நமக்குள் எப்போதும் ஒரு கேள்வி எழுவதுண்டு
நமது மனம் நம்மை ஏமாற்றுகிறதா ? எனும் கேள்விதான் அது .
நாம் பிறந்தவுடன் நம்மை ஆட்கொள்ள, ஆட்டுவிக்க நம்மோடு பிறந்த மனம், நம்மை நன்கு அறிந்து வைத்துள்ள நம் மனம் நம்மை ஏமாற்றுமா? ஏமாற்றுகிறதா ? நமது மனம் நம்மையே ஏமாற்ற வேண்டிய காரணமும், அவசியமும் என்ன? நாம் ஏமாந்துபோவதால் நமது மனதிற்கு என்ன லாபம் ?
பார்க்கலாமா ?
முதலில் மனம் என்பது என்னவென்று தெரிந்துகொள்வோம்.
நாம் பிறந்த நொடிமுதலாக நாம் அறிந்துகொள்ளும் ஒவ்வொரு செய்தியும், நிகழ்வும், அசைவும் நம்முள் பதிவாகும் இடத்தையே நாம் மனம் என்று குறிப்பிடுகின்றோம்.
அதாவது நாம் பிறந்த நொடிமுதல் வாழ்நாள் முழுவதும் நமக்கு தெரிந்த அத்தனை விபரங்களையும், மனம் எனும் இடத்தில் பதிவிட்டு நமக்கு எப்போது எவ்விஷயத்தில் சந்தேகம் எழுகிறதோ? அப்போது அது தொடர்பான தகவல்களை அந்த தகவல் நமது மனதினில் எங்கிருக்கின்றதோ அங்கிருந்து அதனை எடுத்து அவ்வப்போது நாம் கையாளுகின்றோம். இது அரைநொடிக்கும் (ஒரு கண்சிமிட்டலுக்கும்) குறைவான நேரத்தில் நடைபெறும் நிகழ்ச்சி.
இந்த மாதிரியான விபரப்பதிவுகள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான பதிவாக இருக்கும், அதனால் நபருக்கு நபர் இந்த விபரப்பதிவுகள் மாறுபடும்.
காரணம் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவிதமான சூழலில் பிறந்து , ஒவ்வொருவிதமான கட்டுக்கோப்பில் வளர்க்கப்படுகின்றோம். அவரவர் பிறந்த சுழலுக்கேற்பவும் , அவரவர் வளர்ந்த சுழலுக்கேற்பவும் மனம் தனது பதிவினை வைத்திருப்பதால் ஒரே மாதிரியான விபரப் பதிவுகளைக் கொண்ட மனிதர்களை காண்பதரிது.
குழந்தையிலிருந்தே ஒரே இடத்தில் வளர்க்கப்படும் குழந்தைகளிடம் கூட ஒரே விதமான விபரப் பதிவுகள் இருப்பதில்லை. காரணம் குழந்தைகளோ, பெரியவர்களோ அவர்கள் மிக ஆர்வமாக உள்வாங்கும் செய்திகளோ, நிகழ்வுகளோதான் நமது மனமெனும் ஹாட்டிஸ்கில் பதிவாகின்றன .
சாதாரண நிகழ்வுகளை உள்வாங்காமல் ராம் மில் வைத்திருந்து பின்னர் கம்ப்யூட்டர் அதனை அழித்து விடுகின்றதைப்போல மனதிற்கு வெளியே வைத்து இருந்து பின் மறந்து விடுகின்றோம்.
ஆக மனம் என்பது நாம் தெரிந்து வைத்துள்ள விஷயங்கள் அடங்கி இருக்கும் தகவல் பெட்டி அவ்வளவே.
ஆனால் அதன் பிடிக்குள் நாம் சிக்கிக் கொள்ளும்போதுதான் நமது பாடு திண்டாட்டமாகி விடுகின்றது – அதன் பிடிக்குள் நாம் எப்படி சிக்குகின்றோம்?
பார்ப்போம்.
சரி இந்த மனம் நம்மை எப்படி ஏமாறச் செய்கிறது ?
நாம் தெரிந்து வைத்துள்ள அல்லது நமக்கு தெரியாத விஷயங்கள் எதுவாயினும் அதனை, அதன் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள நம்மிடம் விசாரித்தறிந்து கொள்ள மற்றவர்கள் அணுகும்போது நாம் அதனை அவர்களுக்கு விவரிக்கும்போது அல்லது நாமே நமக்கென சில உபயோகமான காரியங்களை துவங்கவோ , மாற்றியமைக்கவோ முயலும்போது நமக்கு அந்த அல்லது அது தொடர்பான விபரங்கள் தெரிந்தோ தெரியாமலோ இருக்குமானால்,
நாம் துவங்க எண்ணும் காரியத்தில் முன்பே ஈடுபட்டு அதில் வெற்றி கண்டவர்களை அணுகி விசாரிக்காமல் , நமக்கு தெரிந்துள்ள அரைகுறை தகவல்களின் மேல் கொண்டுள்ள அதீதமான நம்பிக்கையில் நாம் துவங்க எண்ணுகின்ற காரியத்தை துவங்கி விடுவோம்.
அந்த காரியம் நல்ல முறையில் வெற்றி பெற்றால் நமக்கு நாமே கொண்டாடிக் கொள்வோம்.
தோல்வியடைந்தால் நான் சரியாத்தான் யோசிச்சி செஞ்சேன், அது வேற ஒண்ணு நடந்துடிச்சி. அப்பவே சொன்னாங்க அவர கேக்கலாம் , இவர கேக்கலாம்னு இந்த பாழாப்போன மனசு அத எல்லாம் கேக்கல ன்னு மனசின்மேல ஒரு பழியப்போட்டு தப்பிச்சுக்குவோம் .
ஆனால் நாம் துவங்கும் முன்பே உள்மனம் “உனக்கு தெரியாத விஷயத்தில் இறங்கி வீணாகவேண்டாம் , யாரையாவது கேக்கலா மேன்னு” ஈனஸ்வரத்தில் முனகினது நமக்கு கேக்கவே இல்லை என்பதை விட அதனைக் கேட்க நாம் தயாரில்லை.
ஏனெனில் எப்போதுமே யாரையாவது குற்றம் சொல்வதோ , யார்மேலாவது பழி போடுவது என்பது நாம் நாமே கற்றுக் கொண்ட கலையாகும்.
நாம் சரியாக பார்த்து நடக்காமல் காலை கல்லில் இடித்துக் கொள்வோம் அதனை சொல்லாமல் கல்லு இடிச்சிடிச்சி என்போம் இப்படி நிறைய இருக்கு.
தெரியாம செஞ்சிட்டேன்னு எதையும் ஒப்புக்கொள்ளும் தைரியம் நம்மிடம் ரொம்பவே குறைவாகிப் போனது.
இப்படியாக பிறர்மேல் பழிபோட்டே பழகியதால்தான் நாம் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் “மனம் ஒரு குரங்கு , நம்ப நினைப்பே நம்மல ஏமாத்திடுச்சி” என்றெல்லாம் சொல்லி சொல்லி வருந்துகின்றோம் .
உண்மை அதுவல்ல .
நாம் திட்டமிட்டது நமது முழு ஆலோசனையின் முடிவாகும்.
அனுபவப்பட்டவர்களை அணுகாமல் அவர்களின் ஆலோசனையைப் பெறாமல் , சரியான வழிகாட்டலின்றி துவங்கியது தவறல்லவா ?
நம்மிடம் நிறைய வசதி இருக்கின்றது என்பதற்காக கொஞ்சம் விவசாய நிலம் வாங்கி நாமே விவசாயம் செய்ய துவங்கினால் சரியாகுமா ?
அல்லது நமக்கு தெரிந்தவர் ஒரு தொழிலில் நிறைய லாபம் பார்க்கிறார் என்பதற்காக முற்றிலும் தெரியாத அந்த தொழிலை நாம் துவங்கலாமா ?
எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக ஒரு காரியம் நல்ல காரியமாகா.
பள்ளிக்கூடங்களை விட எண்ணிக்கையில் மதுபான கடைகள் அதிகம் என்பதற்காக கல்வியைவிட மது அருந்துதல் சிறந்ததாகிப் போகுமா? என்ன ?
நமது அறிவையும் , தேவைப்பட்டால் மற்றவர்களின் அறிவுரையையும் கேட்டு நாம் ஒரு காரியத்தை துவங்குவோமானால் அது நிச்சயம் நல்ல பலனைத் தரும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் நாம் சில வேளைகளில் பிடிவாதமாக யார் சொல்லையும் கேட்காமல் நாமே சில முடிவுகளை எடுத்து பின் அதன் தொடர்பான சங்கடங்களையும் அடைகின்றோம்.
நாம் பெற்றுள்ள அனுபவத்திற்கும் , அறிவிற்கும் உரிய அளவில் உள்ள நமது முயற்சிகள் அனைத்தும் நமக்கு வெற்றியை தரும் .
