Monday, January 23, 2017

மூலம் பூராடம், கேட்டை, சித்திரை... பெண்களுக்கு ஆகாததா?!

-நட்சத்திரக் கட்டுக்கதைகள்

பெண்கள் எல்லோருமே, சாபத்தையும் வரமாக்கிக்கொள்ளும் வல்லமை படைத்த வர்கள். ஆனால், அன்று தொட்டு இன்று வரையிலும், பல பெண்களின் கல்யாணக் கனவுகள், ஜாதகம், ஜோதிடம் என்ற பெயரில் பெரும் சாபமாகிவிட்டதுதான் கொடுமை!

மூல நட்சத்திரம் மாமனார் - மாமியாருக்கு ஆகாது, பூராடம் என்றால் கழுத்தில் தாலி ஆடாது... இப்படி என்னென்னவோ ஜோதிட நம்பிக்கைகள் பெண்களின் திருமணத்துக்குத் தடையாக நிற்கின்றன. உள்ளபடி இதெல்லாம் உண்மைதானா? இந்த நம்பிக்கைகளுக்கு ஜோதிட ஆதாரங்கள் உண்டா? ‘இல்லை’ என்பதே அழுத்தமான பதில். விளக்கங்களுடன் பார்ப்போம்.

பெண் மூலம் நிர்மூலமா?

‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’, ‘பெண் மூலம் மாமனாருக்கு ஆகாது’ - ஆதாரம் இல்லாத இந்த சொல்வழக்குகள் மக்களிடம் ஆழமாகப் பதிந்துவிட்டன. இன்றும், மூலத்தில் பிறந்த பெண்ணை மணக்க தயங்குவோர் உண்டு. பிற்காலத்தில் வந்த ஜோதிட நூல்களில்தான், மூலத்துப் பெண் தன் மாமனாரை அலைக்கழிப்பாள் எனும் தகவல் உண்டு. ஆனால், அது சரியாகாது!

முன்னதாகவே பிறந்து, தமது ஆயுளும் நிர்ணயிக்கப்பட்டுவிட்ட மாமனாரின் ஜாதகப் பலனை, பின்னர் வந்த பெண்ணின் ஜாதகப் பலன்... அதுவும் ரத்தபந்தம் நேரடியாக இல்லாத நிலையில், தனக்கு நெருக்கமான கணவனையும் மீறி, அவன் தந்தையைப் பாதிக்கும் என்ற தகவல் ஏற்புடையது அல்ல. ‘தன் ஜாதகப் பலனையும் மீறி பிறரது ஜாதகப் பலன் தன்னைத் தாக்கும் அல்லது நடைமுறைக்கு வரும்’ என்பது ஜோதிடம் ஏற்காத ஒன்று.

குழந்தை கருவறையில் இருக்கும்போதே ஆயுள் நிர்ணயிக்கப்பட்டு விடும் என்ற தகவல் ஜோதிடத்தில் உண்டு. ஆயுள், செயல்பாடு, பொருளாதாரம், அறிவு, மறைவு ஆகிய ஐந்தும் கருவறையில் இருக்கும்போதே தீர்மானிக்கப்பட்டுவிடும் என்கிறது ஜோதிடம் (ஆயு:கர்மசவித்தம் சவித்யாநிதன மேவச...). ஆக, மாமனார், அவரின் தாயார் கருவறையில் இருக்கும்போதே அவருடைய ஆயுள் நிர்ணயிக்கப்பட்ட பிறகு, பல வருடங்கள் கழித்து வந்து சேரும் மருமகளின் ஜாதகப் பலன், மாமனாரின் ஆயுளை நிர்ணயிக்காது என்பது கண்கூடு.

புராண ரீதியிலான ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். போரில் அசுரர்களின் தலைவன், தேவர்களால் அழிக்கப்பட்டான். அவன் அழிந்த வெற்றி விழாவைச் சிறப்பிக்கும் பொருட்டு, அசுரத் தலைவனை அழித்த நட்சத்திரம் என்று மூலத்துக்குச் சிறப்பு பெயர் தந்தனர். அதாவது, ‘மூல பர்ஹணீ’ என்று கொண்டாடினர் எனும் தகவல் வேதத்தில் உண்டு (மூலமே ஷாமவிருஷாமேதி தன் மூலபர்ஹணீ). இதையொட்டியே ‘மூலம் குடும்பத் தலைவனுக்கும் ஆகாது’ எனும் நம்பிக்கை வந்துவிட்டதுபோலும்!

