Friday, March 6, 2015

முத்தான சிந்தனை துளிகள்

முத்தான சிந்தனை துளிகள்

வார்த்தை என்பது உயிர்ப்புடன் கூடிய எண்ணங்களின் போர்வை. சூழலுக்கும், காலநிலைக்கு தக்கவாறும் அவற்றின் இயல்பும், பொருட் செறிவும் மாறும்…

01. வாழ்க்கை என்பது கோடுகளால் கட்டங்கள் போடப்பட்ட மாயப் பெட்டி ஒன்றுக்குள் ஓடுவதைப் போன்றது. நடு வழியில் சரியான பாதை எதுவென்று தெரியாத குழப்பம் ஏற்படும். அதைப்பார்த்து பயணத்தை நிறுத்திவிடாதே.. தொடர்ந்து நட ஒரு கட்டத்தில் சரியான பாதையைக் கண்டு பிடிப்பாய்..

02. ஒரு செய்தி உண்மையாக இருந்தாலும் அதை மற்றவருக்கு உன்னால் பிரியமாகச் சொல்ல முடியாவிட்டால் உண்மையைக் கூட சொல்லாதே. ஆம்..! உண்மையைச் சொல் பிரியமாகச் சொல்.

03. கேட்பதற்கு பிரியமாக இருந்தாலும் உண்மை இல்லாததை சொல்லாதே. அதேவேளை அன்பாக சொல்..! இல்லாவிட்டால் சொல்ல வேண்டாம்.

04. மற்றவனுடன் உன்னை ஒப்பிட்டு பார்க்காதே.. அவன் வேறு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறான், நீ வேறு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறாய். இரண்டு மனிதர்களை ஒரு நோக்கத்திற்காக படைக்க கடவுள் முட்டாள் இல்லை.

05. எதையும் உன் தன்மானப் பிரச்சனையாக பார்க்காதே.. என்று நீ ஒரு விடயத்தை தன்மானப் பிரச்சனையாகப் பார்க்கிறாயோ.. அன்றே உன்னில் ஏதோ பிழை இருப்பதை உணர்ந்து கொண்டு, உன்னைத் திருத்திக் கொள்.

06. எதையுமே தன்மானப் பிரச்சனையாக்கி சீரியசாக எடுத்து, பகை மூட்டத்தை கிளப்பாதே.. ஏனென்றால் சீரியஸ் ஆனவர்கள் போக வேண்டிய இடம் வைத்தியசாலை.. நீ சிம்பிளாக இரு.. சிக்கல்களை வெல்ல அதுவே மருந்து.

07. சாகும் நேரத்தில் சங்கரா.. சங்கரா.. என்று கடவுளின் துணையை நாட வேண்டிய ஒருவன் வாய் தடுமாறி, கிங்கரா கிங்கரா என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் உயிரை கிங்கரனான எமன் விரைந்து வந்து எடுத்துச் சென்றான். வார்த்தைகள் தப்பாக வந்தால் தப்பானதே வாழ்வில் நடக்கும். மற்றவருடன் உன்னை ஒப்பிடுதல், சீரியஸ்சாக இருத்தல், தன்மானம் பார்த்தல் ஆகிய மூன்றும் தப்பான வார்த்தைகள் கிங்கரனை அழைக்கும் தீய மந்திரங்கள்.

08. எய்த அம்பு.. வீணாகக் கழித்த காலம்.. தப்பான சொற்கள் ஆகிய மூன்றும் திரும்பி வர முடியாதவை. இவை மூன்றும்; அம்பு போன்றவை, எய்துவிட்டால் திரும்பப் பெற முடியாது.

09. நெஞ்சில் சுமக்காத எண்ணங்கள் ஒரு போதும் நிஜமாக செயற்படப்போவதில்லை. முன்னேற்றத்தை முனைப்பாக நெஞ்சில் நிறுத்தாத எவரும் இறுதி வெற்றி பெறமாட்டார்கள். கெட்ட வார்த்தைகளை உன் நெஞ்சில் பாதுகாத்தால் அவை உன் நெஞ்சை அந்த வார்தைகள் போலவே அழுக்காக்கும் என்பதை உணர்ந்து கொள்.

10. எப்போதுமே உழைப்பை தன் பாதியாக வைக்க வேண்டும் என்பதால்தான் சிவன் சக்தியை தன் பாதியாக வைத்தான். உழைப்புப் பாதி, சிரிப்புப் பாதி இல்லாவிட்டால் சிவனே இந்த உலகில் இருக்க முடியாது என்பதே இதன் பொருள். பென்சன் எடுத்துவிட்டு சிவன் கோயில் போய் சிவனே என்று இருக்க எண்ணாதே.. உழைக்காமல் கோயில் போய் நீ சிவனாக முடியாது.

