வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் தலையெடுத்திருப்பார்கள். குறிப்பாக, முதல் முறையாகத் தொழில் செய்பவர்கள் நிறைய தோல்விகளையும் தடைகளையும் சந்திப்பது இயல்பு.
ஒரு முறை தோல்வி வந்ததும் நம்மால் முடியாது என்று விலகிச் செல்பவர்கள் ஏராளம்.
நம்மைச் சுற்றிப் பார்த்தாலே சொந்தத் தொழில் பரிசோதனையைச் செய்து பார்த்துவிட்டு வந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். தங்களின் தோல்விகள் பற்றி அவர்கள் சொல்லும்போதே அவர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொள்ளலாம்.
வலிமையான எண்ணங்கள்
“அந்தத் தொழில் மோசமான தொழில், தெரியாம மாட்டிக்கிட்டேன்”, “ கூட்டாளிகளை நம்பி ஏமாந்தேன்!”,
“ நம்ம குணத்துக்கு அந்தத் தொழில் ஆகாது”, “நிலையான வருமானம் இல்லாட்டி ரொம்பக் கஷ்டம்”, “நம்ம குடும்பத்துக்கெல்லாம் பிஸினஸ் ஆகாது”, “இந்த தொழில்னாலே வேறெங்கும் நகர முடியாது. எதுவும் செய்ய முடியாது. இதே கதின்னு கிடக்கணும்!”
நீங்கள் எதை நினைத்தாலும் அதுதான் சரி என்று உணர்த்துவது போல உங்கள் வாழ்க்கையில் அனுபவங்கள் கிடைக்கும். உங்கள் எண்ணத்தைக் கவர்ந்துவரும் மனிதர்களும் சம்பவங்களும் அதைத் தொடர்ந்து நிரூபிப்பார்கள். அதுதான் எண்ணங்களின் வலிமை.
அனுபவத்தால் எண்ணங்கள் தோன்றுவதில்லை. எண்ணத்தால் அனுபவங்கள் தோன்றுகின்றன. தொழிலில் தோற்பவர்கள் 95 சதவீதம். ஜெயிப்பவர்கள் 5 சதவீதம்தான். காரணம் அவர்களின் எண்ணங்கள். அதனால் எடுக்கும் முடிவுகள். அந்த முடிவுகள் தூண்டும் செயல்பாடுகள். அந்தச் செயல்பாட்டின் மூலம் வலிமை பெறும் நேர்மறையான எண்ணங்கள். இந்தச் சுழற்சிதான் வெற்றியை தீர்மானிக்கிறது.
தொழில் செய்வதை, பிடித்த விளையாட்டை விளையாடுவது போல அணுகுபவர்கள் அதை ரசித்துச் செய்வார்கள். விளையாட்டில் வெற்றி தோல்வி எப்படி என்பதை விட, விளையாட்டை விளையாட்டுக்காகவே எப்படி ரசிக்கிறோமோ அப்படித் தொழிலை ரசிக்க வேண்டும். அதுதான் நம்மை அந்தத் தொழிலில் நிலைக்க வைக்கும்.
தோல்வியால் கற்கும் பாடங்கள் நமது தொழில் திறனைக் கூர்மையாக்கும் என்று நம்ப வேண்டும். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதைவிட எப்படி ஜெயிப்பது என்பதைத் தோல்வியில்தான் ஆராய்ந்து கற்க முடியும். பிறரின் தோல்விகளிலிருந்து பாடம் கற்பவர்கள் புத்திசாலிகள்.
தோல்விக் கதைகள்
வெற்றி பெற்றவர்களைப் பார்த்து ஆசை மட்டும் படுவதுதான் இங்கு பிரச்சினையே. அவர்களின் தொழில் திறனைப் புரிந்துகொள்ளாமல் அவர்களின் வெற்றியின் பளபளப்பில் மயங்கிப் போவது. அவர்கள் செய்யும் தொழிலைச் செய்தாலே அதே வெற்றியைப் பெற முடியும் என்று நம்புவது.
