Monday, July 1, 2013

நாடி ஜோதிட ரகசியம்

நாடி என்ற வார்த்தை வைத்திய சாஸ்திரத்தில் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே நாடி ஜோதிடம் என்பது கைநாடியைப் பார்த்து பலன் சொல்லும் முறையாக இருக்குமோ என்று பலர் நினைக்கிறார்கள்.

நினைப்பது மட்டுமல்ல வாய்விட்டே பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களின் அறியாமை நகைப்புக்குரியது என்று நாம் கருதமுடியாது.

காரணம் நமது புராதனமான கலைகளைப் பற்றிய விழிப்புணர்ச்சி என்பது அவ்வளவு குறைவாகவே மக்களிடம் இருக்கிறது. இது வேதனையாகும்.

நாடி என்றால் ஒலை, ஏடு என்றெல்லாம் கூட பொருள் இருக்கிறது. அதாவது ஒருவரைப் பற்றி அவர் பிறப்பதற்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட ஏடு என்பதே நாடி ஜோதிடம் என்பதன் முழுமையான அர்த்தமாகும்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி வரலாம். இவ்வுலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் வாழவும் போகிறார்கள். அவர்கள் அனைவருக்குமே ஏடுகள் எழுதி வைக்கப்பட்டுள்ளதா?

அப்படி எழுதி வைக்கப்பட்டுள்ளது என்றால் உலகை உலுக்கும் பயங்கரவாதிகளின் சர்வாதிகாரிகளின் பிறப்பை முன்கூட்டியே அறிந்து தேடிக் கண்டுபிடித்து செய்ய வேண்டியதைச் செய்து விடலாமே என்று சிலர் வாதிடலாம். இதை விதண்டாவாதம் என்று யாரும் ஒதுக்கி விட முடியாது.

ஆனால் உண்மை நிலை பிறந்த, பிறக்கப்போகும் உயிர்களுக்கெல்லாம் விசுவாமித்திரரோ, அகஸ்தியரோ தங்களது தவம் என்ற புனிதப் பணியை ஒதுக்கி வைத்து விட்டு ஒலைகள் எழுதி வைக்கவில்லை. அப்படி எழுதி வைத்திருப்பதாகச் சொல்வதெல்லாம் வடிகட்டிய கற்பனைக் கதைகள் தாம்.

நாடி ஜோதிடத்தில் உள்ள ஏடுகள் என்பதெல்லாம் 12 காண்டம் என்று சொல்லக் கூடிய பாவப் பலன்களே ஆகும். மேலும் சாதாரண ஜோதிடத்திற்கும், நாடி ஜோதிடத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு.

அது எந்தப் பாவத்தில் எந்த கிரகம் இருக்கிறது என்பதை வைத்து பலன் சொல்லுவது சாதாரண ஜோதிடம் ஆகும்.

நாடி ஜோதிடம் என்பது எந்தக் கிரகம் வேறு எந்தக் கிரகத்தோடு சம்பந்தப்பட்டு இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து பலன் கூறுவது ஆகும்.

கிரகங்களின் சேர்க்கையை வைத்துப் பலன் சொன்னால் துல்லியமான பலனைக் கணிக்கலாம். இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

நாடி ஜோதிடத்தின் கணித முறைகளும், பலன்களும் பாடல் வடிவாகவே அமைந்திருப்பதைக் காணலாம்.

இது அந்தக் காலத்தில் பானை செய்வதில் இருந்து காவியம் படைப்பது வரை எல்லாமே செய்யுள் வடிவில் தான் நடைமுறையில் இருந்தது

அந்தப் பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டு தற்காலச் சூழலுக்கு ஏற்ப சிறு மாறுபாடுகளை இணைத்தோ, துண்டித்தோ ஜோதிடர்கள் தங்கள் சுய திறமைக்கு ஏற்றவாறு பலன் சொல்லி வருகிறார்கள்.

மேலும் ஒவ்வொறு மனிதனுக்கும் தனித்தனி பலன் என்பது 12 லக்கிணங்களின் கிரக சஞ்சார தன்மையை பொருத்தே சொல்லப்படுகிறது என்பதே உண்மை நிலையாகும்

நாடி ஜோதிடத்தில் காண்டங்கள் என்று அழைக்கப்படும் பகுதிகளில் என்னென்ன விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளலாம்? என்று சிலருக்கு தெரிவதில்லை

ஒரு ஜாதகர் தன்னைப் பற்றியும் தனது தந்தையைப் பற்றியும் தான் அடையும் வெற்றி, புகழ் ஆகியவற்றையும் அரசு காரியங்களில் கிடைக்கும் முடிவுகளைப் பற்றியும் அரசியலில் வெல்வோமா? தோற்போமா என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள பித்ரு காண்டம் பார்க்க வேண்டும்.

இந்தக் காண்டம் சூரியன் இருக்குமிடத்தை வைத்தும் அதனோடு சேருகின்ற கிரகங்களின் நிலையை வைத்தும் கணித்துச் சொல்லப்படும்.

அடுத்ததாக தாயாரைப் பற்றி மனிதனின் மனோ நிலையைப் பற்றி பயன்படுத்தும் மருந்துகளைப் பற்றியும் தரிசிக்கும் ஆலயங்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகள் ஆகியவைகளைத் தெரிந்து கொள்ள மாத்ரு காண்டத்தைப் பார்க்க வேண்டும்.

இது சந்திரனையும் மற்ற கிரகங்களையும் கணித்துச் சொல்லும் பகுதியாகும்.

