Tuesday, October 6, 2015

குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்

குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்
  
ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள். தினமும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நல்லதும் கெட்டதும் வந்து கொண்டே இருக்கின்றன.

விடிகாலைப் பொழுதில் துயிலெழ ஆரம்பிப்பதிலிருந்து உறங்கச் செல்லும் வரை எத்தனை எத்தனையோ சம்பவங்கள், நிகழ்வுகள், திடீர் திருப்பங்கள், ஒன்றுமே இல்லாத செக்கு மாட்டு வாழ்க்கை நிகழ்ச்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவங்கள். துன்பம் அழுத்த முனையும் பொழுது கடவுளின் கோவில்களைத் தேடி ஓடுவோம். துன்பத்திற்கு விடிவு கிடைக்காதா என்று மனதுக்குள் அழுது புலம்புவர். கடவுளிடம் சண்டைகள் போடுவர்.

ஒரு சிலர் மாய மந்திரவாதிகளை தேடுவர். ஒரு சிலர் டெம்ப்ளேட் ஜோசியக்காரர்களைத் தேடி ஓடுவர். ஒரு சிலர் கோவில்களை நோக்கிச் செல்வர். ஒரு சிலர் கோவில்களில் பரிகாரங்கள் செய்வர். இப்படி இன்னும் எத்தனையோ விதங்களில் துன்பங்களிலிருந்து விடுதலை பெற துடிப்பர்.

நாமெல்லாம் மைக்ரான் குடும்பங்களாகி விட்டோம். கணவன், மனைவி, குழந்தை என்றாகி விட்டதால் நம் பெரியோர்களைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை. வயிற்று உப்புசமாக இருந்தால் இப்போதெல்லாம் நாம் ஜெலுசில் குடிப்போம் அல்லவா? ஒரு தம்ளர் நீரில் எலுமிச்சையைப் பிழிந்து கொஞ்சம் உப்பு போட்டுக் குடித்தால் ஓடிப்போகும் வயிற்று உப்புசம். எத்தனை பேருக்குத் தெரியும் இந்த விஷயம்? எனக்கு இந்த விஷயமே என் வீட்டுக்கு வந்த ஒரு விருந்தினர் சொல்லக் கேட்டது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வாய் ஒரு வழி முறை உள்ளது. அந்த வழி முறைகள் குடும்பம் குடும்பமாய் பாதுகாக்கப்பட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லப்பட்டு வந்தன. சுய நலமும், பொருட்கள் மீதான ஆசையும், நுகர்வின் மீதான மோகம் கொண்ட பெண்களாலும் வாழ்க்கை முறை மாறி விட்டது. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

நண்பரின் வீட்டில் திருமணம் நடைபெற்றது.  நண்பரின் பையன் நன்றாகச் சம்பாதித்தான். வரப்போகும் மனைவிக்கு லட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவை எடுத்தான். நண்பரின் மனைவியோ 500 லிருந்து 750 ரூபாய்க்கு மேல் புடவையே எடுக்கமாட்டார். மனைவி மகனிடம் கடிந்து கொண்டார். அதற்கு பையன் நான் சம்பாதிக்கிறேன்.செலவு செய்கிறேன் என்றான்.

அறுபதாயிரம் ரூபாய்க்கு மனைவிக்குச் செல்போன் வாங்கிக் கொடுத்தான். இரண்டு இலட்ச ரூபாய்க்கு டிவி மற்றும் பிற. இனிதாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் அவனுக்கு வேலை பறிபோனது. கையில் காசும் இல்லாமல் போனது. செலவுக்கே திண்டாட்டம். பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது லட்ச ரூபாய் பட்டுப்புடவை. ஹாலில் உட்கார்ந்திருந்தது இரண்டு இலட்சரூபாய் டிவி. அதனால் என்ன பலன்?

