Monday, July 1, 2013

ஜோதிட ரகசியம் - உயர் கல்வி யோகம் யாருக்கு

செல்வ செழிப்பும் வளமான வாழ்க்கையும் எல்லோருக்கும் அமைந்து விடுகிறதா? ஒரு சிலருக்கு கை நிறைய சம்பளம், கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை  அமைகிறது. ஒரு சிலரோ ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள். கல்விச் செல்வமும் இப்படித்தான். ஒரு சில மாணவர்கள் ஓரளவு படித்தாலே  நிறைய மதிப்பெண் பெறுகிறார்கள். மற்றவர்கள் எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறுவதில்லை.
மதிப்பெண்ணும் குறைகிறது. கடின உழைப்பு, விடா  முயற்சியுடன் படிக்கும் மாணவர்கள் ஒருபோதும் தோல்வி அடைவதில்லை. ஆனாலும், எந்த கல்விப் பிரிவில் நாம் சாதிப்பதற்கான வாய்ப்பு இருப்பது என்பதை  கணிப்பதில் ஜோதிட சாஸ்திரத்தின் பங்கு மகத்தானது. உயர் கல்வி பயின்று டாக்டர், இன்ஜினியர் என்று பட்டம் பெற்று சம்பாதித்து வளமான வாழ்க்கை வாழ  ஜோதிட ரீதியாக நமக்கு என்ன அம்சம் உள்ளது? நம் ஜாதக அமைப்பின்படி என்ன படிக்கலாம்? என்பதை ஜோதிட சாஸ்திரம் தெளிவாக கூறுகிறது.

கல்வி யோகம் தரும் கிரகங்கள் : கல்வி, வித்தைக்கு அடித்தளம் அமைக்கும் கிரகம், வித்யாகாரகன் என்று அழைக்கப்படும் புதன் கிரகமாகும். ஜாதகத்தில்  புதன் ஏதாவது ஒரு விதத்தில் பலம் பெறுவது அவசியம். பலம் என்பது லக்னத்துக்கு 2,4,5,7,9,10,11 ஆகிய இடங்களில் நல்ல கிரக சேர்க்கை பெற்று  இருப்பதாகும். லக்னத்தில் இருப்பது மிகவும் சிறப்பு. ஆட்சி, உச்சம் பெறுவது மேலும் பலம். உயர்நிலை கல்வி வரை லக்னத்துக்கு நான்காம் இடமான கல்வி  ஸ்தானத்தை கொண்டும், பட்டப்படிப்பு, பட்ட மேல் படிப்புக்கு பாக்ய ஸ்தானம் எனும் ஒன்பதாம் இடத்தை கொண்டும் அறிந்து கொள்ளலாம். இவை தவிர  லக்னம், 2, 5 ஆகிய ஸ்தானங்களும் பலம் பெறுவது அவசியம்.

மருத்துவ கிரகம் கேது: மருத்துவம் படிக்கவும், மருத்துவம் தொடர்பான தொழில்கள் செய்யவும் மருத்துவ கிரகமான கேது பகவான் அருள் வேண்டும். எண்  கணித அமைப்பில் பிறந்த தேதி அல்லது கூட்டு எண் 1,2,7,9 என அமைவது சிறப்பு. லக்னத்துக்கு 4,9,10 ஆகிய இடங்களில் மருத்துவ கிரகமான கேது  இருப்பது நல்ல யோகம். கேதுவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பு இருப்பது முதல்தர யோகம். அஸ்வினி, மகம், மூலம்,  திருவாதிரை, சுவாதி, சதயம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய  நட்சத்திரங்களில் பிறப்பது மருத்துவ யோகத்துக்கு வாய்ப்பாகும்.

இன்ஜினியர் யோக நட்சத்திரங்கள்: இன்ஜினியர் ஆவதற்கு பிரகாசமான தேதி, கூட்டு எண்கள் 5,14,23, 8,17,26, 9,18,27 ஆகியவை. மிருகசீரிஷம், சித்திரை,  அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, பரணி, பூரம், பூராடம் ஆகியவை பொறியியல் படிக்க சாதகமான நட்சத்திரங்கள்.  ஜாதகத்தில் சனி, புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தோ, பார்வை பெற்றோ இருப்பது நல்லது. மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம்,  மகரம், கும்பம், ராசி மற்றும் லக்னக்காரர்கள் பி.ஆர்க். பாடப்பிரிவில் சேரும் யோகம் உண்டு.

