அனைத்தையும் இழந்தவர்கள் இலக்கினை அடைந்தவர்கள்…
சாலையோர தெருக்களில் ஹார்மோனி யத்தை வாசித்தபடி நெருப்பை விழுங்கி வித்தை காட்டிய சர்க்கஸ்காரர் இன்று பல்லாயிரம் பேருக்கு அதிபதி. லாலிபிரேட் என்ற மனிதருக்கு பின் அவர் நிறுவிய சாக்யூ டியூ சொலைல் என்ற சர்க்கஸ் நிறுவனம் சரித்திரம் படைத்திருக்கிறது. சர்க்கஸ் ஜாலங்களை போல் இது வெறும் வார்த்தை ஜாலமல்ல.
தோல்விகளின் தோள்களில் ஏறி பயணம் செய்த ஒரு சாதனையாளரின் வெற்றிச் சரித்திரம்.
லாஸ் வேகஸ் தெருக்களில் இவரின் இசையுடன் கூடிய அக்ரோபட் நிகழ்ச்சி வெகு பிரபலம். நட்ட நடு ரோட்டில் தன் பயணத்தை துவக்கிய லாலிபிரேட் இன்றைய சர்க்கஸ் துறையின் சாதனை நாயகன். தன் சொந்த முயற்சியால் ஒரு சர்க்கஸ் குழு அமைத்து அதற்கு சாக்யூ டியூ சொலைல் என்று பெயர் சூட்டியிருந்தார்.
அப்போது லாலிபிரேடிடம் ஒருவர் லாஸ் ஏஞ்லஸ் நகரில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் உங்கள் குழுவால் பெரும் பார்வையாளர் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? என்று சவால் விட்டார். நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கிய லாலிபிரேட் குழுவினருக்கு கிடைத்தது ஏமாற்றமும் தோல்வியும்தான். சாதாரணமாகத் துவங்கப்பட்ட இந்த குழு இன்று மாபெரும் நிறுவனமாக உயர்வதற்கு காரணமாய் அமைந்தது, இந்தப் பந்தயத்தில் அவருக்கு ஏற்பட்ட தோல்வியும் அந்த வலி அவருக்குள் ஏற்படுத்திய வெற்றி முனைப்பும் தான்.
ஸ்டான்ப்ராட் பல்கலைகழகத்தில் தொழிலதிபர் ஆவதற்கான பயிற்சியளித்து வருபவர் ஜிம் எல்லிஸ். ஒரு சாதாரண மனிதனை பெறும் தொழில் ஜாம்பவானாக உருவாக்குவது, “ஒரு சூதாட்டக்காரனைப் போல் தைரியமாக முடிவெடுக்கும் ஆற்றல்தான்” என்று குறிப்பிடுகிறார். இந்த உத்திதான் லாலிபிரேட்டின் உயரத்தைக் கூட்டிய வெற்றி ரகசியம். ஆனால் பெரும்பாலான கோடீஸ்வரர்களின் கடந்த கால வாழ்க்கை முழுவதும் நிரம்பியிருப்பது வெறித் தனமான உழைப்பும், சாதிக்க வேண்டும் என்ற தீவிரமும்தான். உதாரணமாக,
* உலகின் புகழ்பெற்ற கோடீஸ்வரர் ஜான் பால் (ஜான் பால் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்) வசிப்பதற்கு இடமின்றி ஒரு காரை தன் இருப்பிடமாக மாற்றி சிரமங்கள் தாண்டி சிகரம் தொட்டவர்.
* ஹாங்காங் லி கா ஹிங் 15 வயதில் தன் பள்ளிப் படிப்பை துறந்து முழு குடும்ப பொறுப்பையும் சுமந்தவர். லி கா ஹிங்கின் தந்தை இறந்தவுடன் அவர் கூறிய வார்த்தைகள் இவை. “என் குழந்தைப் பருவம்தான் என் வாழ்வின் இருண்மை காலம். வெறும் வலிகளை மட்டுமே பார்த்திருந்திருந்த போது என் தந்தை காச நோயால் இறந்து போனார். இன்று நானும் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று கூறும் லி கா ஹிங் இன்று உலகின் முன்னனி பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்.
* ஓப்ரா வின்ப்ரே, அமெரிக்காவின் புகழ் பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரம். மிகக் குறைந்த வயதேயான ஓர் இளம் தாய்க்கு மகளாக பிறந்தவர் ஓப்ரா. அவர் தன் உறவினர்கள் வீட்டில் வசித்து வந்தபோது பாலியல் கொடுமைக்கு ஆளானவர். அந்த வலி, வேதனை, இவை தந்த உத்வேகம் மட்டுமே இன்று அவரை புகழின் உச்சியில் நிறுத்தியுள்ளது.
இன்னும் இது போல உலகின் முன்னணி வெற்றியாளர்கள் பட்டியலை அலசினால் அதில் பெரும்பாலோனோர், அனாதைகளாய், ஆதரவற்ற வர்களாய் பள்ளிப் படிப்பைக்கூட படிக்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதுபோல் அடிப்படை வசதிகளை இழந்தவர்களால் எப்படி இவ்வளவு தூரம் சாதிக்க முடிகிறது? என்ற கேள்விக்கு ஸ்டான் ப்ராட் பல்கலைக்கழகத்தின் ஜிம் எல்லிஸின் பதில் இதோ: “அனைத்தையும் இழந்த இவர்கள் வெற்றி பெறுவதற்க்கு காரணம், இனி இழப்பதற்கு அவர்களிடம் ஒன்றும் இல்லை. நம்பிக்கையும் உழைப்பையும் தவிர” என்று கூறினார்.
மேலும் வறுமையின் சுமை, உதவிகள் இல்லாதபோது நமக்கு ஏற்ப்படுகிற கசப்பான அனுபவங்கள், அவமானங்கள், தனிமையுணர்வு இவை அனைத்தும் வெற்றி பெறுவதற்கும் உயர்வதற்கும் உந்து சக்தியாக மாறிவிடுகின்றன. நம் இலக்குகளை அடைவதற்கும், நம் தாழ்வு மனப் பான்மையை உடைத்தெறிவதற்கும் நிலையில்லாத திட்டங்களில் வெற்ற காண்பதற்கும் மேலே குறிப்பிட்டவைகள் எல்லாம் உதவுமா என்ற கேள்விக்கு, இவைகள்தான் நிச்சயமாக உதவும் என்று பதில் கூறினார் ஜிம் எல்லிஸ்.
வெற்றிச்சூத்திரங்களை அள்ளி வழங்குகிற ஜிம் எல்லிஸ், அவர் உறவினர்களால் வளர்க்கப் பட்டவர். அவரின் வளர்ப்புத் தாயின் மறைவிற்கு பின் அவர் படிப்பை தொடர முடியாமல் கை விட்டார். இன்று அவரின் அபார உழைப்பால், திறமையால் தடைகளைத் தாண்டி தன்னிகரற்ற பயிற்சியாளராய் உருவாகியுள்ளார்.
வாழ்வின் பின்னடைவுகளை பின்னுக்குத் தள்ளி துணிச்சலான முடிவுகளுடன் சாமர்த்தியமாய் வெற்றி காண்பதே, இது போன்ற வெற்றிக் கதைகள் நமக்கு கற்றுத் தருகிற வாழ்க்கைப் பாடங்கள்!!
No comments:
Post a Comment