இங்கு, தலைவன் அழிந்த பிறகு மூலத்துக்கு சிறப்பை ஏற்படுத்தினர்; மூலத்தின் காரணமாக தலைவன் அழியவில்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, ‘தாம்பத்யத்தில் இணைந்த மருமகளின் வரவு, குடும்பத் தலைவனை அழிக்கும்’ என்ற தகவல், சிந்தனைக்குப் பொருந்தாது.

பூராடம் கழுத்தில் நூலாடாது!

பூராடம் நட்சத்திரத்தைப் ‘பூர்வாஷாடம்’ என்கிறது வேதம். ‘பூராடத்தின் கழுத்தில் நூலாடாது’ என்றொரு சொல்வழக்கு உண்டு. இதற்கு, ‘கழுத்தில் இருக்கும் தாலி நூல் ஆடாது, அறுந்துவிடும்’ எனும் விளக்கம் கொள்ளப்படுகிறது. ஆனால்... ‘ஆடாமல் - அசையாமல் நிலைத்து இருக்கும்’ என்ற பொருளில் வந்தது அந்த வழக்கு.

நட்சத்திரம் ஒருவரை விதவை ஆக்காது. பெண் ஒருத்தி விதவை ஆவதற்குக் காரணம், கணவனது ஆயுளின் குறைவே ஆகும். அதை பூராடம் நிர்ணயிக்காது. கணவனின் ஜாதகமே அவனது ஆயுளை இறுதி செய்யும். அல்ப ஆயுள் உள்ள ஒருவனை மணம் புரிந்தவளுக்கு பூராடம் நட்சத்திரம் இருந்திருக்கலாம். ஆனால், அங்கும் பூராடம் காரணம் இல்லை! காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையே!

உண்மையில் பூராடம் சிறப்புக்கு உரியது. நவராத்திரியில் தேவி பூஜைக்கு உகந்த நட்சத்திரமாக மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவற்றைச் சொல்கிறது தர்மசாஸ்திரம் (மூலேன ஆவாஹயேத் தேவீம் ச்ரவணேனவிஸர்ஜயேத்). அம்பாள் நித்ய சுமங்கலி. அவளுக்கு ‘சுமங்கலீ’ என்று பெயர் உண்டு என்கிறது புராணம். அந்த நித்ய சுமங்கலிக்கான பூஜைக்கு உகந்த நட்சத்திரங்களில் பூராடமும் அடங்கும். ஆக, ஆடாமல் அசையாமல் என்றைக்கும் சுமங்கலியாக இருக்கும் தகுதியை பூராடம் அளிக்கும் என்கிற விளக்கமே சரியானது.

தலைச்சன் - தலைச்சன் திருமணம் கூடாதா?

தலைச்சன் (மூத்த குழந்தை), கேட்டை நட்சத்திரம் மற்றும் ஆனி மாதத்தில் பிறந்திருந்தால், ஆனி மாதத்தில் அவனுக்குத் திருமணம் நடத்துவதைத் தவிர்க்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம். ஆனால், விஷயத்தைச் சரி யாக வாங்கிக் கொள்ளாமல், ‘தலைச்சன் - தலைச்சன் திருமணம் கூடாது’, ‘கேட்டை கேட்டை திருமணம் கூடாது’, ‘ஆனி மாதமும் கூடாது’ என்று அதை விரிவுபடுத்தி, பல திருமணங்களைத் தவிர்க்கிறார்கள்! தற்போது ஒரே குழந்தை வைத்திருக்கும் குடும்பங்கள் பெருகி வருகின்றன. தலைச்சன் என்று ஒதுக்குவது முடியாத ஒன்றாக மாறப் போகி றது. சான்றில்லாத சொற்றொடரை நம்பும் பாமரர்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.