சந்திரன் பலத்தால் கணக்கு: கணக்கு சம்பந்தமான படிப்புகள், ஆடிட்டிங் படிப்பு, பி.காம், எம்.காம், அக்கவுன்டன்சி போன்றவற்றில் தேர்ச்சி பெற லக்னம்,  லக்னாதிபதி சந்திரன் ஆகியவை பலம் பெறவேண்டும். அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி,  அஸ்தம், திருவோணம் ஆகியவை சாதகமானவை. பிறந்த தேதி மற்றும் கூட்டு எண்: 5,14,23, 4,13,22, 6,15,24, 1,10,19,28 ஆகியவை யோகமானவை.  சூரியன், புதன் சேர்ந்து லக்னம், 2,4,9,10 ஆகிய இடங்களில் இருப்பது சிறப்பு.

செவ்வாய் பார்த்தால் வக்கீல்: சட்ட படிப்புக்கு அஸ்திவாரமே லக்னம், லக்னாதிபதி, 2-ம் இடம், 2-ம் அதிபதி, இந்த ஸ்தானம் பலமாக இருப்பது அவசியம்.  வாக்குகாரகன் செவ்வாய் லக்னத்தையோ, ராசியையோ பார்ப்பது நல்ல அம்சமாகும், இரண்டாம் இடத்தை பார்ப்பது சிறப்பாகும். பிறந்ததேதி, கூட்டு எண்  1,10,19,28, 3,12,21,30, 8,17,26, 9,18,27 ஆகியவை சாதகமானவை. கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம்,  உத்திரட்டாதி, மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் சிறப்பானவை. புதன், குரு லக்னத்தையும் வாக்கு ஸ்தானத்தையும் பார்ப்பது  அவசியமாகும். அதன் காரணமாக வாதத் திறமை 
மேம்படும்.

சினிமா, ஐஏஎஸ், கேட்டரிங் துறைகளில் ஜொலிப்பது எப்படி?

சினிமா டைரக்டர், கேமராமேன், எடிட்டிங், சவுண்ட் இன்ஜினியர் ஆகிய துறைக்கு செல்ல பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம்,  திருவாதிரை, சுவாதி, சதயம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் ஏற்றவர்கள். பிறந்த தேதி, கூட்டு எண்  1,10,19,28, 4,13,22,31, 6,15,24, 2,11,20,29 ஆகியவை சாதகமானது. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அரசு சம்பந்தமான அதிகார பதவியில் அமர்வதற்கு சூரியன்,  சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களின் பலம் அவசியம் தேவை. 

1,10,19,28, 2,11,20,29, 4,13,22,31, 8,17,26, 9,18,27 ஆகிய தேதி கூட்டு எண்ணில் பிறப்பது நல்ல யோகம். மேஷ லக்னம் மேஷ ராசி, மிதுன லக்னம், மிதுன  ராசி, கடக லக்னம், கடக ராசி, சிம்ம லக்னம், சிம்ம ராசி, விருச்சிக லக்னம், விருச்சிக ராசி ஆகியவை முதல்தர யோகம் உள்ளவை. சமையல் கலை  படிப்பதற்கு சூரியன், சந்திரன், செவ்வாய் சாதகமாக இருப்பது அவசியம். 1,10,19,28, 2,11,20,29, 9,18,27, 4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறப்பது சாதகமானது.  கார்த்திகை, உத்திரம் உத்திராடம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள்  பிரகாசமானவை. லக்னத்துக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் இருப்பது, பார்ப்பது நல்ல அம்சம்.

1,10,19,28, 4,13,22,31, 5,14,23, 3,12,21, 8,17,26 ஆகிய தேதி கூட்டு எண்களில் பிறந்தவர்கள் ஆசிரிய பணி செய்யும் யோகம் உள்ளது. புனர்பூசம், விசாகம்,  பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம் போன்றவை சாதகமானவை. புதன்  லக்னாதிபதியுடன் சேர்ந்தால் கணக்கு ஆசிரியர் ஆகலாம். புதன் சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகலாம். புதன் செவ்வாய் சம்பந்தம்  இருந்தால் கம்ப்யூட்டர் ஆசிரியராகும் யோகம் உண்டு. சூரியன், சந்திரன் இருந்தால் கல்லூரி பேராசிரியர், எழுத்தாளர் ஆகலாம். சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன்  - குரு இருப்பது ‘வித்யா கெஜகேசரி யோகம்’ எனப்படும். இது இருந்தால் நாம் விரும்புகிற உயர்கல்வியை பெற்று அதில் சாதிக்க முடியும்.

