Monday, April 6, 2015

சுவாமி விவேகானந்தரின் அறிவுரை

சுவாமி விவேகானந்தரின் அறிவுரை

முன்னுரை:

நல்ல உற்சாகத்துடன் திகழுங்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காக இறைவனால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பதை நம்புங்கள். அவற்றை நாம் செய்தே தீருவோம்.

பொருளுரை:

நம்பிக்கைக் கொள்ளுங்கள்
   
உலக வரலாறு என்பது தன்னம்பிக்கை உடைய சிலரின் வரலாறே ஆகும். ஒரு நாட்டின் எதிர்காலம் அங்குள்ள மக்களைப் பொறுத்தே உள்ளது. மக்கள் நல்லவர்களா, அறிவாளிகளா, திறமைசாலிகளா என்பதை பொறுத்தே அந்நாட்டின் எதிர்காலம் அமையும். அதனால் தான் சுவாமிஜி ‘சிறந்த மனிதனை உருவாக்குவதே என் பணி’ என்றார். இன்றையப் பிரச்னைகளுக்கு நாம் தான் சொந்த முயற்சியில் தீர்வு காண வேண்டும். அதற்கான துணிவும், ஆற்றலும் மற்றும் நம்பிக்கையும் நமக்கு வேண்டும்.

வெளிநாடுகளின் எதிர்பார்ப்பு!

முழுமையானதொரு நாகரிகத்துக்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கான அருஞ்செல்வம் இந்தியாவில் இருந்து வெளிப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த இனத்தின் ஈடு இணையற்ற பாரம்பரியமான ஆன்மிகத்துக்காக உலகம் காத்துள்ளது.

நமது முன்னோர் பாதுகாத்து வைத்த அமுதத்தின் ஒரு சிறு துளியைப் பருகுவதற்கு நம் நாட்டின் எல்லைக்கு வெளியே, லட்சக் கணக்கானோர் பசித் துடிப்புடன் உள்ளனர். எனவே நாம் வெளிநாடுகளுக்குச் சென்றாக வேண்டும். அவர்கள் தரக் கூடிய ஏதாவது ஒன்றைப் பெற்றுக் கொண்டு பதிலாக நாம் அவர்களுக்கு ஆன்மிகத்தை அளிக்க வேண்டும்.

புதிய இந்தியா!

புதிய இந்தியா உருவாகட்டும்! கலப்பை ஏந்திய விவசாயிகளின் குடிசையில் இருந்து நவீன பாரதம் உயிர்த்தெழட்டும்! இந்த மக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அடக்குமுறையை பொறுத்துக் கொண்டுள்ளனர், மெளனமாக சகித்துக் கொண்டுள்ளனர். அதன் விளைவாக அற்புதமான பொறுமையையும், குன்றாத ஆற்றலுடனும் உள்ளனர். அவர்களால் உலகையே ஆட்டிப் படைக்க முடியும்.

இத்தகைய அமைதி, போதும் என்கின்ற மனம், அன்பு, மெளனத்தின் ஆற்றல், இடையறாத உழைப்பு, பணியில் ஈடுபடும் போது வெளிப்படும் சிங்கத்துக்கு நிகரான ஆற்றல் இவற்றை நீங்கள் வேறு எங்கு காண முடியும்?

இந்தியா எழுச்சி பெறும், உடல் பலத்தால் அல்ல, ஆன்மிக பலத்தால், அமைதி என்னும் கொடியால், அன்பெனும் கொடியால், துறவியின் உடையால், செல்வத்தால் அல்ல, பிச்சையேந்தும் திருவோட்டின் ஆற்றலால். கடந்த காலத்தின் எலும்புக் கூடுகளே! இதோ உங்கள் சந்ததியாகிய எதிர்கால இந்தியா நிற்கிறது.

தியாகமும், சேவையும்

தியாகமும், சேவையும் தான் இந்தியாவின் லட்சியங்கள். இந்தத் துறையில் இந்தியாவை ஊக்கப்படுத்தினால் போதும். மற்றவை தாமே வந்து சேரும். இப்போது தேவைப்படுவதெல்லாம் மகா தியாகம், மகா சேவை, மகா தைரியம் இவையே. தீவிர முயற்சியில் ஈடுபட்டு எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி அறிந்து கொள்வதே இப்போதைய தேவை ஆகும்.

முடிவுரை:

நம்மிடம் எது இல்லையோ, நம் முன்னோர்களிடையே எது இருக்கவில்லையோ, எது யவனர்களிடம் இருந்ததோ அது வேண்டும். உறுதி, செயல்திறன், ஒற்றுமை இவையே நமக்கு வேண்டும். தொடர்ந்து பின்னோக்கிப் பார்ப்பதை சற்று விட்டுவிட்டு, முன்னோக்கி நெடுதூரம் செல்லும் பரந்த பார்வை வேண்டும். தலையில் இருந்து கால் வரை ஒவ்வொரு நரம்பிலும் செயல்துடிப்பு இதுவே நமக்கு வேண்டும்.

No comments:

Post a Comment