Tuesday, November 3, 2015

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள் 
எனக்குள் திறன் இருக்கிறது! எனக்குள் திறன் இருக்கிறது..! எனக்குள் திறன் இருக்கிறது...! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்...! என்னிடம் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கின்றன.....!

இதெல்லாம் என்ன? மேலே படிக்கல்லாம்,

என் பார்வையின் மிகுதியில் சிக்குவது எல்லாம் பாஸிட்டிவான விசயங்கள்..மட்டுமே...! எல்லா சூழ்நிலைகளுக்கும் தீர்வினை எட்டும் தீர்க்க முடிவுகள் மட்டுமே நான் எடுக்கிறேன் என்று கூறுகிறேன்!

மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் விசயங்களையும் சிக்கலை கொடுக்கும் விசயங்களையும் எப்போதும் சொல்வதை தவிர்க்கிறேன். என்னிடமிருந்து வாழ்த்துக்களும், பரஸ்பரம் அன்பும், விசாரிப்புகளும் அலைகளைப் போல பரவிக் கொண்டே இருக்கின்ற.

ஊரின் விடியலுக்கு போராடக்கூடிய பெரிய செயல்கள் செய்ய முடியாவிட்டாலும் ஒரு மண் பானை வாங்கி நீர் ஊற்றி வீட்டுக்கு வெளியே தெருவில் வந்து செல்லக்கூடிய மனிதர்களின் தாகம் தணிக்க வைக்கும் அளவிற்கு திறனுள்ளவன்தான்......... நான்.......நான்........நான்...............!

மேலே சொன்ன மாதிரி தினமும் மனசுக்குள்ளே சொல்லிகிட்டே இருந்தீங்கன்னா நேர்மறையான எண்ணங்கள் நமக்குள்ளே ஆட்டோமேட்டிகா வரும்னு சொல்றாங்க....அது எப்டிப்பா வரும்.. மாயமா மந்திரமா..?

இங்கே கொஞ்சம் கவனீங்க.....

எதை வலுவாக திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறோமோ அது உண்மை என்று மனது நம்புகிறது. மேலும் மனம் முடிவு செய்யும் தீர்மானமான முடிவுகள்தான் செயலாக மாறுகிறது. உதாரணமாக பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கவேண்டும் என்று நாம் முதலில் நினைக்கிறோம்.

வெறுமனே முதலில் நினைப்பது மனதில் நிகழ்கிறது. அது தீர்மானமான பின்னால்... கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கி வருகிறோம். ஸ்தூலமான இந்த உடலை மனதில் தோன்றும் சூட்சுமமான தீர்க்கமான எண்ணம்தானே வழி நடத்துகிறது.

அப்படித்தான் திரும்ப திரும்ப எதை நம்புகிறோமோ (தீர்க்கமாக) அதை வாங்கிக் கொள்ளும் ஆழ் மனது...அதை ஒரு கட்டத்தில் செயல்படவைக்கிறது. அதாவது நாமே அதை செய்கிறோம். நாம் செய்ய வேண்டியதை பெரும்பாலும் செய்யாமல் காலத்தையும் நேரத்தையும் குறை கூறி கொண்டே இருக்கிறோம். இப்போதிருக்கும் நமது நிலைக்கு கடந்த காலத்து நமது செயல்கள்தான் காரணம் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. அப்படி என்றால் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கபோவது எது? நமது நிகழ்காலத்து செயல்கள்தானே....?

நிகழ் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.. இது ஒரு புரியாத புதிர்.

புறச்சூழ்நிலை, பணவசதி, நமது பிரச்சினைகள் எல்லாம் ஒரு மாயை....அதிலிருந்து தொடர்ச்சியான பாஸிட்டிவ் சிந்தனைகள் மூலம் வெளி வர முடியும் என்று தான் சொல்கிறார்கள். ஒரு விசயத்தை எடுத்துப் பார்த்தால் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் ஒரே ஃபார்முலாதான் இருந்திருக்கிறது. அவர்கள் எப்போதும் தங்களின் செயல்களிலும் நேரத்திலும் கவனம் வைத்திருந்ததோடு மற்ற மனிதர்களின் நிறையை பற்றி மட்டுமே பேசி இருக்கிறார்கள்.

என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்... நீ நிலையாமை (இதை பற்றி அப்புறம் பேசுவோம்)பற்றியே நிறைய பேசுகிறாய்.... உடல் பொய்..எல்லாம் மாயை என்று அடிக்கடி சொல்கிறாய் நீ எப்படி நேர்மறை சிந்தனை உடையவனாவாய் என்று.....

சரி நிலையாமை பற்றி பேசுவதும் நேர்மறை என்பதை நண்பர் அறிந்திருக்கவில்லை... ! நிலையாமை உணர்ந்தால் கர்வம் போகும். கர்வம் இல்லை என்றால் அன்பு பெருகும். அன்பு பெருகிறானால் செய்யும் செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஈடுபாடு அதிகரித்தால்... புரடக்டிவிட்டி என்னும் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

உற்பத்தி திறன் அதிகரித்தால்... லாபம் கிடைக்கும். லாபத்தினால் பொருள் கிடைக்கும். பொருளினால் இம்மை வாழ்க்கை அல்லது இந்த லெளகீக வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உடல்சார் தேவைகளும் சுற்றங்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் போதும் மனம்.. அடுத்து என்ன என்று ஆராயும் அங்கே.... நமக்கு தேவையான அல்லது எப்போதும் உண்மையான பேருண்மை வெளிப்படும்....இப்போ சொல்லுங்க... நிலையாமை எப்படி எதிர்மறையை போதிக்கும்....அது நேர்மறையின் நிழல்தானே....?

நேர்மறயான எண்ணம் இருந்ததால்தனே... ரூஸ்வெல்ட்.. சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு அமெரிக்க ஜனாதிபதியாயிருந்தார்?

நேர்மறையான எண்ணம் இருந்ததால் தானே.. .மகாத்மா காந்தி.... நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றினை நமக்கு கொடுத்தார்...

மொத்த ஆய்வுக் கூடமும் எறிந்த போது எடிசன் கவலைப்படவில்லை....என் தவறுகள் எரிந்து கொண்டிருக்கின்றன என்றார்...! அந்த நேர்மறைப் பார்வைதானே....இன்று எல்லோருடைய வாழ்க்கையிலும் வெளிச்சம் கொடுத்திருக்கிறது...

வலைப்பூக்களிலும், இணையங்களிலும் மிகுதியாக நிறைந்திருப்பது.....இளைஞர்கள். இளைய இந்தியா.. இன்று குழுமியிருக்கும் இடம்.. இணையம்.....! இதன் பயன்பாடுகள் நேர்மறையாகவும்... பயனுள்ள வகையிலும்...சக்தி மிகுந்ததாகவும் மாற....மிகுதியான விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

இங்கே... எழுத்துரிமை, பேச்சுரிமை, சமூகக் கூட்டுறவு என்று எல்லாமே இருக்கிறது.. ! கண்ணிமைக்கும் நேரத்தில் உலக செயல் பாடுகள்.. மனித மூளைகளின் கவனித்திற்கு வந்து விடுகிறது ஆனால் அணுகும் முறைக்கும், பயன்பாடுகள் பற்றிய தெளிவுக்கும் நேர்மறையான சக்தி மிகுந்த பார்வை தேவைப்படுகிறது.

நேர்மறையான ஒரு பாசிட்டிவ் அவுட் லுக் (இது நம்ம PC OUTLOOK இல்லை, நேர்மறையான நோக்குடன்)நம் இளைஞர்களின் உடனடித் தேவை!

No comments:

Post a Comment