Friday, January 6, 2017

பெற்றோர் மாறாமல் குழந்தைகளை மாற்ற முடியாது!

``என்னோட ஃப்ரெண்ட்ஸ், எனிமி-னு எல்லாரையும் கம்பேர் பண்ணி, என்னைப் படிக்கச் சொல்லி திட்டிட்டே இருக்காங்க. ரொம்ப ஷேம்ஃபுல்லா இருக்கு. எங்கிட்ட பாசமாவே பேச மாட்டேங்கிறாங்க - இந்த வார்த்தைகளை 4-10 வயதுக் குழந்தைகள் மழலையில், அழுகையுடன் சொல்லும் பல காட்சிகளைக் கடந்திருக்கிறேன். இதுதான் இன்றைய பெரும்பாலான குழந்தைகளின் நிலையும்கூட. குழந்தைப் பருவம் என்பது வரம். ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாகக் கடக்க வேண்டிய குழந்தைகள், இன்று படிப்புச் சுமையால் மனஅழுத்தத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். அதற்கு முதல் காரணம், குழந்தைகள் மீதான பெற்றோரின் எதிர்மறை அணுகுமுறைதான்’’ என்கிற தீபா ஆத்ரேயா. தன் வித்தியாசமான சிந்தனைகளை மூலதனமாகக்கொண்டு உயர்திருக்கும் வெற்றிப் பெண்மணி.... குழந்தைகளின் கண்டுகொள்ளப்படாத திறமைகளை வெளிக்கொணரவும், பெற்றோர் - குழந்தை களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்கவும் ‘இன்ஸ்பிரேட் (Inspirate)’ நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து வருகிறார் இவர். 

பெற்றோர் - குழந்தைகளின் உறவுச் சிக்கல்களின் தீவிரத்தை, குழந்தை களுடன் ஒரு தோழியாகவே தான் பழகிய 15 ஆண்டுகால அனுபவத்தில் எடுத்துரைக் கிறார்.

‘`என் குழந்தைக்குப் படிப்பு வரல, எழுத வரல, படிக்கவே சோம்பேறித்தனம் படுறான், எந்த விஷயத்துலயுமே ஈடுபாடு இல்லாம இருக்கான், யார் கூடவும் சரியா ஒட்டவே மாட்டேங்கிறான், மத்தவங்களோட பேசுறதுக்கே ரொம்ப கூச்சப்படுறான்... - இதுதான் கிட்டத்தட்ட 95% பெற்றோர்களின் குற்றச்சாட்டு. இப்படி ஏதோ ஓர் இயல்புக்கு மாறான விலகல் உங்கள் குழந்தையிடம் இருக்கிறது என்றால், அதற்கு அழுத்தமான காரணம் இருக்கும். அதைக் கண்டறிந்து சரி செய்தால், எந்தக் குழந்தையும் வெற்றியாளராக முடியும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, திறமைகளுக்குச் சரியான தூண்டுகோல் கிடைக்காமல் போவதுடன், சிறுவயதிலேயே அக்குழந்தை விரக்திக்குத் தள்ளப்படும்” என்று கூறும் தீபாவின் பயிற்சி முறைகள் வித்தியாசமானவை.  குழந்தைப் பருவ சந்தோஷங்களைக் கிடைக்கச் செய்வது, அவர்களின் திறமைகளை கண்டுகொண்டு வெளிக் கொணர்வதுடன், பெற்றோர்களுக்கும் ஆலோசனை வகுப்புகள் எடுக்கப் படுகின்றன. 

‘`விஷுவல் லேர்னர் (visual learner), ஆடிட்டரி லேர்னர் (auditory learner), கைனெஸ்தெடிக் லேர்னர்(kinaesthetic learner), ரீட் அண்ட் ரைட் லேர்னர் (read and write learner), குளோபல் லேர்னர் (global learner) எனும் ஐந்து வகைகளில் ஏதேனும் ஒரு கேட்டகரி  எல்லாக் குழந்தைகளும் பொருந்தும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை கற்றல் செயல்பாடு மூலமாகச் சொல்லித் தரும்போது, எல்லாக் குழந்தைகளுக்குமே விஷயத்தைப் புரியவைத்துவிட முடியும்.

