Tuesday, April 26, 2016

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை


மனித சமுதாயம் வாழ்வதற்கு, மிகவும அடிப்படையானது உழைப்புத்தான். உழையுங்கள்!  உழையுங்கள்!  அதுவே அனைத்து நோய்க்கும் மருந்து” என்று கூறினார் சுவாமி விவேகானந்தர்.

எந்த தொழிலையும் செய்து வெற்றி காண இயலும் என்ற நம்பிக்கையின் உந்துவிசை உழைப்புத்தான். உழைப்பு ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை உண்டாக்குகிறது. அந்த உறுதியான தன்னம்பிக்கையுடன், இணைந்த உழைப்புத்தான் உலகை இன்றைய உயர்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பது நூறுவிழுக்காடு உண்மைதான்.

தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்.  செயலாற்ற வேண்டும் என்று கூறும் அதே நேரத்தில், இதற்குத் தடைக்கற்கள் உண்டா?  எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது.

சிலர் தொடங்கிய தொழில்களில் வெற்றியை இழக்கிறார்கள்.  தன்னம்பிக்கையோடு தொடங்கிய செயலிலும், சிலசமயம் இடைமுறிவு ஏற்படுகிறது!  சிலர் இடையில் சோர்ந்து போய்விடுகிறார்களே!  இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அப்படி எதிர்மறையாகவும் சிந்தித்தாலன்றி, விடை காண்பது எளிதல்ல.

தொழில் தொடங்குவதும், அதனை வளர்ப்பது உழைப்புதம் உயிர் வாழ்க்கைக்குத்தான்!   அப்படி ஒரு தொழில் தொடங்கும்போது  அந்த தொழிலுக்கு எவ்வளவு உழைப்புத் தேவையை அதனைத் தன்னால் கொடுக்க இயலுமா? என்று சிந்திக்க வேண்டும்.

உழைப்புடன் தனது தேவையான முதலீடு ஏற்பாடு செய்ய வலிமை உண்டா? தொழிலில் ஏற்கனவே உள்ள பயிற்சி உதவுமா?  என்பவையும் தன்வலிமையில் தான் சேரும்.

எடுத்துக்காட்டாக, ஒரு நெசவுத்தொழிலாளி கைத்தறியில் மட்டும் பயிற்சி பெற்றவர்!  அவர் சொந்தமாக விசைத்தறிபோட எண்ணுவார் என்றால் கைத்தறிப் பயிற்சி மட்டும் உள்ள தான் விசைதறியை இயக்க இயலுமா?  பயிற்சி பெற்றால் போதுமா?  அதற்குத் தன்னிடம் வலிமை உண்டா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

“முடியும்” என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு “இந்த இடத்தில் தொழில் செய்ய சூழல் சரியாக உள்ளதா?  நூல் எளிதில் கிடைக்குமா?  சாயப்பட்டறை உள்ளதா?  அல்லது சற்றுத் தொலைவானால் நூல் கொண்டு வர வாகன வசதி உள்ளதா?  என்பதனையும் ஆராய வேண்டும்.

தமது வலிமையை அறியாமல் செய்யும் செயல்களில் முனைந்து இடைமுறிவுபட்டவர் பலர் என்கிறார் வள்ளுவர்.

“உடைத்தம்வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முறிந்தார் பலர்”

என்பது அவர் குறள்.  செயலின் வலிமை, தனது வலிமை மட்டும் பார்த்தால் நாம் எடுத்துக்கொண்ட செயலுக்குத் தடை வருமா?  அதை நீக்கத் துணை வருமா?  என்பதுவும் சிந்திக்கத் தக்கது.

‘வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிசெலல்” என்பது வள்ளுவம்.  இதனை எதற்கு வேண்டுமானாலும் பொருத்திப்பார்க்கலாம்.

அரசர்கள் நாடாண்டு, ஒருவருக்கொருவர் பகைகொண்டு, மண்ணாசையால் போரிடும் காலகட்டத்தில் எழுதப்பட்ட குறள், அன்றைக்கு பொருந்தும்;  இன்றைக்கும்  பொருந்தும்.

வினைவலி என்பது அன்று எத்தகைய போர் என்பது. இன்று எத்தகைய செயல் அல்லது தொழில் என்பது.

தன்வலி என்பது அன்று தன்படைவீர்ர், படைக்கருவிகள் ஆகியவற்றின் பெருக்கம், இன்று தனக்குள்ள ஊக்கம், உழைக்கும் திறன் ஆகியவை.

மாற்றான் வலி என்பது அன்று எதிரியின் படைவலிமை,  படைக் கருவிகள் பெருக்கம் முதலியன.

துணைவலி என்பது அன்று அரசனுக்கு படைத்துணையாக வருகின்ற வேற்று மன்னர்கள் உண்டா?  எதிரிக்கும் துணைவருவார்  உண்டா?  தன் நாட்டு அரசன் எப்படித்துணை செய்யும் எதிரி நாட்டு அரசன் எப்படித்துணை செய்யும் என்பன சிந்திக்கப்படும்.

இன்று துணைவலி என்பது உழைப்பவர் துணை செய்வார்களா?  பொருளாதாரதில் முன் தொகை தருவார்களா?  போன்றவை ஆராயப்படவேண்டும்.

இவ்வளவும் ஆராய்ந்து உடன்பான விடை கிடைக்குமானால் அதுவே தன்னம்பிக்கையை உண்டாக்கிவிடும்.

தானாகே உண்டாகிவிடும்.  அல்லது தானாகவே தன்னம்பிக்கை கொள்க என்பது சிறகு இல்லாமல் வானில் பறக்க நம்பிக்கைகொள் என்பதுபோலாகும். விமானம் அமைத்து பறக்க முடியும் என்பதுவே தன்னம்பிக்கை தரும்.

விதிவழி எல்லாம் நடக்கும் என விட்டுவிட்டால், தன்னம்பிக்கை உண்டாகாது. எல்லாவறையும் “சூழல்” உட்பட ஆய்ந்து முடிவெடுப்பின் தன்னம்பிக்கை வெற்றி பெறும்.

புறச்சூழல் சரியாக அமைந்தால் அல்லது அமைத்துக்கொண்டால் அகச்சூழல் செழும் அடையும் – அப்படிப்பட்ட செழுமை மண்ணில்தான் தன்னம்பிக்கைச் செடி செழித்து வளரும்.

மூட நம்பிக்கை என்ற களைகளும் வளராமல் களைந்தெறியப்பட வேண்டும்.  நல்ல உடம்பு இன்றிமையாதது.  நல்ல உடம்பில் தான் நல்ல மனம் – பண்பட்ட மனம் இருக்க இயலும்.  பண்பட்ட மனத்தில் தன்னம்பிக்கை உண்டாகும். அத்தன்னம்பிக்கை வெற்றியை உண்டாக்கும்.

குழந்கைகளுக்கு எதிர்மறை சிந்தனை ஊட்டக்கூடாது. ஆனால் வளர்ந்தபின் எதிர்மறைச் சிந்தனையும் கண்டு அதனை நீக்க வேண்டும். எதிர்மறை தடைக்கள்கள் தாம்!  அத்தடையைக் காண்பது தேவை. கண்டு நீக்கிவிட்டால், தன்னம்பிகை உறுதிப்படும்.  வாழ்வில் வெற்றி கிட்டும்.

No comments:

Post a Comment