Wednesday, July 17, 2013

வெற்றிக்கு வழி காட்டும் சிந்தனைகள்

01. வெற்றியின் விதிகள் வகுப்பறையில் கற்பிக்கப்படுவதல்ல, வாழ்க்கையுடன் முட்டி மோதித்தான் அதைக் கற்க முடியும்.

02. எல்லாவிதமான கல்விகளும் கற்கப்பட்டாலும், ஆசிய நாட்டு பாடசாலைகளில் வெற்றியின் அறிவியல் கற்பிக்கப்படாமல் தந்திரமாக நீக்கப்பட்டுள்ளதை புரிதல் அவசியம்.

03. உலகக் கோடீஸ்வரர்களில் 80 வீதமானவர்கள் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து முன்னேறியவர்களே.

04. ஒரு புதிய சமுதாயத்தை படைக்க வேண்டுமானாலும், உங்களை நீங்களே ஒரு புதிய மனிதராகப் புத்தாக்கம் செய்ய வேண்டுமானாலும் முதலாவது தேவை வெற்றியைப்பற்றிய அறிவியலாகும்.

05. பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இலட்சிய வெறியுடன் உறங்கச் செல்பவர்களுக்கு தூக்கத்தில் வரும் கனவுகளில் தீர்வு கிடைக்கும்.

06. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் செய்யப் போகும் மாபெரும் சாதனையை கனவு காணுங்கள். அந்தத் துறையின் முன்னோடிகள் உங்களுக்கு மாலையிடக் காண்பீர்கள்.

07. எந்தத் துறையில் பணி செய்வது உங்களுக்கு இனிமையான அனுபவமாகத் தோன்றுகிறதோ அந்தத் துறையை நீங்கள் சாதிப்பதற்கான துறையாக தேர்வு செய்யுங்கள்.

08. பணம் சேர்ப்பதுதான் உங்கள் இலக்கு என்றால் எதற்காக சேர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களிடம் தெளிவான பதில் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்காக சேர்க்கிறீர்கள் என்றால் அந்தப் பணம் தமக்கு எதற்காக கிடைக்கிறது என்ற தெளிவு அவர்களுக்கு வேண்டும். இரண்டுமே இல்லாமல் பணத்தைச் சேர்த்து எதுவுமே இல்லாமல் மடிவோரே மனதரில் அதிகம்.

09. கால் போன போக்கில் அலையும் மனதை தெளிவான திட்டமிட்டு செலுத்த முதன்மையான ஒரு திட்டம் வேண்டும்.

10. இலக்குகளை உருவாக்கத் தெரிந்தவர்கள், குறி நிர்ணயிக்கப்பட்ட ஏவுகணை போல செயற்படுகிறார்கள். நடைப்பிணமாய் வாழ்வோரில் இருந்து இவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள்.

11. உங்களது முதன்மை இலக்கு பிரமாண்டமானதாக இருந்தால் அதைப் பகுதி பகுதியாக பிரித்து எழுதிக் கொள்ளுங்கள். பின் சிறிது சிறிதாக முன்னேறுங்கள்.

12. ஒருவரது எதிர்காலம் அவருடைய அன்றாட வேலை முறையால் தீர்மானிக்கப்படுகிறது.

13. எதை மேம்படுத்த வேண்டும், ஏன் மேம்படுத்த வேண்டும், எப்படி மேம்படுத்த வேண்டும், என்ன காலத்திற்குள் மேம்படுத்த வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேடி வையுங்கள்.

14. இனிப்பாக இருந்தாலும், கசப்பாக இருந்தாலும் திட்டத்தை மனதில் வைத்து முன்னேற வேண்டும்.

15. சரியாகத் திட்டமிடத் தவறும் அனைவரும் தோல்விக்காக திட்டமிடுகிறார்கள் என்பது தோல்வியின் விதிகளில் ஒன்றாக இருக்கிறது.

