போதிதர்மர் என்ற பெயர் சமீபத்திய “ஏழாம் அறிவு” திரைப்படம் மூலம் பிரபலமான போதும், அதற்கு முன்பு வரை அவர் பெயரைச் சொன்னால் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது அவர் குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்பதும் ஜென் பௌத்தத்தின் சிருஷ்டிகர்த்தா என்பதும் தான். ஒரு தமிழன், காஞ்சிபுரத்து அரசகுமாரன், சீன தேசத்திற்குச் சென்று பௌத்த மதத்தின் ஆன்மாவையே உலகிற்கு அறிமுகப்படுத்தி வரலாற்றில் இடம் பெற்று இருப்பது நமக்கெல்லாம் ஒரு பெருமையே. அவரைப் பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் சிறிது பார்ப்போம்.
புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு புத்தமதத்தைத் தழுவிய போதிதர்மர் தன் குருவின் ஆணையை ஏற்று பௌத்தத்தை பரப்புவதற்கு கி.பி.520-ல் சீனா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு மகாஞானி வருகிறார் என்பதையும், அவர் பௌத்த மதத்தின் 28-வது தலைமைக்குரு என்பதையும் கேள்விப்பட்டிருந்த நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங் வூ-டி அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தார். அப்போது மன்னர் போதிதர்மரிடம் கேட்ட கேள்வியும் அதற்கு போதிதர்மர் சொன்ன பதிலும் அவர் போதனைகளின் முக்கிய அம்சம் என்று சொல்லலாம்.
மன்னர் லியாங் வூ-டி சீனாவில் நிறைய புத்த மடாலயங்களைக் கட்டியிருந்தார், அதில் பல்லாயிரம் பிட்சுக்களுக்கு போஷகம் அளித்து வந்தார். எனவே அவர் தன் பௌத்தத் தொண்டினைச் சுட்டிக்காட்டி போதிதர்மரிடம் கேட்டார், “மகாஞானியே! என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன?” இதைக் கேட்டதும் போதிதர்மர் மிக அமைதியாகச் சொன்னார். “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில்தான் விழுவீர்கள்.” இந்த பதிலைக் கேட்ட மன்னருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
துறவிக்கு வேந்தன் துரும்பு என்கிற விதத்தில் போதிதர்மர் முகஸ்துதி செய்யாமல் அப்படிச் சொல்லக் காரணம் அந்த மன்னர் புகழுக்காகத் தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்து இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டது தான். சுயநல எண்ணத்துடனும் புகழுக்காகவும் நிறைவேற்றப்படும் தர்ம காரியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை அவர் அப்படிச் சுட்டிக்காட்டினார்.
போதிதர்மர் மன்னர் லியாங் வூ-டி’யைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்குச் சென்றார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப் பார்த்தபோது அவருக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் மிகவும் பலவீனமாகவும் ஆரோக்கியம் அற்றும் இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் உடம்பை அலட்சியப்படுத்த வேண்டும் என்ற ஒரு தவறான கருத்து அவர்களிடம் மேலோங்கி இருப்பதை அவர் கண்டார்.
போதிதர்மர் எல்லா கோணங்களில் இருந்தும் ஞானத்தைக் காண முடிந்தவர். உடல் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இல்லா விட்டால் பெரும்பாலான நேரங்களில் மனம் உடல் உபாதைகளிலேயே தங்கி விடும் என்பதை உணர்ந்தவர் அவர். அப்படியே இல்லா விட்டாலும் கூட ஆன்மிக மார்க்கத்தில் நிறைய தூரம் பயணிக்க வலுவான உடல் அவசியம், உடல் இல்லா விட்டால் எல்லாமே இல்லாமல் போய் விடும் என்பதால் அவர் உடலைப் பேணிப் பாதுகாப்பதும் ஒரு ஆன்மிகவாதிக்கு அவசியம் என்று நம்பியவர் அவர். எனவே உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளையும், தாக்க வரும் எதிரிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகளையும் புத்த பிட்சுக்களுக்கு அவர் விளக்கமாகக் கற்றுத் தந்தார். அப்படிப் பிறந்தது தான் குங்க்ஃபூ என்னும் தற்காப்புக்கலை.
மேற்போக்காகப் பார்ப்பவர்களுக்கு அவர் உடலுக்கு அதிக முக்கியத்துவம் தந்திருப்பது போலத் தோன்றினாலும் அவர் அதை விட அதிகம் மனத்திற்கும், ஞானத்திற்கும் தந்திருந்தார் என்பதே உண்மை. ஒன்பது வருட காலம் அவர் ஒரு குகையில் ஒரு சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்ததாகவும் மேலான ஆன்மிக ரகசியங்களைத் தெளிவாக உணர்ந்த பின்னரே தியானத்தில் இருந்து எழுந்ததாகவும் பல சீன பௌத்த அறிஞர்களும் ஒருசேர குறிப்பிட்டிருப்பதே அதற்கு சான்று.