கையிலிருந்த புதிய போனை விற்க முனைந்தான், வெறும் பத்தாயிரத்திற்கு கேட்டார்கள். வாங்கி ஒரு மாதம் இல்லை. அதற்குள் ஐம்பதாயிரம் போச்சு. இன்னும் இரண்டு மாதம் போனால் இரண்டாயிரம் ரூபாய்க்குக் கேட்பார்கள். செல்போன் கடை முதலாளி கையில் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் போனைப் பார்த்தான். அவரின் கடை ஷோரூமிலோ கோடிக்கணக்கான ரூபாய்க்கு மொபைல்கள் விற்பனைக்கு இருந்தன. அவனுக்கு அப்போதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் புரிந்தது.

தனி வீட்டில் மனைவியோடு சந்தோஷமாக வாழச் சென்றவன் வீட்டைக் காலி செய்து கொண்டு பெற்றோரின் வீட்டுக்கே வந்து சேர்ந்தான். மீண்டும் வேலை கிடைத்தது. மீண்டும் சம்பாதிக்க ஆரம்பித்தான். சம்பளம் முழுவதையும் அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்தான். குடும்பத்தின் தலைவியின் கையில் நிதியின் நிர்வாகம் வந்தது.

அவன் மனைவி இப்போது மசக்கையாக இருக்கிறார். அவன் அம்மாவிடம் இப்போது லட்சக்கணக்கில் பணம் இருக்கிறது. வரப்போகும் பேரனுக்கு சொத்துக்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார் நண்பர்.

அதே போல துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட ஒரு வழி உள்ளது. அது என்ன???
துன்பங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம் என்பதை எவரும் அறிவார் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம். அதுதான் சரி என்று உடும்பாய் இருப்பர். அதனால் விளையும் செயல்களால் உருவாகும் துன்பங்களை அவர்கள் அறிவதுமில்லை. அதைப் பற்றிய சிறிய அலசல் கூட செய்ய மாட்டார்கள்.

சர்க்கரை வியாதி வந்து விட்டது என்பார்கள். என்ன மருந்து சாப்பிட்டாலும் குறைய மாட்டேன் என்பார்கள். ஆனால் வாயைக் கட்ட மாட்டார்கள். நாக்கைக் கட்டுப்படுத்தி விட்டால், பின் நடப்பவை எல்லாமே நன்மைதான். நாற்பது வயது வந்து விட்டதா? உடனே அசைவ உணவுக்கு டாட்டா சொல்லி விட வேண்டும். ஆனால் யார்தான் செய்கிறார்கள்? உழைத்து உழைத்து ஓய்ந்து போகும் உடல்பாகங்களுக்கு மென்மையான வேலைகளை அல்லவா கொடுக்க வேண்டும். சிக்கன் 65 பார்த்தால் நாக்கில் எச்சில் ஊற்று எடுக்கிறது. மசாலா வாசனையை நுகர்ந்தால் வயிறு கபகபவென பசிக்கிறது. நாக்கில் உமிழ் நீர் அருவியாய் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. பிறகென்ன பாதி மென்றும், மெல்லாமலும் வயிற்றுக்குள் அவை சேகரமாகி விடுகின்றன. அதன் பலனை தொடர்ந்து அனுபவித்துதானே ஆக வேண்டும்?

நம் உடல் என்ன வேலை செய்கிறது அதற்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உடம்பினைச் சீராக வைத்துக் கொண்டால் உடம்புத் துன்பம் அற்றுப் போய் விடும். அதையும் மீறி உடல் துன்பம் வருகிறது என்றால் அது கர்ம வினை என்று உணரத் தெரிய வேண்டும்.

ஜோசியக்காரர்களிடம் சென்றால் பல நல்ல விஷயங்கள் உங்களின் எதிர்கால வாழ்வில் நடக்கப்போகிறது என்பார்கள். ஆனால் எதுவும் நடக்காது. ஏன் என்று கேள்வியைக் கேட்டால் உங்கள் கர்மபலன், உங்களுக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்களைத் தடுக்கிறது என்பார்கள். ஒரு சிலர் பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்பார்கள். அதற்கு தனிக் கட்டணம் என்பார்கள்.

