Wednesday, July 3, 2013

எது வெற்றி?

வெற்றி

இந்த வார்த்தை, இன்றைய தினம், இளைஞர்களின் உதடுகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு வார்த்தையாகிவிட்டது.

“வெற்றி எட்டுத்திக்கும் எட்ட கொட்டு முரசே” என்ற பாரதியின் பாட்டு முதல்,

“வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்” என்ற திரைப்படப்பாடல் வரை, வெற்றி முழக்கம் மக்களின் வாழ்க்கை முழக்கமாகிவிட்டது.

வெற்றி பற்றிய விழிப்புணர்வும், வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையும், அதற்கான வெற்றியும் இன்று அதிகரித்துதான் இருக்கிறது.

வெற்றி என்பது என்ன?

ஆசைப்பட்டதை அடைவது.

கனவுகளை நனவாக்குது.

போட்டிகளில் ஜெயிப்பது.

எதிலும் முன்னணியில் நிற்பது.

இவைஎல்லாம் பொதுவான கருத்துக்கள்..  ஆனால் வெற்றி பற்றிய இது போன்ற கருத்துக்கள், ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம் காலத்திற்குக் காலம் மாறுபடுவதும் உண்டு.

வெற்றியின் சில கோணங்கள்

ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கிறது. பத்துபேர் அதில் கலந்து கொள்கிறார்கள். பத்துபேரும் ஒவ்வொருவரும் என்ன நினைக்கிறார்கள்?

முதலாவதாக வந்தவர், வெற்றி பெற்றவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுபவர். ஆகவே மாற்றுக் கருத்தின்றி அவர் ஒரு வெற்றியாளர்தான்.

2வதாகும் 3 வதாகவும் வந்தவர்கள். இவர்களுக்கும் பரிசு கிடைத்து விடுவதால் இவர்களும் தங்களை வெற்றியாளர்கள் என்றே கருதுகிறார்கள். அதுவும் சரியே.

4வதாக வந்தவர் வெறும் 0.5 விநாடியில்தான் மூன்றாவது இடத்தை விட்டார்.  ஆக இது ஒன்றும் பெரிய தோல்வி இல்லை என்பது இவர் கருத்து.

5வதாகவும் வந்தர் சென்ற முறை இதே தூரத்தைக் கடக்க எனக்கு 15 வினாடிகள் ஆனது. இப்போது 12 வினாடிகள்தான் ஆயிற்று. பரவாயில்லையே, என்னிடம் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. தொடர்ந்து பயிற்சியும் முயற்சியும் செய்தால் வெற்றி என்பது பெரிய விஷயமே இல்லை.

6வதாக வந்தவர் எனக்கு முன்னால் வந்தவர்கள் அனைவருமே கடந்த ஓராண்டு காலமாகப்பயிற்சி செய்தது எனக்குத் தெரியும்.  நானோ கடந்த மூன்று மாதங்களாகத்தானே பயிற்சி செய்து வருகிறேன். ஆகவே இதுவே எனக்குப் பெரிய வெற்றிதான்.

7 வதாக வந்தவர் சென்ற தடவை பத்தாவதாக வந்தேன். இப்போது 7வது இடம். இது வெற்றியில்லாமல் வேறு என்னவாம்?

8வதாக வந்தவர் நேற்றும் முந்தாநாளும் நல்ல முழங்கால் வலி. நல்ல வேளை பாதியில் விலகி விடாமல் எட்டாவதாக வந்தேனே.  இதுவே  பெரிய சந்தோஷம்.

9வதாக வந்தவர் நான் செலக்ஷன் லிஸ்டிலேயே முதலில் இல்லை எப்படியோ ஓடி ஓடி,  பத்தில் ஒருவனாக இடம் பெற்றேனே.  அதுவே பெரிய வெற்றிதான்.

10வதாக வந்தவர் கடைசியாக வந்தாலும், இடையில் நின்று விடாம், கடைசி வரை ஓடி, வெற்றிக்கோட்டை தொட்டேனே.  அதுபோதம்.  அடுத்தமுறை, முதல் ஐந்து பேரில் ஒருவனாக நிச்சயம் வருவேன்.

இந்தப் பத்துபேரில்,ஒருவருமே தங்களைத் தோற்றவன் என்று முத்திரை குத்திக்கொள்ளவில்லை பார்த்தீர்களா?  அதுதான் உண்மையான விளையாட்டு வீரனின் மனப்பாங்கு. இவர்கள் தோல்வியினால் மனச்சோர்வுக்கு இடம்  கொடுப்பதில்லை.  தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் தோல்வி என்று எதையுமே பார்ப்பதில்லை. எல்லாமே வெற்றிதான்.

என்ன தெரிகிறது?

ஒருவனுக்குத் தோல்வி வரலாம். தோல்வி மனப்பான்மை வந்துவிடக்கூடாது.

மேலும் பல கோணங்கள்

வகுப்பில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிய ஒரு மாணவனுக்கு பரிசு கிடக்கிறது.  பாராட்டு கிடைக்கிறது.  இருக்கட்டும். அதற்காக நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் வாங்கிய மாணவன் முட்டாள் இல்லையே.  தோல்வியாளன் இல்லையே.

நூற்றுக்கு நூறு வாங்கிவிட்டு ஓராண்டு காலம் அலைந்துவிட்டு, ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்குச் செல்பவனை விட, நூற்றுக்கு நாற்பத்து ஐந்து மார்க் வாங்கி பாஸான மாணவன், அடுத்த மாதமே அறுநூறு ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச்சேர்ந்து, அதே ஓராண்டில் நல்ல உழைப்பாளி என்று பேரெடுத்து ஆயிரம் ரூபாயையம் தொட்டுவிடுகிறான்.  இவன் தோல்வியாளனா?