சகோதரன், வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், முட்டுக் கட்டைகள், நோய், விபத்து மற்றும் ஆயுதப் பிரயோகம், சொத்து பிரிவினைகள் ஆகியவைகளைத் தெரிந்து கொள்ள சகோதரக் காண்டத்தைப் பார்க்க வேண்டும்.

இது செவ்வாய் மற்றும் அதனோடு சம்பந்தப்படும் கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது ஆகும்.

ஒருவனின் கல்வி, தாய்மாமன், இரலண்டாவது மனைவி, வியாபாரம், நண்பர்களின் கூட்டு, வாக்கு சாதுர்யம் ஆகியவைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள வித்யா காண்டம் பார்க்க வேண்டும்.

இது புதன் இருக்குமிடத்தையும் இதனோடு சேரும் மற்ற கிரகங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது ஆகும்.

ஒரு ஜாதகன் கௌரவம், அவனுக்குக் கிடைக்கின்ற இறையருள், அவனால் செய்யப்படும் நற்காரியங்கள், உத்தியோகம் மற்றும் தொழீல் அமைப்புகள், திருமணம், மனநிம்மதி ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள ஜீவகாண்டம் பார்க்கவேண்டும்

இது குருவையும் அதைச் சார்ந்துள்ள கிரகங்களையும் அடிப்படையகாக் கொண்டு கணிப்பது ஆகும்..

ஒரு ஜாதகனின் மனைவி மற்றும் கணவனைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், சொந்த வாழ்க்கையில் ஏற்படும் சுகதுக்கங்கள் மனை மற்றும் நிலங்கள், ஆடை ஆபரணங்கள், செல்வ வளம், வாகன யோகம் ஆகியவைகளை அறிய இல்லற (களஸ்திர) காண்டம் பார்க்க வேண்டும்.

சுக்கிரனையும் அதைச் சோரும் கிரகங்களையும் அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது ஆகும்.

செய்யும் வேலை, சகோதரர்களிடம் இணக்கம் மற்றும் பகை ஆகியவற்றைப் பற்றியும் கர்மவினை அதனால் கிடைக்கும் தண்டனை மற்றும் சன்மானம் பற்றியும், உடலைப் பீடிக்கும் நிரந்தரமான நோய்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள கர்மகாண்டம் பார்க்க வேண்டும்.

இது சனி மற்றும் அதைச் சேரும் கிரகங்களையும் அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படுவது ஆகும்.

ஒருவனுக்கு எப்போது எந்த நோய் வரும், எந்த நிலையில் மரணம் ஏற்படும். மனிதனிடம் உள்ள கள்ளத்தனத்தின் உண்மையான நிலை வெளிப்பட்டு பாதிப்புகளை எந்த வகையில் ஏற்படுத்தும், திடீர் விபத்துக்கள் மற்றும் கடன் தொல்லைகள் ஆகியவைகளைப் பற்றியும் தீய மந்திரங்களால் ஏற்படும் பில்லி, சூனியங்கள் மற்றும் ஆவிகளின் சேட்டைகள் பற்றியும் அறிந்து கொள்ள ரோக காண்டம் பார்க்க வேண்டும்.

இது ராகு மற்றும் அதைச் சார்ந்த கிரகங்களை வைத்து இக்காண்டம் பார்க்கப்படுகிறது.

தனிமனிதனின் ஆன்மீக ஈடுபாடு, மோட்ச மார்க்கம், வேத, யோக பயிற்சி முறைகள் ஆகியவைகளும் தற்கொலை எண்ணமும், விரக்தி மனப்பான்மையும், பித்துப் பிடிக்கும் நிலையும், குடும்பத்தில் ஏற்படும் பாகப் பிரிவினை பற்றியும் அறிந்து கொள்ள ஞான காண்டம் பார்க்க வேண்டும்.

இது கேது மற்றும் அதைச் சார்ந்த கிரகம்களை அடிப்படையாக வைத்து இக்காண்டம் பார்க்கப்படுகிறது.

ஒருவன் வாழ்க்கை முழுவதும் கடன் தொல்லையால் அவதிப்பட்டாலும், சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று தங்குவதற்கு வீடு கூட இல்லாது நடுத்தெருவிற்கு வந்து விட்டாலும் பிறர் கையை நம்பி வாழவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டாலும் அவர்கள் பார்க்க வேண்டியது ருண காண்டமுமாகும்.

இது தனிக்காண்டம் அல்ல. சனி, செவ்வாய், கேது ஆகியவற்றைத் தனித்தனியாக ஆராய்ந்து சொல்லும் காண்டமாகும்.

இன்றைய நாடி ஜோதிடர்கள் பலரிடம் பழைய நாடி ஏட்டுச் சுவடிகள் கிடையாது

புதிய சுவடிகளையே பழையது போல மாற்றி வைத்திருக்கும் பலர் உண்டு

நாம் சொல்லாமலே நம் கட்டைவிரல் ரேகையை வைத்து விபரங்களை கணிக்கும் முறை பலருக்குத் தெரிவதில்லை

நமது வாயைக் கிளரித்தான் விவரங்களை பெருகிறார்கள்

மேலும் நாம் ஜோதிடரை பார்க்கச் செல்லும் ஓரை நேரத்தை வைத்தும் கணித்து நம் பெயர் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்கிறார்கள்

இது தவிர நாடி ஜோதிடம் பற்றி இன்னும் எராளமான விவரங்கள் உள்ளன அவைகளை முழுமையாகவும் விவரமாகவும் வரும் பதிவுகளில் ஆராய்வோம்

No comments:

Post a Comment