Thursday, January 12, 2017

அமைதியான நதியில்…!

மனதை ஒரு நிலைப்படுத்தும் போது கிடைக்கும் வெற்றி, அதை அலைபாய விடும் போது தோல்விக்கு வித்திடுகிறது. மனம் குழப்பத்தில் நிறைந்திருக்கும் போது, சிந்தனைகள் தடம் மாறுகின்றன; இது, ஆசை, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஏற்பட முக்கிய காரணமாகிறது.

இதிலிருந்து விடுபட, தியானம் செய்வது, முதலிடத்தை பிடிக்கிறது. முறையாக செய்து பார்த்தால், நிச்சயமாக அதன் பலனை அனுபவிக்க முடியும்.

அதிகாலையில், அமைதியான சூழலில், யாரும் தொந்தரவு செய்யாத இடத்தில் கண்களை மூடி, ஏதாவது ஒரு சிந்தனையில், மனதை செலுத்த வேண்டும். இதன் மூலம், உடலும், உள்ளமும் ஆரோக்கியம் பெறும். நாம் எண்ணிக் கொண்டிருக்கும் இலக்கை, சுலபமாக அடைய உதவும்.

தினமும் பயிற்சி செய்ய முடியாதவர்கள், வாரத்தில் ஒருமுறையாவது முயற்சி எடுக்க வேண்டும். வீடு, அலுவலகம், நண்பர்கள், விருந்தினர்கள் மத்தியில் என, எல்லா இடங்களிலும், சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் காணப்படுவீர்கள்.

எந்தப் பெரிய விஷயத்தையும், எளிதாக எடுத்துக் கொள்ளும் இயல்பு வந்து விடும். சக மனிதர்களிடம் அன்பை பரிமாற வைக்கும். இளைஞர்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம், இளமை தான். இந்த வயதிலிருந்தே கடைபிடிக்க ஆரம்பித்தால், முதுமை வந்த பின்பும் கூட, மனம் மற்றும் உடல் சார்ந்த சிக்கலுக்கு இடமிருக்காது.

இன்றைக்கு நகரவே முடியாத அளவுக்கு பணி இருக்கிறது என்று, ஒதுக்க நினைத்தால், நாளடைவில் தள்ளியே போகும் தியானம். குறிப்பிட்ட வேலைகளை, சரியான நேரத்துக்குள், சிறப்பாக நிறைவேற்றுவதற்கு தியானம் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. எனவே, ஆரோக்கியமாக வாழ்வதற்கு முடிவெடுத்து விட்டால், இன்றே துவங்குங்கள் தியானம்.

No comments:

Post a Comment