பிறக்கும்போது வாழ்க்கை தொடங்குவதில்லை. உங்களை நீங்கள் எப்போது அறிந்துகொள்கிaர்களோ அப்போதுதான் அது தொடங்குகிறது. வெற்றி என்பதும் யாரோ காட்டிய திசையில் கண்களை மூடிக்கொண்டு செல்வதல்ல.
விருப்பப்படி ஒரு அடி முன்வைத்தால் அடுத்த அடி வெற்றிதான். நாட்டின் உற்பத்தித் திறனை மேம்படுத்த இளைஞர்கள் முழுமையாக ஆற்றலை வெளிப்படுத்தும் சூழலை ஏற்படுத்த வெண்டும்.
அதேபோல் பன்முகத் திறன்களை வெளிப்படுத்தி வாழ்வில் வளம் சேர்த்த பலரது வாழ்க்கை அனுபவங்களை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் அதைப் பார்த்து தங்களிடம் புதைந்துள்ள பன்முகத் திறன்களை நன்குணர்ந்து அவற்றை பயன்படுத்தும் வாய்ப்பும் நம்பிக்கையும் இளைஞர்களுக்கு ஏற்படும்.
இளைஞர்களுக்குத் தேவை பின்பற்றுவதற்கான முன் உதாரணங்களே, விமர்சனங்கள் அல்ல. முதலில் தன்னை உணர்தலும் தெளிவும் பற்றிய ஒரு சிறிய கதையை பார்க்கலாம். திருப்தியும் மகிழ்ச்சியும் தரும் பணியை சிறப்பாக செய்ய முடியும்.
சிறப்பாக செய்யும் பணி முன்னேற்றத்தின் உச்சத்தை அடையும் பணியைச் செய்தவரும் அதன் பலனை அனுபவிக்கும் வாடிக்கையாளரும் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் (நிறுவனத்தின்) வளர்ச்சியும் சிகரம்போல ஏறுமுகமாக செல்லும்.
பன்முக வித்தகர்கள்!
அடுத்ததாக நாம் காலச் சூழல்களால் ஏதோ ஒரு துறையை தேர்வு செய்து கல்வி பயின்றிருக்கலாம். கல்வி சம்பந்தமான பணியிலும் ஈடுபட்டு வரலாம். ஆனால் நமது விருப்பம் வேறு எந்த துறையிலோ தீவிரமாக இருக்கலாம். அப்படி இருந்தால் அதோடு வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது.
பன்முகத் திறனை வெளிப்படுத்தி நமது விருப்பத்துறையில் சோபிக்கும் வழிகளை கையாள வேண்டும். அப்படி வாழ்க்கையில் ஜொலித்த சிலரை பார்க்கலாம்.
அவர் உருது மொழி படித்த பண்டிதர் அல்ல. ஆனால் அது குறித்தும் புத்தகம் எழுதி உள்ளார். அவர்தான் பவன் கே. வர்மா என்ற ஐ.எப்.எஸ். அதிகாரி. இவர் படித்த படிப்பு பி.ஏ. ஹொனர்ஸ். வரலாற்றுப் பிரிவில் பட்டம்பெற்று பின்னர் சட்டம் பயின்றவர். இவர் சமீபத்தில் எழுதிய புத்தகத்தை பிரேஞ்சு, ஜெர்மன், ஸ்பானிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட உள்ளனர்.
ஒரு முழுநேர எழுத்தாளர் ஒரு விஷயத்தை எழுத ஐந்து நாட்கள் எடுத்துக்கொண்டால், இவரால் அதை ஐந்து மணி நேரத்தில் எழுதிவிட முடியும் என்கின்றார். கால மேலாண்மையை நன்குணர்ந்து பயன்படுத்தி வருகின்றார். எழுதும் திறன் மற்றும் இந்திய வெளிநாட்டுப் பணி ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று பலப்படுத்திக் கொண்டு தன்னை உற்சாகத்துடன் செயல்பட வைக்கிறது என்கின்றார் இவர்.
நெய்வேலி ஸ்கந்த சுப்பிரமணியம் என்பவர் பொலிடெக்னிக்கில் டிப்ளோமா படித்தவர். இவருக்கு மிருதங்கம் வாசிப்பதில் ஈடுபாடு அதிகம். பல்வேறு கச்சேரிகளை உலகெங்கும் சென்று நடத்தியுள்ளார். இவர் தொழில் கல்வி பயின்றாலும் இசையில் அதிக நாட்டம் காட்டியதால் மிருதங்கம் வாசிப்பதில் சிறந்தவராக திகழ்கிறார்.
திரைப்பட இயக்குநர் ஷங்கர் படித்தது தொழில் கல்வி சார்ந்த டிப்ளோமா படிப்பே. ஆனால் அவர் தேர்வு செய்துள்ள துறை படைப்பாற்றல் மிக்க துறை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
பொழுது போக்கு வாழ்க்கையை மாற்றியது
கற்பாறை சிற்பத்தை அல்லது கோவில் சுவர் சித்திரத்தை காண்பித்தால்போதும், அவை சார்ந்த தகவல்கள் உண்மைகள் ஆகியவற்றை மிகுந்த ஈடுபாட்டுடன் கூற ஆரம்பித்துவிடுவார். உசிலாம்பட்டி அருகிலுள்ள கவுண்டம்பட்டி கிராமத்தைச் சார்ந்த கலைவரலாற்றியல் நிபுணர் கே. டி. காந்திராஜன்.