ஆறறிவுக்கு எட்டாத கர்மபலனை நினைத்து நாம் ஒரு சில சமயம் வருத்தப்படுவதுண்டு. இந்தக் கர்மபலனைத் தீர்க்கவே முடியாதா? என்று ஏங்கும் நிலைமையும் ஒரு சிலருக்கு வரும்.

விதி கர்மபலனை அனுபவித்துதான் தீர வேண்டும் என்றுச் சொல்கிறது. கீதையும் அதைத்தான் சொல்கிறது. மனுதர்மமும் அதைத்தான் சொல்கிறது. வேதமும் அதைத்தான் சொல்கிறது.

நாம் அறியாமல் செய்யும் அற்பச் செயலின் பலனைக்கூட நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும் என்கிறது அனைத்தும். சுவற்றில் மீது வீசப்பட்ட பந்து திரும்பவும் வரத்தானே செய்யும்?

இதற்கு என்னதான் வழி ? என்று யோசிக்கின்றீர்கள்? அப்படித்தான் நானும் ஒரு நாள் யோசித்தேன். விடாது தொரத்திய கர்மபலனை விட்டொழித்து விட்டு அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென யோசித்தேன்.

மனிதன் ஒரு கோமாளி. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. படுத்தவன் பரலோகம் போய் விடுகிறான். துயிலிருந்து நிச்சயம் எழுவோமா என்பதெல்லாம் கேள்விக்குறி. இருப்பினும் என்ன? கோபம், பொறாமை, சூது, வஞ்சகம் அது மட்டுமா இன்னும் என்னென்னவோ வித்தியாசமான எண்ணங்களால் சூழப்பட்டு தன்னை ஒரு அழியாப்பொருளாய் நினைத்துக் கொள்கிறான். அதனால் வருவதும், விளைவதும் தான் கர்மபலன் !

இப்போது விஷயத்துக்கு வந்து விடுகிறேன். உங்களுக்கு ஒரு கதையைச் சொல்ல விரும்புகிறேன். அவசியம் படியுங்கள் !

ஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர். கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.

உடனே கடவுள் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்றுச் சொன்னார்.

சீடன் குருவினை பணியச் சென்ற போது, “சீடனே,  நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்றுச் சொன்னார்.

குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான்.

”அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும், ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள்.

சீடன் மீண்டும் குருவிடம் சென்றான்.

“சீடனே ! நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான்  அனைத்துக்கும் பொறுப்பானவர், ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு.

மீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்

“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும்  தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்மபலனைத்தான் அவரவர்களுக்கு வழங்குவேன்.

ஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே கடவுளை விட குருவே உயர்வானவர்” என்றார் கடவுள்.

அன்பு நண்பர்களே! என்னைத் துரத்து துரத்து என்று துரத்திய கர்மவினைகளை தன்னகத்தே பெற்றுக் கொண்டு இன்றைய அமைதியான வாழ்க்கைக்கு காரணம் என் குருநாதர்கள் சற்குரு வெள்ளிங்கிரி ஸ்வாமியும், ஜோதி ஸ்வாமிகள், எனக்கொரு துன்பம் என்றால் உடனடி உதவி என் குருநாதர்களிடமிருந்து உடனடியாக வந்து சேரும். அம்மாவின் மடியில் பாதுகாப்பாய் இருப்பது போன்று உணர்கிறேன்.

எந்த துன்பம் வரினும் அது பற்றிய எந்தக் கவலையும் எனக்கு இருப்பதில்லை. குரு நாதர் இருக்க பயமேன் !

நண்பர்களே, நல்ல குருவை தேடிக்கண்டுபிடியுங்கள். நான் அப்படித்தான் தேடியடைந்தேன்.

No comments:

Post a Comment