Tuesday, November 3, 2015

கோபம் செல்லுபடியாகும்?

கோபம் செல்லுபடியாகும்?

கோபம் எந்தப் புள்ளியில் ஆரம்பிக்கிறது? என்று தெரிந்துக் கொள்ள எனக்கு ரொம்ப நாளாக ஆசை. பல முறை முயற்சி செய்திருக்கிறேன். சமீபத்தில் அதை உணரவும் செய்தேன். நாம் யார் மேல் கோபத்தை காட்டுவோம் தெரியுமா? யார் மேல் கோபப் பட்டால் நம்மை திருப்பி அடிக்க மாட்டார்களோ, திரும்பி திட்டமாட்டார்களோ அவர்கள் மேல்தான் நாம் நம் கோபத்தைக் காட்டுவோம்.

5 வருடங்கள் முன்பு வரை நான் மிகுந்த கோபக்காரனாக இருந்தேன். ஒரு சிடு மூஞ்சியாக இருந்தேன் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு கோபம் வரும். நான் கம்பனியில் (எந்த கம்பனி என்பது வேண்டாமே?) சேர்ந்த இரண்டாம் வருடம் என நினைக்கிறேன். எனக்கும் ஒரு பெரிய இயக்குனரின் மகனுக்கும் தகராறு வந்தது. அவர் என்னைவிட வயதில் சிறியவர். நன்றாக படித்தவர். அவருக்கும், என்னுடைய வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர் ஒரு இயக்குனரின் மகன் என்பதாலும், அவருக்கு நான் மரியாதை சரியாக கொடுக்க வில்லை என்பதாலும் என்னை கொஞ்சம் வம்புக்கு இழுக்க ஆரம்பித்தார். மொத்தத்தில் நான் இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் அவர் என்னிடம் கோபமாக பேசிய போது ஒரு கணம் என்னையறியாமல் நானும் கண்டபடி அவரை திருப்பி திட்டிவிட்டேன். ஆபிஸே பார்க்கும் அளவிற்கு ஆகிவிட்டது. " நீ என்னதான் பெரிய இயக்குனரின் மகனாக இருந்தாலும், என்னுடைய இடத்திற்கு வந்து என்னை திட்டுவது சரியில்லை. அதனால் இந்த இடத்தை விட்டு போய் விடு" என்று சொல்லிவிட்டேன்.

அவர் போனவுடன், ஆபிஸில் அனைவரும் " நீ பெரிய தப்பு பண்ணிவிட்டாய். உன் வேலை போகப் போகிறது. ரெடியாக இரு" என என்னை பயமுறுத்தினார்கள். ஆனால், சில பேர், " நீ செய்தது சரி. இன்னும் நீ நன்றாக திட்டி இருக்க வேண்டும்" என என்னை உசுப்பேத்தினார்கள். அதே போல் அவருடைய அப்பா என்னைக் கூப்பிட்டு ," நீ யாரிடம் மோதுகிறாய் தெரியுமா? அவன் என் பையன். அவனுடைய மதிப்பு என்ன என்று தெரியுமா? அவன் எவ்வளவு பெரிய பணக்காரன் என்று தெரியுமா? அவனிடம் அடங்கி நடந்து கொள். இல்லை என்றால்........?????

நான் குழம்பி விட்டேன். வேலை நேரம் முடிந்ததும் ரூமிற்கு சென்றேன். தனியாக உட்கார்ந்து சிந்தித்தேன். "நான் செய்தது சரியா?" சரி என்றே மனம் கூறியது. ஆனால், "ஒரு வேளை அவர்கள் கூறுவது போல் வேலை போனால் என்ன செய்வது? அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே நம்முடைய கோபத்தால் மூன்று கம்பனி வேலையை விட்டாயிற்று. இதுவும் போனால் என்ன செய்வது? ஏன் கோபம் வந்தது? அதை ஏன் என்னால் கட்டுபடுத்த முடியவில்லை. அவரும் நல்லவர் தானே. அவரிடம் கொஞ்சம் அனுசரித்து சென்றால்தான் என்ன? நாம் எந்த விதத்தில் குறைந்து விடப் போகிறோம்?" என பலவாறு சிந்தித்தவன் ஒரு முடிவுடன், அவர் வீட்டுக்குச் சென்றேன்.

நான் அன்று இரவு திடீரென அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன். திறந்தவுடன் என்னைப் பார்த்தவர் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்து விட்டார். அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. "என்னடா இது. மதியம்தான் இவனுடன் சண்டை போட்டோம். இப்போது இங்கே நிற்கிறானே?" என அவருக்கு குழப்பம். ஆனால் நான் மன்னிப்பு கேட்பதற்காக அங்கே செல்லவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் முன்பே கூறியதுபோல் "யாரிடம் சண்டை என்றாலும் நேராக நான் எதிராளியின் இடத்திற்கே சென்றுவிடுவேன்". இது என் சுபாவம்.