16. ஆங்கிலப் பேரறிஞர் ஜேம்ஸ் போஸ்வெல்ஸ் 1763ம் ஆண்டு அக்டோபர் 13 ம் திகதி எழுதிய கடிதம் திட்டமிடலின் அவசியத்தை உணர்வு பூர்வமாக வலியுறுத்துகிறது.
அருமையான இதயமும், ஒளிமயமான உடலும் கொண்ட மனிதன் நீ. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக நீ சோம்பேறியாகவும், சோர்வாகவும், முட்டாள்தனமாகவும், மகிழ்ச்சியின்றியும் காணப்படுகிறாய்.
இருண்ட ஆண்டுகள் இன்றோடு முடியட்டும், உன்னை ஆற்றல் மிக்க மனிதனாக மாற்ற இப்போதே முடிவு செய்துகொள். உனது பின்னடைவுக்குக் காரணம், உன்னிடம் ஒரு தெளிவான திட்டம் இல்லாததே என்பதை உணர்ந்து கொள். அறிவுபூர்வமான திட்டத்தை உருவாக்கிக் கொண்டு தயாராகு. நடைமுறைக்கு செல்லும் போது உனது திட்டம் விரிவாக்கம் பெறலாம். ஆனால் மனம் போன போக்கில் செல்வதையும், திட்டமின்றி செயற்படுவதையும் இப்பொழுதே நிறுத்திவிடு. இந்த உறுதி மொழயை இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள்.

17. பலூன் விற்ற வெள்ளை அமெரிக்கரிடம் ஒரு கறுப்பின சிறுவன் ஐயா கறுப்பு பலூன்களும் மேலே பறக்குமா என்று கேட்டான். அதற்கு அவர் தம்பி பறப்பிற்கும் நிறத்திற்கும் தொடர்பில்லை உள்ளே இருப்பதுதான் பறப்பை தீர்மானிக்கிறது என்றார். உடனே கறுப்பு பலூனை வேண்டி பறக்க விட்ட சிறுவனே மாட்டின் லூதர் கிங். ஆகவே உனக்குள்ளே இருக்கும் சரக்கை அதிகரித்தால் நீயும் உயரப்பறக்கலாம். நீ கீழே கிடப்படதற்கு பறக்கும் சரக்கு இன்மையே காரணம் என்பதை உணர்.

18. உங்களிடம் எவ்வளவு அழகு, பணம், அதிகாரம் இருந்தாலும், உலகம் உங்கள் செயலை வைத்தே உங்களை எடை போடுகிறது. உங்கள் மனதிற்குள் இருக்கும் உழைப்பற்ற உயர்வான சுய மதிப்பீடு மக்களிடம் உங்களைப்பற்றிய உயர்வை உருவாகாது.

19. நம்மில் பலரும் நம்மைப்பற்றி குறைவாக மதிப்பிடக் காரணம், சிறுவயதிலேயே நம்மிடம் விதைக்கப்படும் எதிர்மறையான நம்பிக்கைகள், மதிப்பீடுகள், கண்ணோட்டங்கள் என்பவைதான்.

20. இருபது வயதில் பிணமாகி எழுபது வயதில் புதைக்கப்பட்டான் என்று கருதத்தக்க சுவாரஸ்யமற்ற வாழ்க்கை வேண்டுமா அல்லது சவால்களை எதிர் கொள்ளும் சாதனை வாழ்க்கை வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்.

21. விரும்பும் தகுதியை பெறுவதற்கு அது ஏற்கெனவே இருப்பது போல நடிப்பதும் ஒரு வழி என்று உளவியல் கூறுகிறது. நீங்கள் எந்தளவு சமூக அந்தஸ்த்து பெற விரும்புகிறீர்களோ அது வந்துவிட்டதாக நினைத்து நடவுங்கள்.

22. உங்கள் மனத்திரையை தொலைக்காட்சி திரையாகவும், பெருவிரலை ரிமோட் கன்ரோலை அமத்தும் கருவியாகவும் கருதி சரியான காட்சிகளை மனத்திரையில் விழுத்துங்கள்.

23. இலட்சியத்துடன் இணைக்கப்படாத உழைப்பு மெய் வருந்தக் கூலி தருமேயல்லாது சிறப்பான பலன்களை அள்ளித்தராது.

24. ஒரு பணியை தொலை நோக்குடன் அணுகத் தெரியாதவருக்கு அதில் முழுமையான ஈடுபாடு இருக்காது.

25. உங்களது உழைப்பு சரியான விளைவை தரவேண்டுமானால் ஒரு பணியை தொடங்க முன்பாகவே, அதனை உங்கள் மனதிற்குள் பயிற்சி செய்து நிறைவேற்றுவது ஒரு சிறந்த யுக்தி.

No comments:

Post a Comment