Monday, July 1, 2013

கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா

பகவான் விஷ்ணு எடுத்தது பத்து அவதாரங்கள் மட்டுந்தானா?

ஸ்ரீனிவாசன் நாகர்கோவில்

நன்மையை வாழ வைக்கவும் தீமையை வேரறுக்கவும் ஒவ்வொரு காலத்திலும் தான் அவதரிப்பதாக கீதாச்சரியன் கூறுகிறார்.

நமது புராணங்களும், சாஸ்திரங்களும் அவதாரங்களை சாட்சாத் அவதாரம், ஆவேச அவதாரம், அம்ச அவதாரம் என்று மூன்று வகையாக பிரிக்கிறது

சாட்சாத் அவதாரம் என்பது கடவுளே தனது பரிபூரண தன்மை கெடாமல் மனிதனாக அவதரிப்பது.

ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் தெய்வீக சக்தி ஆவேசம் கொண்டு வந்து போவது ஆவேச அவதாரமாகும்.

இறைவனின் சில அம்சங்கள் மட்டும் பிறப்பெடுப்பது அம்ச அவதாரமாகும்.

ஆவேச அவதாரங்களாக வியாசர், தன்வந்தி, மோகினி போன்ற அவதாரங்களை சொல்லலாம்.

அம்ச அவதாரத்திற்கு பலராமனை காட்டலாம்.

பொதுவாக சர்வ வல்லமை படைத்த கடவுளாகிய திருமால் பத்து அவதாரம் எடுத்ததாக சொல்வது மரபு.

ஆனாலும் கூட அவதார பட்டியலில் மாறுபாட்டையும் வேறுபாட்டையும் காண முடிகிறது.

விஷ்ணு புராணத்திலேயும் ஸ்ரீ மகா தேவி பாகவதத்திலேயும் பகவான் நாராயணன், ஜனகர், ஜனாதனர், சதாத்தனர், சனத் குமாரர், வாரகன், நாரதர், நரநாராயண், கமலர், தத்தாரேயர், யக்னர், ரிஷபர், பிருது, மச்சம், மோகினி, கூர்மம், கருடன், தன்வந்தரி, நரசிம்மன், வாமனன், பரசுராமன், வியாசர், ராமன், பலராமன், கிருஷ்ணன், புத்தன், கல்கி ஆகிய இருபத்தியாறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

பதினெட்டு புராணங்களில் மிக பழைய புராணமான லிங்க புராணத்தில் திரிபுர சம்ஹார பகுதியில் கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டுள்ளது.

பதினொரம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் தாம் எழுதிய கீத கோவிந்தம் எனும் நூலில் பலராமருக்கு பதிலாக புத்தரை அவதார பட்டியலில் காட்டுகிறார்.

அவர் வேள்வி சடங்குகளில் உயிர் பலி செய்யப்படுவதை தடுக்கவே புத்த அவதாரம் எடுத்தார் என்று கூறுகிறார்.

ஆயினும் புத்தரை விஷ்ணுவின் அவதாரத்தோடு சம்பந்தப்படுத்த பலருக்கு கொள்கை ரீதியான ஈடுபாடு கிடையாது.

புத்தர் வேதங்களை ஒதுக்கி கடவுளே இல்லையென கூறி பொய் மத பிரச்சாரத்தை செய்வதாக பலர் கருதியதினால் கால வெள்ளத்தில் புத்தரும் திருமாலின் அவதாரம் என்பது மறைக்கப்பட்டு போனது.

கடவுள் இந்த வடிவில் தான் வருவார் என இதை தான் அவர் செய்வார் என யாரும் இலக்கண வாம்பு கற்பிக்க முடியாது.

ஆகவே பத்து அவதாரங்கள் மட்டும் தான் சரியானது என்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல.

ராமன், கிருஷ்ணன் போன்ற அவதாரங்கள் பூமியில் சாதித்துள்ளதை போல ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அவதார புருஷர்களும் சாதித்துள்ளனர்.

எனவே கீதா வாசகத்தின் படி அவர் எப்போது வேண்டுமென்றாலும் எத்தனை முறை வேண்டுமென்றாலும் அவதரிப்பார்.

கண்ணனுக்கு இப்படி நட என வழி சொல்ல நாம் யார்?
.

No comments:

Post a Comment