இவர் மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல் முயற்சிகள் மேற்கொண்டதின் விளைவாகவே இத்தகைய நிபுணத்துவத்தைப் பெற்றுள்ளார். இவர் பள்ளிப் பருவத்திலேயே வண்ணப் படங்கள் தீட்டுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். பின்னர் வேதியியல் பிரிவில் பட்டப்படிப்பை படித்தார்.
பொழுதுபோக்காக ஏற்பட்ட வண்ணப்படங்களை தீட்டும் ஆர்வம் நாளடைவில் சென்னை நுண்கலைக் கல்லூரியில் இரண்டாண்டுகள் தயார்நிலை படிப்பைப் பயில இவரைத் தூண்டியது. பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் கவின் கலைத்துவம் பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பை பயின்றார்.
பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராக பணியாற்றும்போது ஜப்பானிய நாட்டைச் சார்ந்த தமிழ்ப் பேராசிரியர் நெபுரு க்ரேசியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரது வாழ்க்கைப் பாதையில் இந்த சந்திப்பு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் எர்வின் நியூமேயர் எழுதிய ‘இந்திய பாறைக்கலை’ என்ற புத்தகம் இவரது ஈடுபாட்டை அதிகப்படுத்தியது.
தொடர்ந்து ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் குழுவாக 20க்கும் மேற்பட்ட கற்பாறை செதுக்கும் வேலை மற்றும் சுகர் ஓவியங்களை இனங் கண்டுள்ளார். மேலும் ஏழு கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார். இவரைப் பற்றி இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் என்னவென்றால் எதில் உண்மையான நாட்டம் எள்ளது என்பதை இனங்கண்டு அதன் வழி செல்லும்போதுதான் நம்மால் சாதனை படைக்க முடியும் என்பதை விளக்கவே!
பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான ஹொக்கி விளையாட்டில் சென்னையைச் சேர்ந்த நவீன்குமார் கோல்கீப்பராக பங்கெடுத்துக்கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார்.
இவரது உயரம் 185 செ. மீட்டர். மேலும் இவரது தந்தையார் அளித்த ஊக்கம் மற்றும் இவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்களான இந்தியாவிற்கு உலக அளவில் ஆக்கியில் பெருமை வாங்கிக்கொடுத்த வி.ஜே. பீட்டர், வி. ஜே. பிலிப்ஸ் ஆகியோரது தாக்கமும் இவரை ஹொக்கி விளையாட்டில் சாதனை புரிய தூண்டியதாக கூறுகிறார்.
இவ்வாறு பல்வேறு உதாரணங்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கும் அளவிற்கு பலர் சிறப்பான முன் உதாரணமாக திகழ்கின்றார்கள்.
புதுடில்லியில் உள்ள சிறந்த மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் படிப்பை பயின்ற ஆமில் அகமது என்பவர் கம்பளம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஒரு பங்குதாரர். இத்தொழிலில் முழு ஈடுபாட்டுடன் உலக அளவில் வியாபாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் அவருக்கு நடனத்தின் மேல் உள்ள ஈடுபாட்டால் மூன்று மாத படிப்பாக நடனத்தை டெல்லி இசைப்பள்ளியில் பயின்றார்.
பின்னர் நாட்டியம் சார்ந்த ஒரு ஸ்டூடியோ ஒன்றை டெல்லியில் ஏற்படுத்தியுள்ளார். நாட்டிய போட்டிகள் நடத்தும்போது நாட்டியத்தின் தரத்தை மதிப்பீடு செய்பவராகவும் செயல்படுகின்றார். இவரால் சிறப்பாக தொழில் முனைவாளராகவும் இருக்க முடிகின்றது. அதே சமயம் நாட்டியம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றார்.
அவரவரின் ஆற்றலுக்கேற்ப புரிதலுடன் செயல்பட்டால் வென்றுகாட்ட முடியும். படிப்பை மட்டும் பாட அட்டவணைப்படி படித்து மதிப்பெண்கள் வாங்குவது மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் படிப்பை வேலைவாய்ப்பாக சுய தொழிலாக மாற்ற இளைஞர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.
பிலிப்நைட் என்பவர் பள்ளிப்பருவத்திலேயே தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தார். ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது தான் தொழில் முனைவோராகத்தான் மாற வேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்து அதன்படி செயல்பட்டார். இன்று உலகத் தரத்திற்கு அவரது நிறுவனம் சிறந்து விளங்குகின்றது. அதுது¡ன் நைக் என்ற உலகப் புகழ் பெற்ற காலணி நிறுவனம்.
கல்வி என்பது வெறும் தகவல்களையும் சித்தாந்தங்களையும் மனதில் சேர்ப்பதாக இருக்கக்கூடாது. லட்சியம் என்பதும் கொள்கையாக மட்டும் இருந்தால் வெறும் ஏட்டு சுரைக்காய்போல் சமைக்க உதவாமல் போய்விடும்.
ஆகவே கல்வியை கருவியாக வைத்துக்கொண்டு முன்னோடிகளின் வாழ்க்கை குறிப்புகளையும் உள்வாங்கிக்கொண்டு அவரவரின் எண்ண ஓட்டம், இயல்பான நாட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலம் குறித்த வரைபடங்களை மனதில் தயாரித்து அவற்றின்படி நடந்தால் அனைவருக்கும் கருதியது கைகூடும்.
No comments:
Post a Comment