போதிதர்மர் சென்ற காலத்தில் சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன என்றாலும் எந்திரத்தனமாகப் பின்பற்றப்பட்டன. ஒன்பதாண்டு கால தொடர் தியானத்திற்குப் பின் உணர்ந்த உண்மைகளையும், புத்தரின் போதனைகளையும், தாவோவையும் இணைத்து போதிதர்மர் ஆன்மிகத்திற்கு உயிர் சேர்த்தார். அவர் போதனைகள் ‘ச்சான்’ (chan) ஆகிப் பின்பு அது ஜப்பானில் ’ஜென்’ (zen) என்பதாக வடிவம் கொண்டது.
போதிதர்மா தன் கையில் எப்போதும் ஒரு கைத்தடி வைத்திருப்பார். அது இக்காலத்தில் நாம் பார்க்கும் கைத்தடி போல இருக்கவில்லை. அதைப் பார்த்தால் அவர் ஏதோ ஒரு மரத்தையே வேறோடு பிடுங்கி வைத்திருப்பது போல் இருக்கும். முண்டு முடிச்சு உள்ள அந்தத் தடியை அவர் ஆன்மிக போதனைக்கும் பயன்படுத்தினார். ‘மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது”என்றும், ‘மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது”, ‘மனவிசாரங்களில் இருந்து விடுதலை வேண்டும்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத் தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக் காட்டுவாராம்.
போதிதர்மா தன் கடைசிக் காலத்தில் இமயமலைப் பகுதிக்குச் செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத் தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒருசில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அதை உண்ட போதிதர்மா ‘கோமா’வில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து அவர்கள் மடாலயத்திலேயே அவரைப் புதைத்துவிட்டார்கள்.
இது நடந்து சில நாட்கள் கழித்து சீனாவின் எல்லையில் அவர் நடந்து செல்வதை அவரை நன்கு அறிந்த ஒருவன் கண்டான். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச் செருப்பைக் கட்டித் தொங்க விட்டிருப்பதைக் கண்டு அவனுக்கு வியப்பு மேலிடுகிறது. அவர் இமய மலையை நோக்கிச் செல்வதைக் கவனித்த அவன் மடாலயத்திற்குச் சென்று தான் போதிதர்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறான். அவர்கள் போதிதர்மர் இறந்து விட்டதாகச் சொல்ல அவனோ தான் பார்த்த காட்சி உண்மை என்பதில் உறுதியாக இருந்தான். அவர்கள் அவன் முன்பே அவரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அதனுள் அவருடைய ஒரே ஒரு செருப்பு மட்டும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அதற்குப் பின் போதிதர்மரைக் கண்டவர்கள் யாருமில்லை.
”மனதிலிருந்து விடுதலை அடையப் போராட வேண்டியதில்லை. மனதிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க்கொண்டே இருங்கள். இறுதியில் மனமே புத்தராக இருப்பதைக் காண்பீர்கள். மனதின் யதார்த்த நிலையே ஞானம்” என்பதுதான் போதிதர்மாவின் போதனைகளின் சாரம். அந்த நிலையை அடையும்போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். அப்போது மட்டுமே காலம், இடம் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்கிறார் அவர்.
அவருடைய அறிவுரைகளில் இருந்து சில:
நல் ஆசிரியர்களைத் தேடும் முட்டாள்கள் உணர்வதில்லை, அவர்களது மனம் மிகச்சிறந்த ஆசிரியர், என்பதை!
’மனம் எப்போதும் இக்கணத்தில் இருக்கிறது. நீதான் அதைக் காண்பதில்லை’
பாதையை அனைவரும் அறிவார்கள். அதில் நடப்பவர்கள் சிலரே’
’மாயைகளை உருவாக்காமல் இருப்பதே ஞானம்’
’வாழ்வும் சாவும் முக்கியமானவை. அவற்றை வீணடிக்காதீர்கள்’
’மொழியைக் கடந்து போ. எண்ணத்தைக் கடந்து போ’
‘புத்த நிலை என்பது விழிப்புணர்வு நிலையே. அது மனம், உடல் இரண்டிலும் முழு விழிப்புணர்வைக் கொண்டதாய் இருப்பதால் தீமைகள் இரண்டிலுமே உருவாகாமல் தடுக்கிறது’
No comments:
Post a Comment