Wednesday, July 17, 2013

ஆளுமைத்திறன் என்றால் என்ன?

ஒரு மனிதன் அவனது குணநலன்களை வைத்தே அறியப்படுகிறார். அந்த குணநலன்களை வைத்தே ஒருவரின் ஆளுமை தீர்மானிக்கப்படுகிறது. ஆளுமையைத்தான் நாம் Personality என்கிறோம். ஆளுமை என்றாலே ஒரு மனிதரின் வெளிப்புறத் தோற்றம் என்ற தவறான புரிதல் பல நபர்களுக்கு இருக்கிறது. ஆளுமை என்பது ஒரு தனிமனிதனின் முழுமையான அம்சங்களை உள்ளடக்கியதே ஒழிய, அவனின் குறிப்பிட்ட தன்மைகளை மட்டுமே கொண்டதல்ல. ஒரு மனிதனின் குணநலன் சார்ந்த மதிப்பீடே ஆளுமை எனப்படும்.

ஒரு மனிதன் தனது ஆளுமையை மாற்றிக்கொள்ள முடியுமா? என்ற மாபெரும் கேள்வி இன்று பலரிடமும் உள்ளது. அந்த கேள்விக்கு, "நிச்சயம் முடியும்" என்பதுதான் பதில். தன்னைப் பற்றி செருக்கு கொள்ளாமலும், மாற்றத்தை ஏற்கும் மனப்பான்மையுடனும் இருக்கும் ஒருவர் தனது ஆளுமையை மாற்றிக்கொள்ள முடியும். ஆளுமையை மாற்றும் நோக்கமானது, சாதாரண வாழ்க்கை நிலையிலிருந்து ஒரு வெற்றிகரமான வாழ்க்கை நிலைக்கு மாறுவதே ஆகும்.

நமது வாழ்க்கையில் வரும் கஷ்டங்களும், சங்கடங்களும் உண்மையில் தாங்க முடியாதவைகளாக இருக்கலாம். ஆனால் அந்த சிரமங்கள் உங்களின் ஆளுமையை ஆதிக்கம் செலுத்துமளவிற்கு விட்டுவிடலாகாது. அப்படி நடந்துவிட்டால், உங்களின் வாழ்க்கை தோல்வியை நோக்கிச் செல்லும்.

நடத்தை, தகவல்தொடர்பு திறன், பிறருடனான உறவு, சிறப்பான வகையில் மனித உறவுகளை கையாள்தல் போன்றவை ஒரு மனிதன் தன்னை மாற்றிக் கொள்ளும் செயல்பாட்டில், முக்கியப் பங்கு வகிப்பவை. இதுபோன்ற பலவித பண்புகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதுதான் ஆளுமைத்திறன் மேம்பாடு(Personality Development) எனப்படுகிறது.

No comments:

Post a Comment