எந்தக் குழந்தையும் மூன்று நிமிடங் களுக்கு மேல் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தமாட்டார்கள். பெரியவர் களாலேயே சராசரியாக 10 - 11 நிமிடங் கள்தான் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியும். அதனால், ‘அரை மணிநேரம்கூட கவனமா படிக்க மாட்டேங்கறான்’ என்று குழந்தைகளை குற்றம் செல்வதில் நியாயமில்லை. அதேநேரம், இரண்டரை மணிநேரத் திரைப்படத்தை அவர்களால் ரசித்துப் பார்க்க முடிகிறதென்றால், அவர்களின் கவனிப்புத் திறன், ஐக்யூ லெவல்  ஆகியவை நன்றாகவே வேலை செய்கிறது என்று அர்த்தம். நாம்தான் அதை சரியான முறையில் வெளிக்கொண்டு வர வேண்டும்.  உதாரணத்துக்கு ‘டண் டணக்கா’ பாட்டை ரசிக் காத குழந்தைகள்தான் குறைவு.

அப்படியான குழந்தைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இசை வடிவத் திலேயே ( a + b )2  =  a²  + 2ab + b²  போன்ற அல்ஜீப்ரா ஃபார்முலாவைக்கூட கற்றுத்தரலாம். இதேபோல, எண்கள், விளையாட்டு, நடிப்பு, கார்ட்ஸ் என்று பல விதங்களில் பாடங்களைக் கற்றுக்கொடுக்கலாம். நிச்சயம் பலன் கிடைக்கும். இவற்றைத்தான் எங்கள் நிறுவனத்தில் செயல்படுத்து கிறோம். இதை உங்கள் வீட்டிலும் நீங்கள் செயல் படுத்தலாம்’’ என்று சொல்லும் தீபா அடுத்து சொல்வது ஆசிரியர்களுக் கானது...

‘`மேலே சொன்ன ஐந்து வகையான லேர்னிங் முறைகளிலும், பாடல் உள்ளிட்ட ஆக்டிவிட்டிகள் மூலமாக வும், 30-45 நிமிஷம் மட்டுமே வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர் 50 குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றுதான். ஆனால், வாரத்தில் ஒரு பீரியடாவது இப்படி அமைத்துக்கொள்ளலாம். அப்பள்ளியில் படித்த சராசரி மாணவர்களில், இன்று பெரிய நிலைக்கு வந்திருப்பவர்களின் பட்டியலை குழந்தைகளுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கும்போது, பல சராசரி மாணவர்களுக்கும், ‘நம்மாலும் ஏதாவது ஒரு துறையில் வெற்றிபெற முடியும்’ என்கிற நம்பிக்கை உண்டாகும்’’ என்பவர், இதுபோன்ற பயிற்சிகளை ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் அளித்து வருகிறார். 

குழந்தைகளின் தலைமைப் பண்பை வளர்க்க தீபா கூறும் ஆலோசனைகள் வித்தியாசமானவை. 

``படிப்போடு லீடர்ஷிப் குவாலிட்டியும் இருந்தால், எந்தக் குழந்தையும் எந்தச் சூழலிலும் பிழைத்துக்கொள்ளும். அதை வளர்த்தெடுக்க, மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் வேலை கொடுக்க வேண்டும். எண் விளையாட்டு, அனலடிக்ஸ் என்று அது மூளைக்கு வேலை தரும் விதமாகவும், பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று மனிதர்களுடன் பழகி குறிப்பிட்ட தகவல்கள் திரட்டச் சொல்வது, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய ஸ்கிரிப்ட் எழுதச் சொல்வது என சமூகத் தொடர்புடன் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்’’  என்றவர், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான வெடிப்புகள் பற்றியும் குறிப்பிட்டார். 

‘`இந்தக் காலக் குழந்தைகள் டிவி, செல்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது பல பெற்றோரின் குற்றச்சாட்டு. அப்படி ஓர் அம்மா தன் மகனைப் பற்றிச் சொன்னபோது, ‘மேம்... எங்கம்மா எங்கிட்ட 
பேசுறதைவிட போன்லதான் அதிகமா பேசுறாங்க. அவங்களையும் கொஞ்சம் கண்டிங்க’ என்றான் பையன். நாம் செய்வதைப் பார்த்துதான் குழந்தைகளும் செய்வார்கள். ஆகவே அல்லவை, தீயவை தவிர்த்துவிடுங்கள். குழந்தை செய்யும் தவறை பிறரின் முன்னிலையில் சுட்டிக்காட்டி தண்டித்தால், அவமானமும் கோபமும்தான் ஏற்படும். எனவே, தனிமையில் பக்குவமாகச் சொல்லுங்கள்’’ என்ற தீபா, இறுதியில் மிக அழகாகவும் அழுத்தமாகவும் சொன்னார்...

‘`பெற்றோர் மாறாமல் குழந்தைகளை மாற்ற முடியாது!”

No comments:

Post a Comment