“ஒரு ஆன்லைன் சைட் வைத்தே 5 ஆயிரம் கோடி சம்பாதிச்சிட்டாங்க!”, “கோழி முட்டை வியாபாரத்துல இன்னிக்கு ஒரு பன்னாட்டு கம்பெனி மாதிரி வளந்துட்டாங்க!”, “ஒரே படம் எடுத்தாங்க; எங்கேயோ போயிட்டாங்க!”, “சும்மா ஆரம்பிச்சாங்க இந்த பியூட்டி பிஸினஸ. இன்னிக்கு முன்னணி நடிகைங்க எல்லா பிராண்டுகளுக்கும் அம்பாசடர் ஆகும் அளவு வளர்ந்துட்டாங்க!” ,“ஒரே ஒரு ஆப் டெவலப் பண்ணி இன்னிக்கு கம்பனில பெரிய பெரிய முதலீட்டாளர்களைக் கொண்டாந்துட்டாங்க!”...
இதெல்லாம் பனிக்கட்டியின் நுனி போல. ஒவ்வொரு வெற்றிக் கதைக்குப் பின்னும் நூறு மடங்கு தோல்விக் கதைகள் உள்ளன. அவை வெளியே தெரியாது. வெற்றியாளர்கள் பின்னும் ஏராளமான தோல்விக் கதைகள் உண்டு. ஆனால் அதைவிட அவர்கள் வெற்றியின் பிரகாசம் நம் கண்களை மறைக்கும்.
இதுவே ஆதாரம்
தோல்விகளையும் பார்த்து, அதன் பாடங்களைக் கற்று, அதன் பின்னும் அந்த தொழிலை ரசித்துச் செய்ய முடியுமா? அப்படி என்றால் நீங்கள் இந்த தொழிலுக்குத் தயார். தொழில் செய்ய வேண்டும், அதில் தொடர்ந்து பணம் பண்ண வேண்டும், எது வந்தாலும் கற்று மேலே போக வேண்டும் என்ற எண்ணங்கள் கொண்டவர்கள்தான் தொழிலில் வெற்றி பெறுகிறார்கள்.
நேரம், சூழ்நிலை, பிறர் ஆதரவு எல்லாம் தொழிலை பாதிக்கும்தான். உண்மைதான். ஆனால் தொழிலில் நிலைக்க ஆதாரமானது தொழில் பற்றிய எண்ணங்கள்தான்.
அரைக்காசு அரசு வேலை
ஒரு மார்வாடி நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: “இந்தத் தொழில் நிலையில்லாதது. பேசாமல் படித்து வேலைக்குப் போகலாம்னு அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அவர் சொன்னார்: ‘ஒரு வேலைக்காரனா இருந்தா யார் உனக்கு பொண்ணு தருவா? சின்னதா இருந்தாலும் உனக்க்குன்னு எப்பவும் ஒரு தொழில் இருக்கணும்!”.
நான் நினைத்துப் பார்த்தேன். ‘அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகம்’ என்பதைக் கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். தெரிந்தவர்கள் எவ்வளவு பெரிய தொழில் பண்ணினாலும், “ஏதோ பிஸினஸ் பிஸினஸ்னு சொல்றாங்க..என்ன வருதோ தெரியலை” என்பார்கள்.
தொழில் பற்றிய நம் எண்ணங்கள் தான் படிப்பு, திருமணம், வாழ்க்கை பற்றிய எண்ணங்களைத் தீர்மானிக்கும். கடனை நிர்வாகம் செய்வது, தொழிலாளிகளை நிர்வாகம் பண்ணுவது, சந்தையை எடை போடுவது, விலையை நிர்ணயம் செய்வது என அனைத்துக்கும் நம் எண்ணங்கள்தான் விதைகள்.
‘வீடு, குடும்பம் எதையும் கவனிக்க நேரமில்லை, எப்பவும் பிஸினஸ் தான்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். வீடு, குடும்பம் மட்டுமல்ல, பிடித்த எல்லாவற்றையும் செய்ய முடிகிறது இந்த பிசினஸ் வெற்றிகளால் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment