Wednesday, September 9, 2015

உன்னால் முடியும்: ஆர்வத்துடன் ஈடுபட்டால் வெற்றிதான்!

உன்னால் முடியும்: ஆர்வத்துடன் ஈடுபட்டால் வெற்றிதான்!
இயற்கை உணவு மற்றும் சிறுதானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது நாம் அறிந்ததுதான். இதற்கு ஏற்ப பல்வேறு ஊர்களிலும் இயற்கை மற்றும் சிறுதானிய உணவகங்கள் என திறந்து வருகின்றனர். ஆனால் எல்லோரும் இந்த தொழிலில் தாக்கு பிடித்து நிற்கிறார்களா என்றால் கிடையாது. பெரிதாக லாபம் பார்க்க முடியாது. அல்லது நஷ்டம் ஏற்படும். சொந்த ஆர்வத்தில்தான் இதை செய்து வருகின்றனர் பலரும். இவர்கள் தொழிலை மேற்கொண்டு தொடர முடியாததற்கு இன்னொரு காரணம் இந்த விளைபொருட்கள் ஆண்டுதோறும் தேவைக்கு ஏற்ப கிடைக்காததுதான்.

இந்த இடைவெளியை நிரப்புவதே எனது தொழில் முயற்சி என்கிறார் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த லெஷ்மி. தனது தொழில் முயற்சிகளுக்கு பக்கபலமாக கணவர் மணிகண்டனும், மாமியாரும் இருந்து வருகின்றனர் என்றவர், தனது தொழில் அனுபவத்தை `வணிக வீதி’ வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து...

நிறைய படிக்க வேண்டும், வேலைக்குப் போக வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக இருந்தது. ஆனால் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டனர். இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு பிஏ, மற்றும் எம்பிஏ பட்டங்களை தொலைநிலைக் கல்வி மூலம் படித்து முடித்தேன். வேலைக்குப் போகலாம் என்றால், குழந்தைகள், குடும்பம் என கவனிக்க வேண்டிய சூழல். ஆனாலும் ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என யோசனை ஓடும். அந்த சமயத்தில் மாடித்தோட்டம் மூலம் காய்கறிகள் பயிரிட்டேன்.

எனது கணவருக்கு இயற்கை உணவுகள் மற்றும் சிறுதானிய உணவுகள் குறித்த ஆர்வம் இருந்ததால் அதை வீட்டிலும் பழக்கினோம். குழந்தைகளும் அதை விரும்பி கேட்டனர்.

இந்த உணவுகளையே தொழில் முறையாக தயாரித்தால் என்ன என்று கணவரது உதவியுடன் உடுமலைப்பேட்டை நகரத்தில் கடை ஆரம்பித்தோம். முழுக்க முழுக்க சிறுதானியங்கள் மட்டும்தான். இந்த கடை ஆரம்பிக்க திட்டமிடும்போது, தேவையான சிறுதானியங்களை எங்கு எங்கு வாங்கலாம் என பட்டியலிட்டுக் கொண்டு நேரடியாக, விவசாயிகள், உற்பத்தியாளர்களின் இடங்களுக்கே சென்று மொத்தமாகவோ அல்லது தொடர்ச்சியாக கிடைப்பதுபோலவோ எனது கணவர் பேசிவிட்டு வந்தார்.

கருப்பட்டி, கல்கண்டு வாங்க வேண்டும் என்றால் உடன்குடிக்கே சென்று நேரடியாக தயாரிப்பவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம்.

இப்படி வெளித் தொடர்புகளை அவர் கவனித்துக் கொள்ள நான் கோவை வேளாண்மை கல்லூரியில் உணவு தயாரிப்பு குறித்த பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றேன். மேலும் கோவையில் எம்எஸ்எம்இ வழங்கிய உணவுதுறை சார்ந்த பயிற்சிகள் என என்னை மேலும் தகுதிபடுத்திக் கொண்டுதான் இந்த துறையில் இறங்கினேன்.

நகரின் மையமான பகுதியில் தொடங்கிய கடையை இதர உணவகங்களைபோல நடத்த விரும்பவில்லை. பெண்களை மட்டும்தான் வேலைக்குச் சேர்த்தேன். அவர்கள் வெளியிடங்களில் வேலை செய்த அனுபவம் கொண்டவர்கள் என்றாலும், சிறுதானிய உணவுகளை பக்குவமாக சமைக்கத் தெரியாது, முதல் மூன்று மாதங்கள் நான் பக்கத்திலிருந்து அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன்.

மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தினேன். ஆனால் காலையில் கணவர், குழந்தைகளை வேலைக்கும், பள்ளிக்கும் அனுப்பிவிட்டு கடைக்கு வந்தால் இரவு பதினோரு மணி ஆகிவிடும்.

மனதுக்கு நிறைவான வேலையாக இருந் தாலும், குடும்பத்தை மிஸ் செய்கிறோமோ என்கிற எண்ணம் வந்ததால், கடையை மேற்கொண்டு தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். ஆனால் வீட்டில் சும்மா இருக்கக்கூடாது. இந்த தொழிலை அப்படியே வீட்டிலேயே செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. கைவசம் இருந்த பொருட்களை இது போன்று உணவகம் நடத்துபவர்களிடம் விற்பனை செய்ய முயற்சி எடுத்தோம்.

இதற்காக பலரிடமும் பேசியபோதுதான், அவர்களுக்கு தேவையான பொருட்கள் சீராகவும், தொடர்ந்து கிடைக்காமல் இருப்பது தெரிய வந்தது. இதனால் இதையே தொழிலாக செய்யலாம் என்று இறங்கிவிட்டேன். இதற்காக பல ஊர்களிலும் உள்ள இயற்கை அங்காடிகாரர்களோடும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டோம். பேஸ்புக் மூலம் இந்த முயற்சியை பலருக்கும் கொண்டு சென்றேன். இப்போது சென்னை, திருவண்ணாமலை, தஞ்சாவூர் என பல ஊர்களுக்கும் அனுப்பி வைக்கிறேன். ஆர்டர்களுக்கு ஏற்ப பேக்கிங் செய்து ரெடியாக வைத்திருப்பேன். வேலை முடித்துவிட்டு வந்ததும் எனது கணவர் பார்சல் அனுப்புவார்.

வீட்டு வேலை, குடும்பம் என முடங்கிவிடாமல், எனது படிப்பும் ஆர்வமும் புதிய முயற்சிகளை எடுக்க வைக்கிறது. இப்போது வீட்டிலேயே சிறுதானிய தின்பண்டங்கள் உற்பத்தியையும் தொடங்கி இருக்கிறேன். இதன் மூலம் வேலைவாய்ப்பும் அளித்து வருகிறேன். வருமானம் மட்டுமல்ல, மனதுக்கு நிறைவையும் தருகிறது எனது உழைப்பு என்று முடித்தார் லெஷ்மி

No comments:

Post a Comment