பெற்றோர்களின் வாழ்க்கையைப் பிள்ளைகள் வாழ்கிறார்கள். கொஞ்சம் கூட்டல் கழித்தலோடு. சிற்சில மாறுதல்களோடு. கொஞ்சம் வேறுபாடுகளுடன். ஆனால் ஆதார வாழ்க்கை நம் பெற்றோர்களுடையதுதான். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பெற்றோர்களிலிருந்து தொடங்கி நம் முன்னோர்கள் வரை பலரிடமிருந்து பெற்றிருக்கிறோம்.
இதை விஞ்ஞானம் மரபணுக்களின் காரணம் என்கிறது. முன்னோர் செய்த வினை என்று ஆன்மிகம் சொல்கிறது. குறிப்பாக, இந்து மதம் பூர்வ ஜென்மம் என்றும் ஜென்மங்கள் என்றும் சொல்லும். உளவியலாளர்களில் ஒரு சாரார் தட்டையாக நாம் எல்லாவற்றையுமே பெற்றோரைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் உங்கள் நம்பிக்கைகளும் சார்பு நிலைகளும் மாறுபடலாம். ஆனால், பெற்றோர்களின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் குழந்தைகள் வாழத் தொடங்குகிறார்கள் என்பதைப் பொதுவாக யாரும் மறுக்கமாட்டார்கள்.
யாரோட ஜெராக்ஸ்?
அப்பா, அம்மா, தாத்தாக்கள், பாட்டிகள் என நிறைய மனிதர்களின் பங்களிப்பு இருப்பதால் நாம் ஒரு கார்பன் காப்பியாகயாகவோ ஜெராக்ஸ் நகலாகவோ மட்டும் இல்லாமல் ரசமான கலவையாக இருக்கிறோம். ஒவ்வொருவரிடமிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கியிருக்கிறோம். சில பண்புகள் தூக்கலாகத் தெரியும். பல உள்ளார்ந்து இருக்கும். மிகச் சில பண்புகள் நமக்கே தெரியாமல் என்றோ ஒரு நாள் பீறிட்டுக்கொண்டு வரும்.
இந்த ஒற்றுமைகளைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். பிறந்த குழந்தையின் உருவ ஒற்றுமைகளில் இது ஆரம்பமாகும்.
“அப்படியே அம்மா தான்” , “நெத்தி மட்டும் தாத்தா. மத்தபடி அவங்க பக்கம்தான்”, “ அப்படியே டிட்டோவா பொள்ளாச்சி ஃபீச்சர்ஸ்”, “மீசையை ஒட்ட வச்சா அப்படியே அவள் அவங்கப்பாதான். அப்படியேதான் வருவா.” என்று குழந்தையைப் பார்த்து அடிக்கப்படும் டயலாக்குகள் நமக்குத் தெரியும்தானே!
உருவ ஒற்றுமைகளுக்குப் பிறகு சுபாவங்கள் அலசப்படும்.
“அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு. என்ன கோபம் பாரு!” “என்னா அழுத்தம் பாரு. அவ அம்மாவே தான்.” “எப்படி மழுப்பறா பாரு. அவ அத்தை இப்படித்தான் நழுவுவா எதைக் கேட்டாலும்!”
வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால் வாழ்வின் நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நடப்பதையும் உணரலாம். தாயின் அதே துயரம் மகள் வாழ்விலும் நடக்கும். தந்தை செய்த அதே தவறை மகனும் செய்வார். வாழ்வின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் இப்படிப்பட்ட பல ஒற்றுமைகளைக் பார்ப்பீர்கள். இவை யதேச்சையானவை அல்ல.
அறிவுரைகளும் அனுபவங்களும்
பாஸ்ட் லைஃப் ஹீலிங் என்று ஒன்று உண்டு. கடந்த காலத்தின் கர்ம வினைகளைக் களைவதற்கான சிகிச்சை முறை. மதங்கள் அனைத்துமே கர்மவினைகளைப் போக்கத்தானே முயல்கின்றன?
