டு, வளமோடு வாழ பழகிக் கொள்வோம்.

No comments:

Post a Comment