11. உழைப்போர் ஊழையும் உப்பம் காண்பார் என்பார் வள்ளுவர். உங்களுக்கு கஷ்டகாலமானாலும், நாடு கஷ்டத்திலிருந்தாலும் நீ உழைத்துக் கொண்டே இரு.. துயரம் ஒரு நாள் பறக்கும்;.

12. வானம் வசப்படுவதன் ஆரம்பம் வார்த்தைகளில், அது ஆலமரமாக வேரூன்றி வளர்வது ஆழ் மனத்தில், முற்றுப் பெறுவது உழைப்பில். படைப்பாக்கமில்லாத நாக்கு நம்மை அழிவுக்கு ஆளாக்கும் ஆகவே அதைப் பயன்படுத்தாதே.

13. அறிஞர்களை பார்த்து நீ தீய வார்த்தைகளை பேசினால் அவர்கள் உனக்கு பதில் கூறாது அமைதியாக போவது ஏன் என்று கேட்கிறாயா..? தீய வார்த்தைகளை திருப்பி எய்து வீழ்ச்சியடைய எந்த அறிஞனும் விரும்பமாட்டான்.

14. நம்பிக்கையான உடன்பாடான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நெஞ்சு வேண்டும். அது இல்லாவிட்டால் அத்தகைய நெஞ்சில் இருந்து இலக்குமி வெளியேறிவிடுவாள். இலட்சுமி வெளியேறினால் அந்த வெற்றிடத்தில் இயல்பாகவே வறுமை குடியேறும்.

15. உழைக்க உழைக்கத்தான் சக்தி அதிகரிக்கும். உழைக்காத உடலுக்கு சக்தி தேவையில்லை.. அந்த உடல் சிவம் என்ற நிலையில் இருந்து விடுபட்டு விரைவாக சவமாக மாறும்.

16. அம்பறாத்துணியை முதுகுக்குப் பின்னால் வைத்திருப்பதன் நோக்கம் அது கண்களில் படக்கூடாது என்பதற்காகத்தான். நமது நாக்கும் அம்பறாத்துணி போன்றதுதான் அதை முன்னிறுத்தி வாழக்கூடாது.

17. உயிர்களை ஆதரிக்கும் இல்லங்களில் நல்ல வார்த்தைகள் வரும், அதேவேளை உயிர்களை கொன்று விற்கும் கறிக்கடையில் ஏன் காதுகளால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் வருகின்றன என்று எண்ணிப்பார். கெட்ட வார்த்தையும், கொலையும் எப்போதுமே பக்கம் பக்கமாக இருக்கும்.

18. அம்புபோலவே வார்த்தைகளும் அவை எதற்காக எய்யப்பட்டனவோ அந்த இலக்கைத் தொடும். மலரை சொரிவதும் வார்த்தைகள் மனிதனை மாய்ப்பதும் வார்த்தைகள். சரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. ஆகவே எய்யும்போது கவனமாக எய்..!

19. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு – ( திருக்குறள் 374 )
நமது மூளை வலது இடது என்று இரண்டு பக்கங்களாகத் தொழிற்படுகிறது. இடது பக்கம் ஆதிக்க மூளை, வலது பக்கம் அருளியல் மூளையாகும். இந்த இரண்டும் வேறு வேறு அளவில் வேறு வேறு பணிகளை செய்கிறது என்று கண்டு பிடித்து 1950 ல் ரோகர் ஸ்பெர்ரி என்பவர் நோபல் பரிசு பெற்றார். இதைத்தான் மேலேயுள்ள குறளில் அவருக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வள்ளுவர் கூறுகிறார். மூளைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு, ஒன்று அருள் மற்றது பொருள் என்பது இதன் கருத்து. ஆகவே திருக்குறள் போன்ற நூல்களை படித்து பயனடைவது வாழ்வில் வெற்றிபெற மிக அவசியமாகும்.

20. மூளையின் வழியேதான் நமது இன்பங்கள், மகிழ்ச்சி, சிரிப்பு, சந்தோஷம், துயரங்கள், வலிகள், துக்கம், பயம் ஆகிய அனைத்தும் தோன்றுகின்றன. – இது ஐந்தாம் நூற்றாண்டில் கிப்போகிரட்டிஸ் கூறியது. ஆகவே மூளையை பாதுகாத்துக் கொள்.

