Monday, July 1, 2013

வளம்தரும் ஜோதிடம்: ஞானத்தை எங்கே தேடுவது

ஞானத்தை எங்கே தேடுவது !?

கொஞ்சமாவது அறிவு இருந்தா இப்பிடி செய்வியா ?

சுத்தமாவே உனக்கெல்லாம் மூளையே கெடையாதா ? இல்ல நடிக்கிரியா?

ஏன் என் உயிரை வாங்கிரீங்க ? ஞான சூன்யங்களா !

அறிவ வைச்சு எழுதரதுக்குள்ள ஏன் பொறந்தீங்க ?

நீங்கள்லாம் பொறக்கலைன்னு எவன் அழுதான் ?

என்று ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான ஏச்சுகளை நாம் நிறைய சமயங்களில் பல இடங்களில் கேட்டிருப்போம்.

அறிவினின்றும் மேம்பட்டதாக ஞானம் இருந்த போதிலும் இரண்டையும் ஒன்றாக பாவிப்பது நமது சுபாவமாயிற்று.

சரி விடுங்கள் ,.

அறிவை தேடுவது என்றால் நிறைய புத்தகங்கள் படித்து , அனுபவத்தை வளர்த்து , போதனைகளை மனதினில் நிறைத்து , நல்லோருடன் கலந்து பழகி அறிவு நிறைந்தவனாகி விடலாம்.(இவர்களை அறிவு ஜீவி, புத்தகப் புழு) எனக் கூறுவார்கள்.

ஞானத்தை தேடுவது என்றால் ... எங்கு போய் தேடுவது ? அதற்கு ஞானவான்கள் வேண்டுமே?

இங்கு ஒரு கதை நினைவில் வருகிறது ..

ஒரு முறை தர்மராஜனின் சபையில் ஒரு விவாதம் நடைபெற்றது .

எல்லோருமே நல்லவர்கள்தான் என்கிறார் தர்மர். இல்லையில்லை எல்லோருமே தீயவர்கள்தான் என்கிறான் துரியோதனன்.

விவாதம் கண்ணனிடம் செல்ல, மாயக்கண்ணனோ, அவரவர்களின் மனநிலையைப் பொறுத்தது என்கிறான் . ஆனால் அதனை இருவருமே ஒப்புக்கொள்ளவில்லை.

(கண்ணனுக்கு தெரியாததா என இருவருக்குமே தெரியவில்லையா, இல்லை மனிதர்களுக்கு இந்த உண்மையை உணர்த்துவதற்கான கதைக்களமா).

சரி உங்களுக்கு ஒரு உபாயத்தின் மூலமாக உணர்த்துகிறேன் என்று கூறிய  ஸ்ரீ கிருஷ்ணன், முதலில் தருமரை அழைத்து , யுதிஷ்ட்ரா , சென்று ஐந்து அயோக்கியர்களை அழைத்து வா ஒரு தவறான காரியம் செய்யவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார் , வெளியில் சென்ற தருமன் சிறிது நேரம் கழித்து தனித்து வந்தான் , எங்கே அப்பா,  யாரையும் அழைத்து வரவில்லையா, தனியாக வந்துள்ளாய் என கண்ணன் வினவினான்.

அதற்கு பதிலளித்த தருமன் , இல்லை கண்ணா , வெளியே எல்லோரும் நல்லவர்களாகவே இருக்கின்றார்கள் , கொஞ்சநேரம் கழித்து முயற்சிக்கிறேன் என்று கூறினார்.

சரி விடு வருத்தம் வேண்டாம் , என்று சொல்லி தருமனை அனுப்பி வைத்தான் கண்ணன்.

தருமன் சென்றதும் பணியாளை விட்டு துரியோதனனை அழைத்து வர செய்தான் ,கண்ணன். துரியோதனன் வந்ததும் அவனிடம் கண்ணன், “துரியோதனா நான் ஒரு நல்ல காரியம் செய்யவேண்டும் என எண்ணுகிறேன் அதற்கு ஐந்து நல்லவர்கள் தேவை நீ வெளியே சென்று ஐந்து நல்லவர்களை அழைத்துவா” என சொன்னான். சரி கண்ணா , இதோ வருகிறேன் என்று சொல்லி வெளியே சென்றான் துரியோதனன் .நேரம் கடந்து சென்று கொண்டே இருந்தது , வெகு நேரம் கழித்து வந்த துரியோதனன் , கண்ணா, என்னை மன்னிக்கவேண்டும் , என்னால் உனக்கு ஐந்து நல்லவர்களை அழைத்து வர முடியவில்லை என்றான் , கண்ணன், ஏன் என்ன காரணம் என வினவ , வெளியே எல்லோரும் அயோக்கியர்களாகவே உள்ளார்கள் கண்ணா , நான் வெகு நேரம் அமர்ந்திருந்தேன், யாராவது வருவார்கள் என்று ஆனால் ஒரு உத்தமனும் என் கண்ணில் படவில்லை என்று சொல்லி புறப்பட்டான்.