வெற்றி என்பது முதலிடத்தைப் பிடிப்பதுதான் என்பது சரியே. ஆனால், எந் இடத்தைப் பிடித்தாலும், சென்ற ஆண்டைவிட ஒரு படியாது முன்னேற்றம் இருந்தால் அதுவும் வெற்றிதான் என்பது எப்படித் தவறாகும்?

ஆமையுடன் போட்டியிட்டு முயல் அடைவது வெற்றிதானா?  கழுகோடி தன்னை ஒப்பிட்டு, ஒரு காகம் தன்னை ஒரு தோல்வியாளன் ஒரு கருதி கவலைப்படுவது சரிதானா?

வெற்றிக்கோட்டை தொட்டால்தான் வெற்றி என்பது சிலர் எண்ணம். வெற்றிக்கோட்டை நோக்கி, தொடர்ந்து தொய்வில்லாமல் ஓடி நெருங்குவதும் வெற்றிதான் என்பது சிலர் எண்ணம்.

ஒருவனின் சாதனையின் அளவை, மற்றவர்களோடு ஒப்பிட்டு, அதை வெற்றி என்று ஊரார் குறிப்பிட்டால் அவன் மகிழ்கிறான். ஆனால்இன்னொருவன், தனது சாதனையின் அளவுகளை, தனது சுமைகளோடு, சூழ்நிலையோடு, வயதோடு, முயற்சிகளோடு, பொருத்திப் பார்த்து, அதுவும் வெற்றிதான் என்று திருப்திடைகிறான். இதுசரியல்ல என்று சொல்ல முடியுமா?

உலக்க் கோடஸ்வர்ர்களில் முதலிடம் வகிக்கும் பில்கேட்ஸஃ வெற்றியாளர் என்று சந்தேகத்துக்கிடமின்றி ஏற்றுக்கொள்கிறோம். எந்த சொத்துபத்தும் இல்லாமல், ஆனால் மக்கள் மனதில் முழு இடத்தைப்பிடித்த காமரார், ன்னை தெரஸா போன்றோரையும் வெற்றியாளர்கள் என்று தானே ஏற்றுக் கொண்டோம்.

அடுக்கடுக்காக தோல்விகளை மட்டுமே கண்டுவந்த ஆபிரகாம் லிங்கனை, அமெரிக்க ஜனாதிபதி என்ற இறுதி வெற்றி, வெற்றியாளர் ஆக்க வில்லையா?  ஆரம்பத்தோல்விகளை மட்டும் வைத்து, ஒருவரைத் தோல்வியாளர் என்று சொல்லிவிடமுடியுமா?

மாவட்ட அளவில் வெற்றி பெற ஒரு விளயாட்டு வீரன்,மாநில அளவில் தவறிவிட்டால் அவன் தோல்வியாளன் ஆகி விடுவானா?

சரி, மாநில அளவிலும் வெற்றி பெறுகிறான். ஆனால் அடுத்த ஆண்டுகளில் அதைத்தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அவன் தோல்வியாளன் ஆகிவிடுவானா?

கல்வியில் வெற்றி பெற்ற ஒருவன், தொழிலில் தோற்றுப்போகிறான்.  தொழிலில் வெற்றி பெற்ற ஒருவன், வாழ்க்கையில் தோற்கிறான். இவர்களில்யார் வெற்றியாளர்?  யார் தோல்வியாளர்?

“வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. புத்திசாலி மனிதரெல்லாம் வெற்ற காண்பதில்லை” – கண்ணதாசன்.

ஆக, வெற்றி என்பது….

செய்ய நினைத்ததை செய்து முடிப்பது.

ஆண்டுக்கு ஆண்டு முன்னேற்றம் காண்பது.

ஒப்பிட வேண்டியவர்களுடன் மட்டுமே ஒப்பிட்டு, அவர்களுக்கு இணையாக வளர்வது.

பலதுறைகளிலும் சக்தியைச் செலவிட்டு சங்கடப்படாமல், ஒத்துவரும் ஒரு துறையில் மட்டுமாவது உச்சத்தைத் தொடுவது.

நினைத்த இலக்கை அடையும்வரை, முயற்சிகளை நிறுத்தாமல் தொடர்வது.

தோல்வியைக் கண்டால் துவண்டுவிடாமல், வெற்றிப்பாதையை விட்டு விலகாமல் இருப்பது.

ஒன்பது முறை தோற்றாலும் பத்தாவது முறையும் முயற்சிப்பது.

எதையும் சாதிக்காவிட்டாலும், எதிலும், யாரிடமும் ஏமாந்து விடாமல் இருப்பது.

அடைய முடியாத்தை எண்ணி ஆதங்கப்படாமல், அடைந்தவைகளை ஆனந்தமாய் அனுபவிப்பது.

முயற்சியின் நோக்கம் வெற்றி. வெற்றியின் நோக்கம் மகிழ்ச்சி.  ஆக, எந்த நிலையிலும், சலிக்கும் மனதைச் சமாதானப்படுத்தி, அதை உற்சாகத்தாலும் உவகையாலும் நிரப்புவது.

வெற்றி நமது  நோக்கம். அதற்குத் தேவை ஊக்கம். தோல்வியால் வரக்கூடாது ஏக்கம். தொடர்ந்து வளர்ந்தால் அதுவே ஆக்கம்.

No comments:

Post a Comment