21. 1932 ல் பிரிட்டனைச் சேர்ந்த எட்கர் ஆல்ரின் மூளையின் மின் இயக்கத்தை ஆராய்ச்சி செய்து, அதை அளந்து காட்டியதற்காக நோபல் பரிசு பெற்றார். அவருடைய அளவீட்டின்படி மூளையானது நான்கு விதமான மின்னலைகளை எழுப்பும்.

01. ஆழ்ந்த உறக்கத்தில் 1 முதல் 4 வரை மின் ஆற்றல் அலைகளை எழுப்பும். இது டெல்டா அலைகள் எனப்படும்.

02. தூங்க ஆரம்பிக்கும்போது 4 முதல் 7 வரை மின் ஆற்றல் அலைகளை எழுப்பும். இது ரீற்றா அலைகள்.

03. உடலும், மனமும் ( றிலாக்ஸ் ) தளரும் போது 7 முதல் 14 வரை மின் ஆற்றல் அலைகளை எழுப்பும். இது ஆல்ஃபா அலைகள் எனப்படும்.

04. நாம் உலகியல் நடவடிக்கையில் ஈடுபடும் போது 14 முதல் 21 வரை மின் ஆற்றல் அலைகளை எழுப்பும். இது பீற்றா அலைகள் எனப்படும்.

இந்த அளவில் 07 முதல் 14 வரைதான் இடது மூளையும் வலது மூளையும் இணைந்து பணியாற்றும். வள்ளுவர் கூறிய அருளியலும் உலகியலும் சமநிலையில் இருக்கும் இடம் இதுதான். பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு சிறந்த வாழ்வு பெற இதுவே சரியான அளவாகும். இதுவே சமுதாயத்திற்காக வாழும் சிறந்த வாழ்வாகும்.

மேலும் மின் அதிர்வானது 14 ற்கும் மேலே போனால் நாயிலும் கடைப்பட்ட மனிதராக வாழ நேரிடும். ஆசை, கோபம், குரோதம், சுயநலம் எல்லாம் நிறைந்த வாழ்வு வரும், அதுவே விரைவு மரணத்திற்கான மாத்திரை.
இத்தனை கண்டு பிடிப்புக்களையும் ஒரேயொரு திருக்குறளில் ( 374 வது குறள் ) சொல்லிப் போன வள்ளுவன் ஒரு தமிழன் அவனை நீ எவ்வளவு படித்திருக்கிறாய் என்று எண்ணிப்பார்.

22. நமது உடலின் முக்கிய வேலையே கிடைத்திருக்கும் அற்புதமான மூளையை சுமந்து கொண்டிருப்பதுதான். அதை உணராது, ” வெற்று உணர்வுகளை சுமக்கும் வாகனமாக உடலைப் பாவிப்பது சரியா..? ” என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

23. அளவுக்கு அதிகமாக மரம் கிளைகளை விட்டு வளர்ந்தால் என்ன செய்வாய்.. வெட்டி விடுவாய். அதுபோல ஆசைகளும் அளவுக்கு அதிகமாக வளர விடக்கூடாது, வெட்டிவிட வேண்டும். அதுபோல முட் செடிகளுக்கு நீர் ஊற்றக் கூடாது.

24. வீட்டின் சன்னலை திறந்து வைத்தால்தான் அழுக்குக் காற்று வெளியேறும், புதிய காற்று உள்ளே வரும், அதுபோல இதயத்தின் பூட்டிய கதவுகளை திறந்து விடவேண்டும் ஏனென்றால் புதிய காற்று அப்போதுதான் வரும்.

25. பீட்டர் ரஸ்ஸல் என்ற அறிஞர் இந்தப் பூமியை ஒரு பேருயிரி என்று கூறுகிறார். காரணம் பல்வேறு உயிரினங்களை அது தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த உலகத்திற்கு பூவுலக மனம் என்று ஒரு மனம் இருக்கிறது. அதுபோல பிரபஞ்சத்திற்கு பிரபஞ்ச மனம் என்று ஒரு மனம் இருக்கிறது. மேலும் உயிர்களால் நிறைந்த உலகத்திற்கு ஒரு மூளையும், மனமும் இருக்கிறது. இந்தப் பேருயிரியின் மனத்தின் ஒரு பகுதியே நமது மனம். ஜப்பானில் சுனாமி வடிவில் வந்து, அணு சக்தி மையத்தை அடித்தது புவியின் கோப மனமே. எனவேதான் நாம் உலகத்தை ஏமாற்றக்கூடாது என்கிறார்கள் நல்ல மனமுள்ள அறிஞர்கள்.

No comments:

Post a Comment