தர்மன் யாரைப்பார்த்தானோ அவர்களையேதான் துரியோதனனும் பார்த்தான் ஆனால் தருமனின் பார்வையில் எல்லோருமே உத்தமர்களாகவும், அவர்களே துரியோதனனின் பார்வையில் தீயவர்களாகவும் தெரிந்தார்கள்.

காரணம் , பார்ப்பவர்களின் எண்ணப்படியே தான் எல்லாமும் தோன்றும்.

நமது கேள்விக்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

நிறைய உள்ளது.

நமக்கு ஏதோ ஒரு விஷயத்தில் சின்ன சந்தேகம் என்று வைத்துக்கொள்வோம் அதனை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடன் நமது மனதில் நமக்கு தெரிந்த நண்பர்கள், ஆசிரியர்கள் , ஜோதிடர்கள், சாமியார்கள் , ஆன்மீக நண்பர்கள் என நமது சந்தேகத்திற்கு பதில் சொல்லத்தக்கதாக உள்ளவர்களின் வரிசையாக முகங்கள் வந்து போகும்.

அவர்களையெல்லாம் உடனடியாக நாம் தேடுவதில்லை , அவர்களை ஒரு பட்டியலிட்டு பார்ப்போம் , இவருக்கு அது தெரியாது , அவருக்கு இது புரியாது, இந்த மேட்டரே இவருக்கு புரியாது , அவர் நம்மையே குழப்பி விடுவார் என்று ஒவ்வொருவராக ஒதுக்கிவிட்டு ஒன்று அல்லது இரண்டு நபரை தேர்ந்தெடுத்து விட்டு, அவரிடம் கேட்டு பார்ப்போம், அவர் என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போம் என தீர்மானிப்போம். ஆனால் இந்த விஷயத்தில் நாம் ஏற்கனவே எடுத்த முடிவினை யாரும் ஒத்து வராவிடில் நாம் முன்பு எடுத்த முடிவினையே தீர்மானமாக எடுத்துக் கொள்வோம்.

இப்படியாகத்தான் நமது சந்தேகங்கள் மற்றவர்களால் தீர்க்கப்படுகின்றன (!).

காரணம் , நம்மிலும் அதிக விஷயஞானம் அறிந்தவராக யாரையும் நமது மனம் ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை. நாம் ஒப்புக்கொள்ளும் அளவிற்கு ஒரு பதிலை தந்தாலும் கூட அதில் சில குறைகளை சொல்லி அதனை சற்று மாற்றம் செய்து ஏற்றுக்கொள்வோம், அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

இது தவறென்று சொல்ல வரவில்லை , நமது மனமும், அறிவும் தீர்மானித்த ஒன்றை மற்றவர்களிடமிருந்து பெற விரும்புவதுதான் தவறு.

இதற்கு மாற்றுக் கருத்துக்களை கேட்கவே வேண்டாமே. நமது கருத்தும் கணிப்பும்தான் சரி என்றால் அதிலேயே இருந்து விடலாமே!.

இதிலிருந்து யாரையும் ஞானம் மிக்கவராக நாம் எண்ணப்போவதில்லை, என்பது மிகத் தெளிவாகிப்போனது.

சரி, ஞானிகள் , யோகிகள் , பெரிய மேதைகள் , ஆன்மீக நெறியாளர்கள், ஆன்மீக சிந்தனையாளர்கள் போன்றோர் எழுதிய ஞான மார்க்கம் சம்பந்தமான புத்தகங்களை படிக்கலாமா என்றால் , அதனால் அறிவுதான் பெருகும் , அது மட்டுமல்ல, புதிது புதிதாக நிறைய சந்தேகங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

இப்ப இருக்கும் கேள்விக்கே பதில் இல்லை இதில் இந்த புதிய கேள்விகளுக்கு பதிலை எங்கே தேடுவது ?

அப்படியென்றால் புத்தகம் படிப்பதினால் ஞானம் கிடைக்காது, ஆன்மீக பெரியோர்களிடம் கலந்து பழகினால் ஞானம் கிடைக்குமா? என்றால் நமக்கு தெரியும் , நம்மைவிட இந்த ஆன்மீக பெரியவர்கள் ஒன்றும் முன்னாளில் உத்தமர்களாக இருந்ததில்லை , ஆகையினால் இவர்கள் கூறுவதை நமது உள்மனம் என்றைக்குமே ஏற்கப் போவதில்லை.

