Thiruvenkadu Boothan Temple.
கல்விக்கு அதிபதியான புதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு. இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதபகவான் மக்களுக்குகாட்சியளிக்கின்றார்.
சலந்தரன் என்பவனுக்கு ஒரு மகன், மருத்துவன். அவன் இறைவனை நோக்கி தவம் செய்து சூலத்தை பெற்றான். அந்த சூலத்தால் நல்லது செய்யாமல் தேவர்களுக்கு தீங்கு விளைவித்தான் மருத்துவன். இதனால் கோபமுற்ற சிவபெருமான், நந்தியை அனுப்பி அவனை அழிக்கச் செய்தார். ஆனால் மருத்துவனோ நந்தியை சூலத்தால் தாக்க,நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் ஏற்பட்டது. பின்னர்சிவபெருமானே அகோர மூர்த்தியாய் தோன்றி மருத்துவனை அழித்தார் என்பது இக்கோவில் வரலாறு.
இங்கு மூர்த்திகள் மூன்று, தீர்த்தங்கள் மூன்று, தலவிருட்சங்கள் மூன்று. சிவன், நடராசர், வீரபத்திரர் ஆகிய மூன்று மூர்த்திகளும், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும்,வடவால், கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்களும்உள்ளன.
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலம் இது. காசிக்கு நிகரான திருத்தலம். காவிரி வடகரை கோவில்களில் பதினொன்றாவது கோவில் இது. மூன்றுதீர்த்தங்களிலும் நீராடினால் பிள்ளைப்பேறு நல்கும் தலம். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இங்கு வடவால் விருட்சத்திற்கு கீழ் ருத்ர பாதம் உள்ளது.
திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வந்தபோது, அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தெரிந்ததாம்,அவர் அம்மா என்றழைக்க, அம்பிகை அவரை இடுப்பில் சுமந்து கோவிலின் உள்ளே சென்றதாக வரலாறு உண்டு. இன்றும் இக்கோவிலில் சம்பந்தரை சுமந்திருக்கும் அம்பாளை பிரகாரத்தில் காணலாம்.