* ஒருவன் எவ்வளவு பாவியாக இருந்தாலும், ""நான் பாவியாக இருக்கிறேனே! எப்படி கடைத்தேறப் போகிறேன்!'' என்று அழுது கொண்டிருப்பதனால் பயன் சிறிதும் இல்லை.
* வெறும் வருத்தத்தினாலும், புலம்பலினாலும் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஊக்கத்தோடு நம் கடமைகளைச் செய்தால் நிச்சயம் உருப்படலாம்.
* மனங்களில் நல்லமனம் என்றும், கெட்டமனம் என்றும் இருவேறு மனங்கள் இல்லை . மனம் என்பது ஒன்று தான் இருக்கிறது.
* நாம் அனுபவிக்கும் இன்பத்தை அறியாமையால் புறவுலகத்தில் இருந்து பெறுவதாக எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் இன்பம் நமக்குள்ளே தான் இருக்கிறது.
* கடவுளின் பேரால் எவ்வளவு பாரத்தைக் கொடுத்தாலும் அவ்வளவையும் அவரே ஏற்றுக்கொள்வார். ஆனால், நாம் நம் மனதில் சுமைகளை சுமப்பதால் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறோம்.
* உழைப்பும் சமூகசேவையும் உலகத்திற்கு நன்மை செய்வனவாகும். உழைப்பின் மீதும், நம்மால் முடிந்த சேவைகளையும், பிறருக்கு உதவி செய்வதையும் உங்கள் அடிப்படைக் கடமையாகக் கொள்ளுங்கள்.
சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும்.
அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.
இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.
மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.
மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது.
அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும்.
மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும்.
நம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும்.
உடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.
* முற்பிறவியில் புண்ணியவினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.
* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டுவராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை.
* விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும், தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது.
* பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது
No comments:
Post a Comment