ஆனால் நமக்கு ஞானம் தேவை.

அப்படியென்றால் ஒன்று செய்வோம்.

நாம் ஞானம் பெற எண்ணும் ஆன்மீக பெரியோர் எப்படி இருக்கவேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ , இப்படியாக அவர்கள் ஒரு தூய நெறியுடன் தன்னை தயார் செய்திருக்கவேண்டும் என்று தீர்மானிக்கின்றோமோ , நமது மனதினில் ஒரு ஞானி , ஆன்மீக வாதி , யோகி அல்லது மதவாதி எப்படி இருப்பது இந்த பிரபஞ்சத்திற்கு நன்மையை தருவதாக அமையும் என முடிவெடுத்திருக்கின்றோமோ அப்படி அவர்கள் இல்லாததால்தானே நாம் அவர்களை ஞானியாக , யோகியாக , ஆன்மீகவாதியாக ஏன் மனிதனாகக் கூட ஏற்க முடியாமல் போனது.

நாம் அவர்களிடம் இல்லாததாக கருதும் அந்த நன்னெறியை, நல்லொழுக்கத்தை அவர்கள் தன்னுள் வளர்த்துக் கொண்டால் – அல்லது வளர்த்துக் கொள்வதனால் அவர்கள் ஞானம் பெற முடியும் – என்றும் ,

அதனை அவர்கள் களைந்து விட்டால் அவர்களை நாம் ஞானவானாக, யோகியாக, மதவாதியாக , ஆன்மீகவாதியாக ஏற்கலாம் என்றால் - இதனைக் களைந்தாலே ஞானம் வரும் என்றால் நாம் ஏன் அவர்களிடம் ஞானத்தை தேட சொல்ல வேண்டும் ? அதனைக் களைந்து ஞானியாக, யோகியாக , ஆன்மீக வாதியாக அவர்கள் மாறுவதை நாம் ஏன் விரும்ப வேண்டும் ? மாறாக , இத்தகைய குணாபேதங்கள் தான் நம்முள்ளும் ஏராளமாக காணக்கூடியதாக உள்ளதே !

இந்த மாற்றத்தை நாம் நமது மனதில் , வாழ்வில் , நடைமுறையில் கடைபிடித்து நாமே ஒரு ஞானியாக , யோகியாக , சிறந்த மதவாதியாக , ஆன்மீக வாதியாக உருவாகலாமே , அதை விடுத்து மற்றவர்களை ஏன் மாற்ற நினைக்க வேண்டும்? மாறச் சொல்லவேண்டும் .

இதிலிருந்து தெரிவது என்ன ?

ஞானம் என்பது வெளியே தேடும் ஒன்றல்ல , நம்முள் மொட்டாகி , மலராகி , பாரிஜாதமாக பூப்பது, நம்முள் உள்ள நம்மை உயர்த்த நம்முள்ளே முகிழ்ப்பது , நம்முள் சுடர்விடும் ஓர் அற்புதம், நம்முள் நிகழும் மாயாஜாலம், நம்முள் தோன்றும் தேய்தல் இல்லாத முழுநிலவு , அது ஒவ்வொரு மனிதருள்ளும்  இருக்கும் காரிருள் நீக்க உதயமாகும் ஆனந்த சூரியன் .

நான் என நான் கருதும் இந்த நான் யார் ? இந்த மாபெரும் பிரபஞ்சத்துள் எனக்கென்ன பணி ? எதன் பொருட்டு எனது இந்த பிறப்பு ? இந்த மனித பிறப்பினால் நான் செய்த அருந்தொண்டு என்ன ? பிறப்பின் நோக்கம் என்ன ? நான் எனது பிறப்பின் நோக்கை நோக்கித்தான் நகர்கின்றேனா ? அடுத்த பிறப்பு மனிதனா எனத் தெரியாத போது, இந்த மனித பிறப்பில் என் பிறப்பின் நோக்கை முழுமையாக முடிக்க என்ன செய்வது? எனக்கேன் இந்த சிந்தனை ? என்பது போன்ற தொடர் கேள்விகளால் நம்மை நாமே கடைந்திட கடைந்திட, தெளிந்த நீரோடையாய் , கொட்டும் அருவியாய் , குளிர்ந்த இளம்தென்றலாய் , இறைவனின் இதமான வருடலோடு நாம் தேடாமலே நம்முள்ளே ஞானம் உதயமாகும். 

No comments:

Post a Comment