கம்ப்யூட்டர் இன்ஜினியராக்கும் ராகு: கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவதற்கு லக்னாதிபதி பலம் மிகவும் அவசியம். பிறந்த தேதி - கூட்டு எண் ஆகியவை 1,10,19,28,  2,11,20,29, 5,14,23, 6,15,24 என இருப்பது சாதகமானதாகும். லக்னம், 4,9,10 ஆகிய இடங்களில் ராகு இருப்பது நலம் தரும். அஸ்வினி, மகம், மூலம்,  திருவாதிரை, சுவாதி, சதயம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சாதகமானவை. நான்காம் அதிபதியுடன்  புதன் - ராகு சேர்க்கை பெறுவது நல்ல அம்சமாகும். புதன் லக்னம், 4,5,7,9,10 ஆகிய இடங்களில் இருப்பது மிகப்பெரிய பலமாகும்.

தோல்விக்கு காரணமும் கிரகங்களே

கல்வியில் தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புக்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. நீச்ச கிரக திசாபுக்திகளும்,  6, 8, 12 ஆகிய கிரக திசை புக்திகளும், பலம் குறைந்த நீச்ச கிரக சேர்க்கை பெற்ற ராகு-கேது திசைகளும் தடைகள், தோல்விகளை ஏற்படுத்தும். புதன்  நீச்சமாகியோ, 6, 8, 12ல் மறைந்தோ திசை வந்தால் கல்வியில் தடை ஏற்படுகிறது. படிப்பில் நாட்டம் செல்லாமல் தேவையற்ற குழப்பங்கள், மன சஞ்சலம்  உண்டாகும். படிக்கும் காலத்தில் 6, 8, 12 ஆகிய கிரக திசைகள் வந்தால் மறதி அதிகரிக்கும். எட்டாம் அதிபதி நான்காம் அதிபதியுடனும், சனி,  செவ்வாயுடனும் சேர்க்கை பெற்று திசை வந்தால் திடீர் தடைகள் ஏற்படலாம். 

லக்னம், 5, 7, 8-ம் இடங்களில் சந்திரன் - சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் திசாபுக்திகளால் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு கவனம் தடுமாறும். சுக  ஸ்தானாதிபதியாகிய நான்காம் அதிபதியுடன் நீச்ச கிரக சேர்க்கை பெற்ற திசாபுக்திகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கல்வி தடை ஏற்படலாம். சுக்கிரன்,  செவ்வாய் சேர்க்கை, நீச்ச கிரக திசாபுக்திகள், ராகு-கேதுக்கள் ராசிக்கு 2, 4, 7, 8, 10 போன்ற ஸ்தானங்களில் வருவது, சனிப்பெயர்ச்சி காரணமாக 4ல் சனி,  ஏழரை சனி, அஷ்டமச்சனி நடப்பது ஆகியவையும் கல்விக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. இத்தகைய கிரக நிலைகள் அமையும்போது, மேலும் அதிக  சிரமப்பட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

வழிபாடு, பரிகாரங்கள் 

செங்கல்பட்டு அருகில் உள்ள செட்டிபுண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவ தலங்கள்.  இங்கு சென்று வழிபட்டால் கல்வித் தடைகள் நீங்கும். புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேரும் தினத்தில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி  வழிபடலாம். திருக்கடையூர் அபிராமி அம்மனை தரிசித்து பிரார்த்திக்கலாம். தினமும் காலையில் விநாயகர் அகவல் படித்தால், நினைவாற்றல் அதிகரிக்கும்.  ஞானத்தையும், பல்வேறு கலை, கல்விகளில் தேர்ச்சியையும், அறிவாற்றலையும் அருளும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று வணங்கலாம்.  திருவொற்றியூரில் ஞான சக்தியாக அருளும் வடிவுடையம்மனை பவுர்ணமி அன்று தரிசித்து வழிபடலாம். கல்வி, வித்தை அருளும் புதன் பகவானை  வணங்கலாம். கல்விக் கடவுளாம் சரஸ்வதியை வணங்குவது நல்ல பலன் தரும்.

ராகு, கேது அருளால் டாக்டர் ஆகலாம்

நம் ஜாதக அமைப்பில் எந்த கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன என்பதைக் கொண்டு, நமக்கு எந்த உயர்கல்வி அமையும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

சூரியன்: நிர்வாக படிப்புகள், எம்பிஏ, தத்துவ பாடங்கள்

சந்திரன்: மருத்துவம், கெமிக்கல், தண்ணீர், கப்பல் சார்ந்த படிப்புகள்

செவ்வாய்: அறுவை சிகிச்சை, விவசாய படிப்பு, சிவில் இன்ஜினியரிங்

புதன்: கணக்கு, வங்கி, ஆடிட்டர், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்

குரு: இலக்கியம், வானியல், சட்டம், ஆசிரியர்

சனி: வரலாறு, கனிமங்கள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

ராகு: சினிமா, மீடியா, சித்தா ஆயுர்வேத மருத்துவம், டெக்னிக்கல் துறை

கேது: மருத்துவம், சாத்திர படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள்

No comments:

Post a Comment