கேட்டை, அண்ணனுக்கு ஆகாதா?

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது. இந்த இரு தரப்பும் அண்ணன் தம்பி முறை. அசுரன் அண்ணன், தேவன் தம்பி. பல நாட்கள் முடிவில்லாமல் தொடர்ந்த போரில், ஒரு நாள், அசுரன் ஒருவனை, தேவன் ஒருவன் வீழ்த்தியதில் தேவர்களுக்கு நம்பிக்கை முளைத்தது. பல நாட்களுக்குப் பிறகு, அண்ணன் ஒருவனை வீழ்த்திய நாளைப் பெருமைப்படுத்த அன்றைய நட்சத்திரத்துக்கு (கேட்டைக்கு) ‘அண்ணனை வீழ்த்திய நட்சத்திரம்' (ஜ்யேஷ்டக்னீ) என்று பெயர் சூட்டி வெற்றியைக் கொண்டாடினார்கள் என்ற தகவல் வேதத்தில் உண்டு.

ஆக, அண்ணனுக்கு ஆகாததாகிவிட்டது கேட்டை! ‘கேட்டை ஜ்யேஷ்டனுக்கு ஆகாது’ என்று, ‘பெண்ணானவள் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தால், அவளைத் திருமணம் செய்யும் கணவனின் அண்ணனை அழித்துவிடும்’ என திருமணத்தைத் தவிர்ப்பவர்களும் உண்டு. தன் அண்ணனுக்குக் கெடுதல் என்பதை மாற்றி, கணவனின் அண்ணனுக்கு என்று சொல்வது சிந்தனைக்குப் பொருந்தாத ஒன்று!

எனினும் ‘கேட்டையில் பிறந்தால் தன் அண்ணனுக்கு ஆகாது’ எனும் மனநெருடலைத் தவிர்க்க, சாந்தி செய்யச் சொல்கிறது சாந்திரத்னாகரம். ஜ்யேஷ்டா நட்சத்திர ஜனன சாந்தி என்கிற தலைப்பில், அதை விரிவுபடுத்தி விளக்குகிறது சாந்திகுஸுமாகரம்.

சித்திரை அப்பன் தெருவிலே!

‘சித்திரை அப்பன் தெருவிலே’ என்ற சொல் வழக்கு உண்டு. இதற்கு, ‘சித்திரா நட்சத்திர ஜனன சாந்தி’ என்று குறிப்பிட்டு பரிகாரம் செய்யப் பரிந்துரைக்கிறது சாந்திரத்னாகரம் எனும் நூல்.

இந்த நட்சத்திரக்காரர்களுக்கு, தந்தையின் காரகக் கிரகமான சூரியன், துலாத்தில் நீசம் பெற்று அங்கு சந்திரனுடன் இணைந்திருக்கும். இதன் விளைவாக மனபலம் குன்றி, சிந்தனை மாற்றம் ஏற்பட்டு தந்தையின் துயரத்துக்கு மகன் காரணமாகலாம் என்று விளக்கம் சொல்வார்கள். ஆனால், இந்த விளக்கத்தை ஒட்டுமொத்தமாக சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சேர்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது.

ஜாதகத்தில், ‘சூரியனும் செவ்வாயும் சுக்கிரனும் அனுகூலமாக இருந்தால் செல்வச் சீமானாகப் பெயரும் புகழும் பெற்று விளங்குவார் இவரின் தந்தை’ என்ற ஜோதிடக் கணிப்பு, இந்த வழக்குச் சொல்லை பொய்யாக்குகிறது. ‘அழகான தோற்றம், வசீகரமான கண்கள், வண்ண வண்ண ஆடை - அணிகலன்களில் ஆர்வம், ஆடம்பரப் பொருட்களை ஏற்று மகிழ்வதில் அலாதியான விருப்பம் ஆகியவற்றை சித்ரா நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் காணலாம்’ என்பார் வராஹமிஹிரர்!

வழக்குச் சொல்லில் ஏற்பட்ட தவறான விளக்கங்கள், பெண்களின் கல்யாணக் கனவுகளை கேள்விக்குறியாக்குவதை இனி திருத்துவோம்!

No comments:

Post a Comment