அதற்கு மேலான விஷயங்களில் நாம் ஆர்வப்ப்படும்போது அதன் தொடர்புள்ள மற்றவர்களை நாடுவது தவறோ , கேவலமோ அல்ல.
பல நிறுவனங்களில் அட்வைசர் என ஒன்றிரண்டு அதிகாரிகளை நியமிக்கின்றார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்திருந்தால் தேவையில்லாமல் அதிக சம்பளம் தந்து பணிக்கு சிலரை அமர்த்தவேண்டிய அவசியமென்ன ?
எனக்கே எல்லாம் தெரியும் , இதற்க்கு போய் ஒரு அட்வைசர் , அவருக்கு எல்லோரையும் விட அதிகமான சம்பளம் போ போ அதெல்லாம் வேண்டாம் என்று விட்டுவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்.
கோகோ கோலா , ஃபாண்டா போன்ற தொழிலகங்களில் அதன் ருசியை ஒரே மாதிரி இருக்கின்றதா என பார்க்கவே ஒரு நபரை பணிக்கு வைத்திருப்பதாக சொல்வார்கள். காரணம் நாம் செய்யும் அல்லது செய்ய நினைக்கும் செயலில் நாம் வெற்றி பெறவேண்டும்
ஒரு விஷயம் அல்லது ஒரு காரியத்தில் நமக்கு ஒரு பார்வையும் , மற்றவர்களுக்கு வேறு பார்வையும் இருக்கும் நாம் நமக்கு அதுபற்றிய விபரங்கள் எந்த அளவுக்கு தெரியுமோ அவ்வளவுதான் அதனைப்பற்றிய தெளிவும், முடிவும் இருக்கும் – அதன் விபரங்கள் முழுமையாக அறிந்துள்ளவர்கள் நம்மைவிடவும் கூடுதலாக விபரங்கள் அறிந்திருப்பார்கள். அதனை பெறுவதில் என்ன தவறு இருக்கிறது?
மனம் நம்மை ஏமாற்றுவதில்லை , மனம் ஏமாற்றுவதாக சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
என்னைவிட இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு என்ன தெரியும் என எண்ணும்போதுதான் நாம், நம்மை தோல்வியின் கைகளில் ஒப்புக் கொடுக்கின்றோம்.
என்னைவிடவும் எல்லா விஷயங்களிலும் முழு விபரமும் அறிந்தவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள் என எண்ணும்போதே நாம் வெற்றியின் கைகளை பற்றிக்கொண்டுள்ளோம் என்பதை விட வெற்றி நம் கைகளை பற்றிக்கொண்டது என்பதுதான் உண்மை.
நமது மனம் ஒரு விசித்திரமான கருவியாகும். நாம் எதனை செய்ய எண்ணினாலும் ஒருமுறை உரக்க சொல்லும் பின் முனக ஆரம்பிக்கும். நாம் அதனை செவிகொடுத்து கேட்கவேண்டும்.
நாம் சில வேளைகளில் மனதின் வழியிலும் , பல வேளைகளில் மனதினை நம் வழியிலும் செலுத்த வேண்டும்.
மனதினை மிகசரியாக கையாளுவதில்தான் நமது எல்லாவகையான வெற்றிகளும் இருக்கின்றது .
ஆன்மீகமாக இருந்தாலும் , லௌகீகமாக இருந்தாலும் அங்கே மனம் என்பதே பிரதானமாக இடம் வகிக்கின்றது . அதனால்தான் மனதினை தன் வயப்படுத்துதல் முக்கியமாக இருக்கின்றது .
மனம் என்றுமே நம்மை ஏமாற்றுவதில்லை , நாம்தான் நம்மையே ஏமாற்றிக் கொள்கின்றோம். காரணம் தோல்வி கண்டு விட்டால் எதன் மீதாவது பழிபோட வேண்டும் இல்லையா அதனால், அப்போது மனம் அங்கே நம்மிடம் சிக்கிக் கொள்கின்றது . அவ்வளவுதான் .
நமக்கு தெரியாத காரியங்களை செய்யத்துவங்கும்போது முன் அனுபவம் உள்ளவர்களை கலந்து ஆலோசித்து துவங்குவோம் , தனக்கு தெரியாத விபரங்களை மற்றவர்கள் கேட்கும்போது பகிர்ந்து கொள்வோம் - வெற்றியை நமதாக்குவோம்.
வாழ்த்துகள்.
No comments:
Post a Comment