Tuesday, June 16, 2015

நம்பிக்கையே வெற்றியின் ரகசியம்!

நம்பிக்கையே வெற்றியின் ரகசியம்!

நமது வாழ்க்கையில் நமக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டியது தன்னம்பிக்கை ஆகும். ஒரு சிலர் சில வேலைகளை தன்னால் செய்ய முடியாது என்ற அவநம்பிக்கையில், யாராவது செய்து கொள்வார்கள் என்று விட்டு விடுகிறார்கள். இத்தகைய தன்மை நமது கோழைத் தனத்தைக் காட்டுகிறது. இதைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் சிந்தனையைப் பார்ப்போம்.

சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: “தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலரது வரலாறே உலக வரலாறு”. இதற்குத் தேவையானவற்றை நாம் அவரது வார்த்தைகளிலேயெ இப்போது பார்க்கலாம்.

தன்னம்பிக்கை:
‘முடியாது, என்னால் முடியாது’ என்று மட்டும் சொல்லாதீர்கள். நீங்கள் எல்லையற்றவர்கள். காலமும், இடமும் கூட, உங்கள் இயல்புடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை. நீங்கள் எதையும் செய்ய முடியும். எல்லாம் வல்லவர்கள் நீங்கள்.

ஆற்றல்:
சாஸ்திரங்களில் உள்ளவை அனைத்தும், அவற்றைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாகவும் உன்னில் உள்ளன. ஒருபோதும் உன்னில் நம்பிக்கையை இழக்காதே. இந்தப் பிரபஞ்சத்தில் உன்னால் எதையும் செய்ய முடியும். ஒரு போதும் தளராதே. எல்லா ஆற்றலும் உன்னுடையதே.

சிரத்தை
சிரத்தை வேண்டும், தன்னம்பிக்கை வேண்டும். பலமே வாழ்வு, பலவீனமே மரணம். மரணமற்ற, சுதந்திரமான, இயல்பாகவே தூய்மையான ஆன்மாவே நீங்கள். நீங்கள் பாவம் செய்ய முடியுமா? முடியவே முடியாது. இந்த சிரத்தை நம்மிடம் இல்லாததன் காரணமாகவே நாம் தன்னம்பிக்கையை இழக்கிறோம்.
சிறப்புடைமை

ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு நாட்டையும் சிறப்படையச் செய்ய மூன்று விஷயங்கள் தேவை:

நல்லியல்பின் ஆற்றல்களில் திட நம்பிக்கை.
பொறாமை, சந்தேகம்- இவை இல்லாதிருத்தல்.
நல்லவர்களாக இருந்து நன்மை செய்ய முயல்கின்ற அனைவருக்கும் உதவுதல்.

பலவீனம் இல்லாமை
நம்முடைய நன்மை தீமைகளுக்கு நாமே மூலக்காரணம். நாமே நம் கைகளால் கண்களை மூடி மறைத்துக் கொண்டு, ‘இருட்டாக இருக்கிறதே’ என்று கதறுகிறோம். கைகளை விலக்கி விட்டு ஒளியைப் பாருங்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது. கத்தி முனையில் நடப்பது போன்றது. ஆனாலும் சோர்வு அடையாதீர்கள். எழுந்திருங்கள், விழித்திருங்கள்.

அஞ்சாமை
எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். நீங்கள் மகத்தான காரியங்களை செய்வீர்கள். பயம் தோன்றினால் அந்தக் கணமே நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள் ஆகி விடுவீர்கள். மூட நம்பிக்கைகள் அனைத்திலும் கொடியது பயமே. பயமின்மை ஒரு நொடியில் சொர்க்கத்தையே நமக்கு அளிக்கவல்லது. உங்களை மேன்மையானவர்கள் என்று நினையுங்கள், அப்படியே ஆவீர்கள்!

பொதுநலம்
பிறருக்காக சிறு வேலை செய்தாலும் அது நம்மிடம் சக்தியைக் கிளர்ந்தெழச் செய்யும். மற்றவர்களின் நன்மையை நினைத்துக் கொண்டிருப்பதே மனதில் சிங்கத்தின் வலிமையை உண்டாக்கும்.

கீழ்ப்படிதல்
கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுதல் மிகவும் முக்கியம். சத்தியத்திற்கும், மனித குலத்திற்கும், உங்கள் நாட்டிற்கும் எப்போதும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்; உலகத்தையே அசைத்து விடுவீர்கள்.

பற்றின்மை
நம்மை எதிர்பார்த்து சிலர் வாழ்கிறார்கள்; நாம் அவர்களுக்கு நன்மை செய்யப் போகிறோம் என்று எண்ணுவது பலவீனம். இதுபோன்ற எண்ணங்களே நம்முடைய பற்றுக்கள் அனைத்திற்கும் காரணம். இந்தப் பற்றுக்கள் மூலமே நமது துன்பங்கள் எல்லாம் வருகின்றன.

திடநம்பிக்கை
சொல், செயல், சிந்தனை மூன்றும் ஒன்றுபட்டு நிற்கின்ற சிலர், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் போதும், இவ்வுலகையே ஆட்டி வைத்து விட முடியும். இந்த நம்பிக்கையை கைவிடாதே; நமது சக்தியின், நமது ஆற்றலின் ஆதாரம் அந்த எல்லையற்ற பரம்பொருள் தான். எனவே முதலில் உங்களிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள். எல்லா அறிவும், எல்லா ஆற்றலும், எல்லா தூய்மையும் நம்மில் உள்ளன.

குற்றம் அதிகமாக நிகழும் பகுதிகளிலே அதிக நீதிமன்றங்கள் இருக்கும். விபத்துக்கள் அதிகமாக ஏற்படும் இடங்களில் அதிக மருத்துவமனைகள் இருக்கும். அதைப் போலத் தான் பாவங்கள் ஏற்படக் கூடிய இந்த பூமியில் அந்த பாவங்களைப் போக்க அவதரித்த மாமுனிவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சுவாமி விவேகானந்தர்.

வசந்தத்தின் விடியலில், வீரத்தின் பாதையில், விவேகானந்தரின் அழைப்பில், ஆன்மிகத்தின் அரவணைப்பில் – சுருங்கச் சொன்னால் ‘விவேகானந்தரின் வழியில்’ வளம் மிக்க பாரதத்தை உருவாக்குவோம், வாருங்கள்!

விவேகானந்தரை நினைத்திடுவோம்; விவேக வழியில் வாழ்ந்திடுவோம்!

No comments:

Post a Comment