உடனே அவர் என்னை உள்ளே கூப்பிட்டார். " என்ன இந்த நேரத்துல இங்க?" எனக் கேட்டார். உடனே நான் எதனால் அவருடன் கோபமாக பேச நேர்ந்தது என்று விளக்கினேன். உடனே அவர், " ஆமாம். நானும் அவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டிருக்கக் கூடாத்துதான்" என்றார். பிறகு சுமார் ஒரு மணி நேரம் பேசினோம். பின்பு அவருடன் அவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்கு சென்றேன். அடுத்த நாங்கள் இருவரும் சேர்ந்தே அலுவலகம் போனோம். எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். எல்லோரும் என் வேலைப் போக போகிறது என்று நினைத்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு. அதன் பிறகு நானும் அவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.

இந்த அனுபவத்தை எதற்காக இங்கே கூறுகிறேன் என்றால் கோபப்படுவது உடம்பிற்கு நல்லதல்ல. அப்படியே கோபப்பட்டாலும், சிறிது நேரம் கழித்து கோபப்பட்டதற்கான காரணத்தைக் கண்டு பிடித்து அதை உடனே சரி செய்து கொள்வது நல்லது.

கடந்த 10 நாட்களாக கடும் மழை. வெள்ளம். பயங்கர போக்குவரத்து நெரிசல். தினமும் 9 நிமிடத்தில் கடந்த தூரத்தைக் கடக்க இப்போது 2 மணி நேரம் ஆகிறது. இரண்டு நாட்களுக்கு முன் மதிய சாப்பாட்டுக்காக வீட்டிற்கு சென்றேன். மழை சிறிது குறைந்திருந்தது. அதனால் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டேன். கடுமையான நெரிசல். நடுவில் மாட்டிக்கொண்டேன். கோபம் வருமோ என்ற சூழ்நிலை. மனநிலையை சரி செய்வத்ற்காக பாடல்களை கேட்க முயற்சித்தேன். ஆபிஸுக்கு போன் செய்து என்னுடைய இன்னொரு நண்பர் இன்னும் மதிய உணவிற்கு கிளம்ப வில்லை என்றால், போக்குவரத்து நெரிசலைப் பற்றிச் சொல்லி அவரை வேறு வழியில் போகச் சொல்லலாம் என நினைத்து தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் ஏற்கனவே கிளம்பி விட்டதாகச் சொன்னார்கள். சரி, அவரும் நம் பின்னால் வந்து கொண்டிருப்பார் போல என நினைத்துக்கொண்டேன். நான் அலுவலகத்தை விட்டு கிளம்பி ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. நடு ரோட்டில் அசையமுடியாமல் இஞ்ச் இஞ்சாக கார் நகர்கிறது. அப்போது அடுத்த லேனில் நான் தொடர்பு கொண்ட நபர் லஞ்ச் முடித்து ஆபிஸுக்கு திரும்பச் செல்கிறார். போன் செய்து ' எப்படி சார், இவ்வளவு சீக்கிரம் போக முடிந்தது?". " நான் வேறு வழியில் சென்றேன்" என்றார். நான் அவர் கஷ்டப் படக்கூடாது என போன் செய்தேன். ஆனால், அந்த பண்பு அவருக்கு இல்லை. என்னை தொடர்பு கொண்டு மாற்று வழியில் போகுமாறு சொல்ல வில்லை. அப்போதும் கோபம் வருவது போல் இருந்ததை சமாளித்தேன். அதன் பிறகு எனக்கு இன்னும் ஒண்ணரை மணி நேரம் ஆனது.

சாதாரணமாக 10 நிமிடத்தில் செல்லக் கூடிய வீட்டிற்கு நான் போய்ச்சேர இரண்டு மணி நேரம் முப்பது நிமிடம் ஆனது. நல்ல மழை வேறு. நான் வீட்டில் நுழைந்தவுடன் உடனே சாப்பிட அமர்ந்தேன்.

" ஏன், என் கிட்ட கோபப் படறீங்க. ட்ராபிக்குனா நான் என்ன செய்யறது"

" எதுத்து பேசாத?"

அடக்கி வைத்திருந்த கோபம் யாரிடமும் காட்ட முடியாமல் கடைசியில் வீட்டில். என் பழக்கப்படி மாலை எதிராளியின் இடத்திற்கே சென்று உடனே சமாதானப்படுத்த முடியவில்லை.

ஏனென்றால், இங்கே அந்த நேரத்து எதிராளியானவர் என்னில் பாதியானவர் அல்லவா?

அங்கே எப்படி கோபம் செல்லுபடியாகும்? அந்த ஒரு நிமிட கோபத்தை சரி செய்ய எனக்கு இரண்டு நாள் ஆனது..

No comments:

Post a Comment