கர்ம வினை என்பதை முதலில் எளிமைப்படுத்துவோம். ஒரு செயலைச் செய்து அதிலிருந்து கற்றுக்கொண்ட பிறகு அதைத் தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்கிறோம். ஆனால் செயல் ஏற்படுத்திய பாதிப்பு நமக்கு வந்து விடுகிறது. அந்த பாதிப்பைப் பிறகு குறைக்கப் பார்க்கிறோம். அதன்பின் அந்த அனுபவத்தால் மற்றவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளிடம் அதைச் செய். இதைச் செய்யாதே. இது பாவம். அது புண்ணியம் என்று அறிவுரை சொல்கிறோம்.
ஆனால் அறிவுரைகளை விட அனுபவங்கள்தான் சக்தி வாய்ந்தவை. அப்பாவின் தவறு மகனுக்குப் புரியாது, பட்டுத் தெரியும் வரை. படுவதற்கு முன் தெரிந்து கொள்ள முடியாதா என்பதுதான் ஒவ்வொரு தகப்பனின் ஏக்கமும். ஆனால் தீ சுடும் என்று எவ்வளவு சொன்னாலும் தொட்டால் தானே தீயின் குணம் தெரியும்? இதனால் தான் எவ்வளவு சொல்லியும் தவிர்க்க இயலாமல் பெற்றோர்களின் தவறுகள் பிள்ளைகளால் மீண்டும் செய்யப்படுகின்றன.
அறிவுரைகள் எந்தக் காலத்திலும் பெரிய பலனை அளித்ததில்லை. அறிவுரைகள் சொல்வதை விட நம் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்வதுதான் முக்கியம்.
பிள்ளைகள் பார்த்துத் தெரிந்துகொள்கின்றன. கேட்டுத் தெரிந்து கொள்வதல்ல. பெற்றோர்கள் சொல்வது முக்கியமில்லை. செய்வது தான் முக்கியம்.
“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்று சொல்லிவிட்டு போன் வரும் போது “நான் வீட்டில் இல்லைன்னு சொல்லு” என்று சொல்லும் அப்பாவிடம் குழந்தை எதைக் கற்றுக்கொள்ளும்?
“பொய் சொல்லலாம்; ஆனால் பொய் சொல்லக் கூடாது என்று பேசிக்கொள்ள வேண்டும்!” என்றுதான் குழந்தை கற்றுக்கொள்ளும்.
மோசமான கருத்துள்ள திரைப்படத்தையோ தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ எந்த மறுப்பும் விமர்சனமும் இல்லாமல் பெற்றோர்கள் பார்க்கும்போது குழந்தைகள் அதை சம்மதமாகவே என எடுத்துக்கொள்வார்கள்.
தேர்வு அவர்கள் கையில்
நம் பழக்கங்கள், நாம் பயன்படுத்தும் சொற்கள், நாம் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் எனக் குழந்தைகள் நம்மை நகல் எடுக்கின்றன.
“ நான் அதிகாலை எழுந்திருக்கிறேன். அவன் அப்படி இல்லையே. இதையெல்லாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்று நீங்கள் கேட்கலாம். உங்களிடமிருந்து இதைத்தான் குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தேர்வு செய்வது அவர்கள் கையில். ஆனால் உங்கள் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையோ அவர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். நீங்கள் காட்டும் உலகம்தான் அவர்களுக்கு முதல் உலகம். பிறகுதான் அவர்கள் வாழ்வில் நண்பர்கள், ஊடகம், பயணங்கள் என மற்ற வகையான தாக்கங்கள் நிகழ்கின்றன.
பெற்றோர்களின் வாழ்வுக்கு நன்றி செலுத்திவிட்டு, உங்கள் வாழ்வைச் சீராக்குங்கள். அவைதான் அடுத்த சந்ததிக்கு நீங்கள் செய்யும் மூலதனம். என் வாழ்க்கையை என் பிள்ளை அப்படியே பெறட்டும் என்று சொல்ல முடிந்தால் நல்ல வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பொருள்.
உங்கள் வாழ்வைச் செப்பனிடும்போது உங்கள் பிள்ளைகள் வாழ்வு சீராகும். அதனால் மனசு போல வாழ்க்கை என்பது உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் மனசு தான் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன.
No comments:
Post a Comment